விடுதலைப் புரட்சியாளர் ராம் பிரசாத் பிஸ்மில்லின் தாய் மூல்மதி. மகனைக் காண கோரக்பூர் சிறைக்கு வருகிறார். தேதி 1927 டிசம்பர் 18. பிஸ்மில்லின் கடைசி நாள் அது. ஆம்! மறுநாள் காலை தூக்கிலிடப்படுகிறார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார் பிஸ்மில். தாயாரைக் கண்டதும் கண்ணீர் பெருகுகிறது. அதைக் கண்ட தாய் சொல்கிறார்: “உன்னை வீரன் என்றல்லவா நினைத்தேன்? உன் பெயரைக் கேட்டாலே பிரிட்டிஷ் அரசு நடுங்குமென்று நினைத்திருந்தேனே… நீயா மரணத்தைக் கண்டு அஞ்சுகிறாய்?” மகனின் பதிலைப் பாருங்கள்: “இது பயமில்லை தாயே! ஆனந்தக் கண்ணீர். இப்பேர்ப்பட்ட வீரத் தாயை நினைத்து மகிழ்ச்சியில் வரும் கண்ணீர்”.
‘குடும்பம் ஒரு கோவில்’, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் பெரியோர்கள் வலியுறுத்துகிறார்களே என்ன காரணம்? நல்ல குடும்பத்திலிருந்து தான் நல்ல சமுதாயம் தோன்றும். நல்ல சமுதாயமே நல்ல தேசத்தை உருவாக்கும் அவ்வளவுதான்! ஆக, நல்ல தேசத்தை உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோர் கையில் தான் உள்ளது. குறிப்பாக அன்னையின் கையில்.
அன்னத்துடன் நல்ல பழக்க வழக்கங்களையும் நற்பண்புகளையும், தேசபக்தி, தெய்வ பக்தியையும் ஊட்டி வளர்ப்பவள் அன்னை… ஜீஜாபாய் போல் இக்கட்டான காலகட்டத்தில் தேசத்திற்கு வீர சிவாஜியின் தன்னிகரற்ற தலைமை கிடைத்ததே, அது வேறு எப்படி?
தங்கள் பிள்ளைகளை நல்ல குடிமக்களாக்கும் பொறுப்பை திறம்பட நிறைவேற்றிய அன்னையர் பலர் குந்தி போல; சறுக்கிய அன்னையர் சிலர் … காந்தாரி போல். குந்தி தான் பெற்ற மூவருடன், தான் பெறாத இருவரையும் அரவணைத்து பஞ்ச பாண்டவர்களை தர்மத்தின் பாதையில் நடத்திச் சென்றாள். எந்த ஒரு இன்னலிலும் பாண்டவர்கள் தர்ம நெறி தவறியதில்லை. கண்டிக்க வேண்டிய இடத்தில் பிள்ளைகளைக் கண்டிக்காமல் கண்ணைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த காந்தாரியால் குடும்பம் மட்டுமல்ல, குலமே அழிந்தது. பிள்ளைகள் ஊதாரிகளாக, ஊழல்வாதிகளாக இருந்தாலும் கண்ணியம் தவறி நடந்துகொண்டாலும் தட்டிக் கேட்கத் தவறிய காந்தாரி போன்ற தாய்மார்கள் சிலர் இன்றும் உள்ளனர்.
ஆனால் காமராஜரைப் பெற்ற சிவகாமியம்மாளின் சீரிய வளர்ப்பு தானே அப்பழுக்கற்ற பெருந்தலைவர், கிங்மேக்கர் காமராஜரை நமக்குத் தந்தது? சிறிதும் சுயநலமில்லாத, எந்த எதிர்பார்ப்புமில்லாத, மக்கள் நலன் ஒன்றே லட்சியமென்ற எண்ணத்துடன் அவர் தீட்டிய திட்டங்களால் தான் பலன் அடைந்தது தமிழகம். ‘என் மகனை நாட்டுக்குத் தந்துவிட்டேன்’ என்றார் சிவகாமியம்மாள். எவ்வளவு உயர்ந்தவர்!
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வைத்ய சுப்பிரமணியன் தினமணி கட்டுரையில் தாயை நினைவுகூர்கையில் தனது தாயார் சனாதன தர்மத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். கணவர் நிறுவிய கல்லூரி ஊழியர்களின் ஊதியத்துக்காக ஆரம்ப காலத்தில் தன் நகைகளைக் கழற்றித் தந்தவராம். தன் கணவர் தொடங்கிய கல்விப் பணி தடங்க
லில்லாமல் நடக்கவேண்டுமென்ற உறுதியை பிள்ளைகளுக்கும் விட்டுச் சென்றதால் தானே சாஸ்த்ரா இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
நம் கண் முன்னே நடமாடும் உதாரணம் நாகலட்சுமி (செஸ் சாம்பியன்கள் பிரக்ஞானந்தா, வைஷாலியின் தாயார். உலக அரங்கில் பாரதத்திற்குப் பெருமை சேர்த்து வரும் இக்குழந்தைகளின் வெற்றிப் பயணம் அவர்களது தாயாரின் உறுதுணையால் அவரது வழிகாட்டுதலில், கண்காணிப்பில் அல்லவா தொடர்கிறது !
இன்னும் எத்தனையோ உதாரணங்கள்! அடுக்கிக்கொண்டே போகலாம். வீரமாதா விதுலையை மட்டும் சந்தித்து விடுவோம். சௌவீர தேசத்தின் புதிய மன்னன் சஞ்சயனின் தாய் இவர். சிந்து தேச மன்னன் சௌவீரத்தை கைப்பற்ற படையெடுத்த போது விதுலை, “பகைவனை கோட்டைக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்து, போ” என்று வீரமூட்டி போர்முனைக்கு அனுப்பினாள். போரில் பட்ட காயத்துடன் ஓய்வுக்காக கோட்டைக்கு திரும்பிய மகனை உள்ளே வரவிடாமல் கோட்டைக் கதவைச் சாத்தி, “மகனே, தேசத்துக்காகப் போர் புரி. வெற்றி அல்லது வீரமரணம் இரண்டில் ஒன்று மட்டுமே உன் முன் உள்ள வழி” என்று திருப்பி அனுப்புகிறாள் தாய். வெற்றி வீரனாக வீடு திரும்புகிறான் மகன்.
துரியோதனனின் சதியால் 13 ஆண்டுகள் வன வாசம், தலைமறைவு வாழ்க்கை எல்லாம் முடிந்த பிறகும் பாண்டவர்களுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் கண்ணனிடம் விதுலையின் கதை கூறி, தர்மரிடம் அந்தக் கதையைச் சொல்லச் சொல்லி போர் புரிந்து உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும்படி தூண்டினாள் குந்தி, என்கிறது மகாபாரதம்; பாண்டவர்கள் வென்றார்கள், தர்மம் வென்றது. பாரத நாட்டை பொறுத்த வரை “அன்னை வளர்ப்பு”க்கு அவ்வளவு நீண்ட பாரம்பரியம் உண்டு.