வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருக பக்தராக இருந்தும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்ப முடியவில்லையே ஏன்? – செ. திருமுருகன், திருச்செங்கோடு
- தூக்குத் தண்டனை பெற்றதாலேயே வீரபாண்டிய கட்டபொம்மனின் கீர்த்தி இன்றளவும் நீடித்து நிலைக்கிறது. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார் அவரது கொள்கை தூக்கிலிடப்படவில்லை.
காலையில் குளிக்காமல் டிபன் சாப்பிடலாமா? – இ. சுந்தரமூர்த்தி, திருப்பூர்
- இதெல்லாம் அவரவர்களின் சௌகரியத்தைப் பொறுத்தது. ஆனால் கூழானாலும் குளித்து குடி” என்பது ஔவையின் வாக்கு.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது கல்வியா? செல்வமா? வீரமா? – கே. சரவணன், கோவை
- எது எவ்வளவு இருந்தாலும் உடல் ஆரோக்கியமில்லை என்றால் எதுவுமே இல்லை.
ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு என்பெதல்லாம் இந்த நவீன காலத்திற்கும் தேவையா? – வ. கீர்த்தனா, செங்கம்
- நீங்கள் யாரோ ஒரு தமிழக பெரியவர் எழுதிய புத்தகங்ககளை படித்ததால் ஏற்பட்ட தாக்கமா? போகட்டும்… இந்த நியதிகள் இல்லையென்றால் ஆடு, மாடு, நாய், போன்றவற்றுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா பற்றி? – எஸ். குணசேகர், திருவாரூர்
- சாரதாநிதி நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் 17 லட்சம் பேர் போட்ட தொகை 30 ஆயிரம் கோடி பணம் போச்சேஎ ன்ற அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 217 பேர். இந்த ஊழலுக்கு முழு காரணம் மம்தாவும், அவரது கட்சியினருமே, சிலநேரங்கள் பிக் பாக்கெட் “திருடன்திருடன்”, என்று திருடனே கத்திக்கொண்டு ஓடுவான்.
வர்ணாஸ்ரம தர்மத்தை சிலர் எதிர்ப்பது ஏன்? – ஈ. உடையப்பன், திருநள்ளாறு
- அது சரி.., ஆட்சியிலும் கட்சியிலும் தந்தை வகித்த பதவி மகனுக்கே என்பெதல்லாம் எந்த வர்ணாஸ்ரம தர்மம்?
பாஜகவின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி என பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரியா? – ச. விக்னேஷ்வரன், தூத்துக்குடி
- பாஜகவை எதிர்க்கிற எல்லா கட்சிகளுமே பாஜகவை மதவாத கட்சி என்றுதான் எதிர்க்கிறார்களே தவிர, யாருமே ஊழல் கட்சி என்று குறிப்பிடவில்லை. ராகுல் மட்டும்தான் ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார். அதை உச்ச நீதிமன்றமே நிராகரித்து விட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மோடி சொந்தம், பந்தம் என ஒருவரைக் கூட அருகில்வைத்துக்கொள்ளவில்லையே!