அமித் ஷா மார்பிங் வீடியோ விவகாரம் – 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் 23-ம் தேதி ஹைதராபாத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, அவர் பேசிய பேச்சுகளை ஏஐ தொழில்நுட்பத்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களுக்கு எதிராக பேசியதாக கூறி தெலங்கானாவில் சில மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இதனை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதனை தொடர்ந்து, டெல்லி போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த ஹைதராபாத் வந்தனர். பின்னர் இவர்கள் ஹைதராபாத் காந்தி பவனுக்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும், ரேவந்த் ரெட்டிக்கும் நோட்டீஸ் அனுப்பட்டது. இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி டெல்லியில் ரேவந்த் ரெட்டியின் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரிக்க டெல்லியிலிருந்து மேலும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஹைதராபாத் வந்தார். அவர் தலைமையில் ஹைதராபாத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதே சமயத்தில் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தெலங்கானா காங்கிரஸ் சமூக வலைதள குழுவை சேர்ந்த வம்சி கிருஷ்ணா, சதீஷ், நவீன், ஆஸ்மா தஸ்லீம், கீதா ஆகிய 5 பேரை கைது செய்து, நேற்று நாம்பல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைவருக்கும் தலாரூ.10 ஆயிரம் அபராதம் விதித் ததோடு, மாலை நிபந்தனை ஜாமீனும் வழங்கியது.