பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
பசியால் துடிக்கும்போது படிப்பில் கவனம் செலுத்த இயலாது. மாணவர்களின் கவனம் வேறெங்கும் சிதறக்கூடாது. கல்வியிலேயே குவிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நண்பகல் சத்துணவு திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. காலை ஆகாரத்தை தவிர்ப்பது உடல்நலத்திற்கு உகந்ததது அல்ல என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் எதுவும் சாப்பிடாமல் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்தால் அவர்களது கவனத்திறனும் கிரஹிக்கும் ஆற்றலும் குன்றுகின்றன.
அட்சயபாத்திரம் என்ற ஆன்மிகச் சார்புடைய தொண்டு நிறுவனம் பாரதம் முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவை வழங்கி வருகிறது. பசியால் எந்த மாணவரும் வாடக்கூடாது என்பதுதான் அட்சயபாத்திரத்தின் பிரதான இலக்கு. இந்த அமைப்பு 2000ல் ஆண்டில் எளிய முறையில் பெங்களூரில் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியது. முதலில் ஐந்து பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 1,500 மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு அளிக்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பு 12 மாநிலங்களில் உள்ள 14,702 பள்ளிக்கூடங்களில் சத்துணவை விநியோகித்து வருகிறது. இதன் மூலம் 17.6 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் சத்துணவை வழங்க இந்த தொண்டு அமைப்பு முன்வந்துள்ளது. தமிழ்நாட்டில் நண்பகல் சத்துணவு ஏற்கனவே அமலில் உள்ளதால் காலை நேர உணவை வழங்கலாம் என்று தமிழக ஆளுநரின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் யோசனை கூற இதை அட்சயபாத்திரம் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சத்துணவு வழங்கப்படுகிறது. பள்ளிக்கூடத்தில் பாடவகுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பே சத்துணவு பரிமாறப்பட்டுவிடும். இட்லி, உப்புமா, பொங்கல் போன்ற ஏதேனும் ஒன்று சாம்பாருடன் அளிக்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா பிப்ரவரி மாதம் 25ம்தேதி திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. முதல்கட்டமாக ஆயிரம் மாணவர்கள் இதனால் பயனடைகின்றனர்.
விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநில அமைச்சர் ஜெயகுமார், டாக்டர் சரோஜா, ஆளுநரின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஆர். ராஜகோபால், உள்ளாட்சித்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங், சென்னை மாநகர ஆனணயர் ஜி.பிரகாஷ், அட்சய பாத்திரத்தின் துணைத்தலைவர் சஞ்சலபதி தாஸா, முதன்மை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இத்திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் ஐயாயிரம் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று அட்சயபாத்திரம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வரும் கல்வியாண்டில் இது 20,000 மாணவர்களுக்கு நெடுமைப்படுத்தப்படும் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.