அலையலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும்
விலைவரம்பு காணாத முழுமுத்தும் மேலுயர்ந்த
மலையருவி கொழித்துவரும் மணிகளொடு பசும்பொன்னும்
தலையணியப் பிறநாட்டார்தந்தனை இந்திய மாதே
உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்
பலவாறு நின்புகழைப் பாரித்து என்சிற்றறிவாற்
சொலவருமோ? தொலையாத வளமுடையாய் தொன்றுதொட்ட
நலமெலாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே
அந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து
முன்னாளில் விரிந்தபல கைத்தொழிலை முதிர்ச்சியுற்ற
மன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றோம்
இன்னுமிவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்த்துவமே!
– மறைமலையடிகள்
பாரத நாட்டைப் பாடுவமே
பரமா னந்தங் கூடுவமே!
முனிவர்கள் தேசம் பாரதமே
முழங்கும் வீரர் மாரதமே!
பாரத தேசம் பேரின்பம்
பார்க்கப் பார்க்கப் போந்துன்பம்!
வந்தே மாதர மந்திரமே
வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே!
வந்தேமாதரம் என்போமே
வாழ்க்கைப் பிணிகள் பின்போமே!
காலை சிந்தை கதிரொளியாம்
மாலை நெஞ்சில் மதிநிலவே!
சாந்தம் சாந்தம் இமயமலை
சார்ந்து நிற்றல் சமயநிலை!
கங்கை யோடுங் காட்சியிலே
கடவுள் நடனம் மாட்சியிலே!
காடும் மலையும் எங்கள் மடம்
கவியும் வரைவும் எங்கள் படம்!
பெண்கள் பெருமை பேசுவமே
மண்ணில் அடிமை வீசுவமே!
அடிமையழிப்பது பெண்ணொளியே
அன்பை வளர்ப்பது அவள் வழியே!
பெண்ணை வெறுப்பது பேய்குணமே
பேசும் அவளிடம் தாய்க்குணமே!
சாதிப் பேயை யோட்டுவமே
சமநிலையெங்கும் நாட்டுவமே!
– திரு. வி. கலியாணசுந்தரனார்.
வேத வாணியும் பாரத தேவி
வீர துர்க்கையும் பாரத தேவி
மாதவர் கனல் பாரத தேவி
மங்கலத் திரு பாரத தேவி
சேது தொட்டிமயம் வரை நீண்ட
தெய்வ நாட்டினள் பாரத தேவி
மோது தென்கடல் முன் வளர்ந்தோங்கும்
மூலசக்தியும் பாரத தேவி
கோடி கோடி சிரங்கள் வணங்க
கோடி கோடிக் கரந்தொழு தேத்தக்
கோடி தேவர்கள் ஆசிகள் கூறக்
கொலுவிருப்பவள் பாரத தேவி!
– கவியோகி சுத்தானந்த பாரதி
தொகுப்பு: அரவிந்தன் நீலகண்டன்
************************************************
பாரத நற்புத்திரன் நாள்!
தேர் நின்ற வீதி செயபேரிகை முழங்கப்
பேர்நின்ற வீரர் குலம் பூத்த நிலம் – பார்நின்று
அடல் வளர்த்த பாரத நற்புத்திரன் நான்
உடல் வளர்த்த நாடு என் உயிர்.
விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
பண் கொள் குமரிப் பணிகளாய் – மண் கொள்
வளமே தன் மேனியால் வாய்ந்தாய்வீரர்
உளமே தன் மேனிக்கு உவப்பு.
– பாரதிதாசன்
(பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்று போற்றப்படும் பாரதிதாசனுக்குள்ளே பாரத தேசியம் நீறுபூத்த நெருப்பாக இருந்திருக்கிறது.)
************************************************