அனில் ஆண்டனி காங்கிரசில் இருந்து விலகல்

குஜராத் கலவரங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் ஒன்றை பி.பி.சி வெளியிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், திட்டமிட்ட வகையில், பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறை பரப்பியது. காங்கிரஸ் கட்சி, இந்திய இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ), மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ) போன்ற பல்வேறு அமைப்புகளும் இதனை தங்களது மலிவான அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொண்டன. காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி மாணவர் கூட்டமைப்பும் அந்த ஆவணப் படத்தை கேரளா முழுவதும் பல இடங்களில் திரையிட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் கே ஆண்டனி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். எனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். பேச்சுரிமைக்காக போராடுபவர்களால் இந்த டுவீட்டை திரும்பப் பெறுவதற்கான சகிப்புத்தன்மையற்ற அழைப்புகளை நான் மறுத்துவிட்டேன். அன்பு பரப்பப்படுவதை ஆதரிப்பவர்களின் முகநூல் பக்கங்கள் வெறுப்பும் துஷ்பிரயோகமுமாக இருக்கிறது. இதற்குப் பெயர் பாசங்கு. வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்” என கூறி தனது ராஜினாமா கடிதத்தை அத்துடன் இணைத்துள்ளார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் ஆதரவுக்கும் அனில் நன்றி தெரிவித்துள்ளார்.முன்னதாக சர்ச்சைக்குரிய இந்த ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த அனில் அந்தோணி, “பா.ஜ.கவுடன் பெரிய அளவில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், பாரதத்துக்கு எதிரான; பாரபட்சத்துடன் செயல்படக்கூடிய; இங்கிலாந்து அரசின் ஆதரவைப் பெற்ற ஒரு தொலைக்காட்சியின் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பார்வையை அப்படியே முன் வைப்பது நமது இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும்” என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சியில் பேசிய அனில் அந்தோணி, “ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யாருடனும் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால், சுதந்திரத்தின் இந்த 75வது ஆண்டில், வெளிநாட்டினரோ அல்லது அவர்களது நிறுவனமோ நமது நாட்டின் இறையாண்மையை குறைத்து மதிப்பிட அனுமதிக்கக்கூடாது” என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.