கன்னட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் சமீபத்தில் சில மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்ஸும் இதை கண்டித்துள்ளது.
அவர் ஹிந்துத்துவத்திற்கு எதிராக எழுதி வந்ததால் கொலை செய்யப்பட்டார் என்று ஹிந்து அமைப்புகள் மீது சிலர் பழி சுமத்தியுள்ளனர். விசாரணையே ஆரம்பிக்கவில்லை. யாரும் கைதாகவில்லை. அதற்குள்ளாகவே ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ், பாஜக மீது பழி சுமத்திப் பேசியுள்ளார்.
ராகுல் காந்திக்கும் இந்த அறிவு ஜீவிகளுக்கும் ‘ஹிந்துத்துவம்’ பற்றி அரிச்சுவடிப் பாடம் கூடத் தெரியவில்லை. கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்தவர்கள் சார்வாக பிரிவினர். கோயில் வாசலில் நின்றுகொண்டு கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்பவர்கள். அதை ஹிந்து சமுதாயம் அனுமதித்து வந்தது. தமிழகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் அன்றாடம் ஹிந்து தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி வந்தார். ஹிந்துக்கள் அதை வேடிக்கை பார்த்தனரே தவிர அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே! ஹிந்துத்துவம் மட்டுமே இந்த உரிமையை வழங்கியுள்ளது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் அவர்களின் மதத்தை விமர்சிக்க எவரையும் அனுமதிப்பதில்லை.
கேரளத்தில் ஒரு பேராசிரியர் பல்கலைக் கழகத் தேர்வில் நபிநாயகம் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு கடுமையாக எதிர்ப்பு வந்தது. மன்னிப்பு கேட்டார். தன் வேலையை ராஜினாமா செய்தார். இவ்வளவுக்கும் பிறகு அவரது கையை வெட்டினார்கள்.
நக்ஸலைட்டுகளை சரணடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் கௌரி. இது பிடிக்காத நக்ஸலைட்டுகள் கூட ஆத்திரப்பட்டிருக்கலாம் அல்லவா?
மாநில அரசு துரிதமாக செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தவேண்டும். அதுவரை ‘அறிவு ஜீவிகள்’ வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது.