அக்ரஹாரம் அமைத்து தந்ததற்கு ஆதாரம் வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடிக்கு அருகில் உள்ள பிராமணக்குறிச்சியில், வாணாதிராயர், அக்ரஹாரம் அமைத்து தந்ததற்கு ஆதாரமான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகில் உள்ளது பிராமணக்குறிச்சி.

இங்கு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில், அதன் தலைவர் ராஜகுரு, கல்லுாரி மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களான ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன் ஆகியோர், கடந்த வாரம் கல்வெட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, 550 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து, ராஜகுரு கூறியதாவது:

பிராமணக்குறிச்சியில் உள்ள தடியார் உடையார் அய்யனார் கோவில் முன், 6.5 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள கருங்கல் கிடந்தது. அதை ஆய்வு செய்தபோது, ஒன்பது வரிகள் கொண்ட கல்வெட்டாக இருந்தது. அதை படியெடுத்து ஆய்வு செய்தபோது, 550 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாணாதிராயர்களுடையது என்பது தெரியவந்தது. பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில், குறுநில தலைவர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருந்தவர்கள் வாணாதிராயர்கள். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின், விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களுக்கு கீழும் அதிகாரத்துடன் இருந்துள்ளனர்.

அவர்கள், மதுரை அழகர் கோவில் பகுதியில் தனி அரசும் நடத்தி உள்ளனர். வைணவ சமயத்தை பின்பற்றிய இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கிடைத்துள்ளன. பிராமணக்குறிச்சியில் கிடைத்துள்ள கல்வெட்டில், ‘சுந்தரதோள் மகவலி வணதராயர் தன்மம் அனக்குறிச்சி அகிராகரம்’ என்ற வாசகங்கள் உள்ளன. அதன் மேல் கமண்டலமும், திரிதண்டமும் கோட்டுருவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

அதாவது, வாணாதிராயர் குலத்தைச் சேர்ந்த, மன்னர் சுந்தரதோள் மகாவலி வாணாதிராயர், கி.பி., 15ம் நுாற்றாண்டில், அனக்குறிச்சியில் பிராமணர்களுக்கு தானமாக அக்ரஹாரம் அமைத்துக் கொடுத்தார் என்பது தான் செய்தி. அக்ரஹாரம் அமைத்த மன்னர், 1468 முதல் 1488 வரை ஆண்டார். அவர் காலத்தில் அனக்குறிச்சியாக இருந்த இவ்வூர், தற்போது பிராமணக்குறிச்சி என மாறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அவர்கள் இப்பகுதியில் கள ஆய்வு செய்ததில், பல இடங்களில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு – சிவப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், இரும்புக் கசடுகள் கிடப்பதை கண்டறிந்தனர். அதனால், இவ்வூர் 2,000 ஆண்டுகளாக மக்களின் வாழ்விடமாக இருப்பதை அறிய முடிகிறது.

 

சபரிமலை களபாபிஷேக கட்டண விவகாரம் அறிக்கை கேட்டது கேரள உயர் நீதிமன்றம்

 

சபரிமலையில் களபாபிஷேகத்துக்கு கட்டணம் வசூலித்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க சன்னிதானம் போலீஸ் எஸ்.பி.,க்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சபரிமலையில் முக்கிய வழிபாடுகளில் ஒன்று களபாபிஷேகம். மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக அரைத்த சந்தனம் தங்க குடத்தில் அடைக்கப்பட்டு பூஜித்து அது ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். இதற்கு தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.38 ஆயிரத்து 400. சந்தனம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தேவசம்போர்டு வழங்கும்.

ஆனால் பக்தர் சந்தனம் கொண்டு வந்தால் தேவசம்போர்டு ரூ.12 ஆயிரத்து 500 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி களபாபிேஷகம் நடத்திய பக்தர் சந்தனம் அரைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அவரிடமிருந்து முழு தொகையான 38 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்கள் வெளியான செய்தி அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தேவசம் போர்டு அளித்த விளக்கத்தில் பொதுவாக சந்தனம் வெளியிலிருந்து கொண்டு வர அனுமதிப்பதில்லை என்றும், ஒரு விசேஷ சூழ்நிலையில் பக்தரின் சந்தனம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி சன்னிதானம் போலீஸ் எஸ். பி க்கு உத்தரவிட்டனர்.