ஆண்டுதோறும் ராமநவமி தினத்தில் அயோத்தி ராமர் கோயில் பாலராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அதிநவீன அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, 5.8 சென்டிமீட்டர் சூரிய ஒளிக்கற்றை பாலராமர் சிலையின் நெற்றியில் விழும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை அடைய, கோயிலில் ஒரு சிறப்பு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 விஞ்ஞானிகள் அடங்கிய குழு கோயிலில் பார்வையிட்டு அந்தக் கருவியை வடிவமைத்தனர்.
நேற்று பகல் 12.16 மணிக்கு இந்த சூரிய ஒளி விழும் நிகழ்வானது 3 முதல் மூன்றரை நிமிடங்கள் வரை நீடித்தது. சூரிய ஒளியானது சிலையின் நெற்றியில் சரியாக விழுகிறதா என்பதைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் குழு கோயிலில் குழுமியிருந்தனர். கண்ணாடிகள், லென்ஸ்களின் உதவியுடன் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சூரிய திலக் பொறியியல் முறை என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரூர்க்கியைச் சேர்ந்த மத்திய கட்டிடவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டை (சிபிஆர்ஐ) சேர்ந்த விஞ்ஞானியும், இயக்குநருமான குமார் ராமசர்லா கூறியதாவது:
இந்தக் கருவி ஆப்டோ-மெக்கானிக்கல் வகையைச் சார்ந்தது. இந்த ஆப்டோ-மெக்கானிக்கல் அமைப்பானது 4 கண்ணாடிகள் மற்றும் நான்கு லென்ஸ்களைக் கொண்டது. திருப்பும் வகையிலும், சாய்வு முறையிலும் இந்த கருவி அமைந்துள்ளது.
மேலும் இந்தக் கண்ணாடிகள், லென்ஸ்கள் குழாய் அமைப்புகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கருவியானது கோயிலின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டு சூரிய ஒளியைப் பெற்று கண்ணாடி, லென்ஸ்கள் மூலம் கீழ்தளத்தின் கர்ப்பக்கிரகத்திலுள்ள பாலராமர் சிலையின் நெற்றியில் விழுமாறு திருப்பி அனுப்பப்படுகிறது. மேல் தளத்தில் உள்ள கருவியின் மேல்பகுதியானது சூரிய ஒளியின் வெப்பம், அலையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து சிலையின் நெற்றியில் விழும்படி இந்தக் கருவி செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூர்க்கியின் சிபிஆர்ஐ, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் (ஐஐஏபி) ஆகிய அமைப்புகளின் விஞ்ஞானிகள் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர். பெங்களூரு ஐஐஏபி விஞ்ஞானிகள், இதற்காக சிறப்பு கியர் பெட்டியை உருவாக்கி கண்ணாடி, லென்ஸ்கள் சுழல்வதற்காகவும், சாய்வதற்காகவும் வழிமுறையைக் கண்டறிந்துள்ளனர்.