அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் சுமார் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தேர்தல் அடுக்கடுக்காக பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. இப்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவார் என்பது ஏறத்தாழ உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புடன் ஜோ பைடன் நடத்திய நேரடி விவாதம் உள்ளிட்டவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஜோ பைடனின் தடுமாற்றம் வெளிப்படையாக அம்பலமாகி விட்டது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்று ஜனநாயக கட்சியினரே நம்பும் நிலை ஏற்பட்டு விட்டது.
எப்படியும் நான் தேர்தலில் போட்டியிட்டே தீருவேன். போட்டியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று ஜோ பைடன் திரும்பத் திரும்ப கூறி வந்தார். ஆனால் ஜனநாயக கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுத்தனர். தேசத்தின் நலனையும், ஜனநாயக கட்சியின் நலனையும் கருதி போட்டியிலிருந்து விலகி விடுங்கள் என்று ஜோ பைடனை வற்புறுத்தினார்கள். இறுதியில் வேறு வழியில்லாமல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்தார்.
இதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் போட்டியிடுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது துணை அதிபராக உள்ள அவர், ஓரளவு நிர்வாக அனுபவம் பெற்றுள்ளார். எனினும், அதிபர் பதவியை வெற்றிகரமாக நிர்வகிக்க மேலும் பல திறமைகள் தேவைப்படுகின்றன. இந்த திறமைகள் கமலா ஹாரீஸிடம் எந்த அளவு உள்ளன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
கமலா ஹாரீஸ் தாய் வழியில் பாரதத்தைச் சேர்ந்தவர். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தந்தை வழியில் ஜமைக்காவைச் சேர்ந்தவர். இதுவரை எந்த பெண்ணும் அமெரிக்க அதிபர் ஆனதில்லை. கமலா ஹாரீஸுக்கு 2 முட்டுக்கட்டைகள் உள்ளன. ஒன்று, அவர் பெண் என்பதாகும். அடுத்தது, அவர் கருப்பினப் பெண் என்பதாகும். இந்த 2 சவால்களையும் அவர் எதிர்கொள்வது எளிதல்ல. கமலா ஹாரீஸின் நிறத்தையும், தோற்றத்தையும் விமர்சித்து புறப்படுகின்ற கருத்துகள் தரம் வாய்ந்தவையாக இல்லை. இருப்பினும், அரசியல் களத்தில் இவற்றை தவிர்க்க முடியாது என்றே பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.
ஜோ பைடனின் ஆட்சி காலம் மிகவும் சிறப்பானது என்று கூற முடியாது. ஜோ பைடன் ஆட்சி காலத்தில் நடைபெற்ற குளறுபடிகளுக்கும் கமலா ஹாரீஸ் தான் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், டொனால்ட் டிரம்ப் கொலை முயற்சியில் நூலிழையில் தப்பி விட்டதும் அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்றை வீச வைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும், துணை அதிபர் வேட்பாளராக வான்சும் களம் இறங்கியுள்ளனர். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் துணை அதிபர் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இனிமேல் தான் அவர் அறிவிக்கப்படுவார்.
அமெரிக்க வாக்காளர்களைப் பொறுத்தவரை அதிபர் வேட்பாளரையும் துணை வேட்பாளரையும் ஒருங்கிணைத்துப் பார்த்து முடிவெடுப்பதுதான் வழக்கமாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் ஈர்ப்புத் தன்மையும், முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் தகவல் பரிமாற்றத் திறனும் ஒருங்கே கொண்டிருந்தால் மட்டுமே கமலா ஹாரீஸ் வெற்றி மகுடத்தை அணிய முடியும். கமலா ஹாரீஸ் வெற்றி பெற்றால் அது அதிசயமாகவே இருக்கும் என்ற அபிப்ராயம் பரவலாக மேலோங்கி உள்ளது.
கட்டுரையாளர்: தலைவர்,
கலாச்சார ஆய்வுக்கான சர்வதேச மையம்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி