கடந்த ஆண்டு ஜூலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக அவரது அண்ணன் மகன் அஜித் பவார் போர்க்கொடி உயர்த்தினார். அந்த கட்சியின் 53 எம்எல்ஏக்களில் 40 பேருடன் பாஜக கூட்டணி அரசில் அஜித் பவார் இணைந்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி சரத் பவார், அஜித் பவார் தரப்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இருதரப்பிடமும் 10 முறைக்கு மேல் விசாரணை நடைபெற்றது. இதன் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று முடிவை அறிவித்தது. அஜித் பவார் அணியே, உண்மையான தேசியவாத காங்கிரஸ், அந்த அணிக்கே கட்சியின் சுவர் கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுகிறது என்று ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் ‘‘சரத் பவார் தனது அணிக்கு, 3 பெயர்களை இன்றுபிற்பகல் 3 மணிக்குள் பரிந்துரைக்க வேண்டும். தவறினால்,சரத் பவார் அணி எம்எல்ஏக்கள் சுயேச்சைகளாக கருதப்படுவார்கள்’’ என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் சரத் பவார் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.