நூலாசிரியர் (எம். குமார்) பாரத நாட்டின் வரலாற்றை ஒரு முழுத் தொகுப்பாக ஒரே நூலில் வெளியிட வேண்டும் என்ற ஆவலே இந்த நூலை எழுதியதின் நோக்கம் என்கிறார். அந்த நோக்கத்தில் ஆசிரியர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துகள்.
ஏறத்தாழ 1000 பக்கங்கள் கொண்ட நூலில் பண்டைய இந்திய வரலாற்றை (முகமதியர் வருகைக்கு முன்) முதல் 21 பக்கங்களில் விவரிக்கின்றனர்.
சற்றேற 90 பக்கங்களில் முஸ்லிம் – மொகலாய ஆட்சிக் காலங்களை விளக்குகின்றனர்.
இந்த இடத்தில் வேகமாக புரட்டிக்கொண்டு வரும்போது அடடே என்று வியக்க வைத்த விவரம்: முன்னூறு ஆண்டு முஸ்லிம்கள் ஆட்சியின் இடையில் சுமார் ஆறு மாதங்கள் டெல்லியில் 1556ம் வருடம் ஹேமு என்று அழைக்கப்படும் சாம்ராட் ஹேம் சந்திர விக்ரமாதித்யா ஆட்சிசெய்து வந்திருக்கிறார். இவர் 1553 முதல் 1556 வரை பல போர்களில் வெற்றி கொண்டு ஹுமாயூன் வசமிருந்த வடபாரதத்தின் பல பகுதிகளை (வங்காளம் வரை) தன் ஆட்சியில் இணைத்திருக்கிறார். ஹேமுவின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய அக்பருக்கு, அதிபர் ஹேமுவின் வசமிருந்த பகுதிகளை மீட்டு மொகலாய பேரரசை விரிவாக்க எட்டு வருடங்கள் ஆயினவாம் (பக்கம் 81).
தொடர்ந்து வாசித்துக்கொண்டு வரும்போது ‘உலக நாடுகளில் இஸ்லாம்’ என்ற பகுதி கவர்கிறது. சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் அரசுகள் முஸ்லிம் மக்களை எவ்வாறு நடத்துகின்றன என்று அலசுகிறார்கள். 2013ல் சீன முஸ்லிம் ஒருவன், சீனாவின் தேசியக் கொடியை எரித்ததற்காக, சீன அரசு உடனடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. எல்லா மசூதிகளிலும் சீனாவின் தேசியக்கொடி பறக்கவேண்டும். இதற்காக மசூதிகளில் கொடிக்கம்பம் வைக்கவேண்டும். இந்த உத்தரவை மீறும் இமாம்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்தது. அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் இஸ்லாத்தைப் பற்றி பேசுவதோ மதப்பிரச்சாரம் செய்வதோ தேசத் துரோகத்திற்கு சமமான குற்றமாக சீனாவில் கருதப்படுகிறது (பக்கம் 109 – 110).
திருமலை நாயக்கர் போர்ச்சுகீசியரிடம் சுமுகமான உறவு கொண்டிருந்தார் என்பதும் பின்னர் வந்த நாயக்க மன்னர்கள் நாட்டில் ஸ்திரமற்ற பலவீனமான ஆட்சிகளின் காரணத்தினால் ‘எரிந்த வீட்டில் பிடுங்கியது ஆதாயம்’ என்று எவ்வாறு முஸ்லிம்களும் டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டார்கள் என்பதையும் ராபர்ட் டி நோபிலில் என்ற கிறிஸ்தவ மதபோதகர், பிராம்மணர் போல சமஸ்கிருதம் படித்து உள்ளூர் மக்களுடன் உறவாடிக் கொண்டே (பக்கம் 138 மற்றும் 146) மதமாற்றத்தை விரைவுபடுத்தினார் என்பதையும் ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்.
தமிழக வரலாற்றை சங்க காலம் தொடங்கி ஜெ ஆட்சி (2014) வரை விரிவாக விளக்கியுள்ளனர்.
தீரர் செண்பகராமன் பிள்ளை, முத்துராமலிங்கத்தேவர், வ.வே.சு. ஐயர், வாஞ்சிநாதன், மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார் போன்றவர்கள் விடுதலை வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர்களின் வாழ்வை உணர்வு பொங்க எழுதியுள்ளனர்.
பாரதப் பிரிவினையும் அதன் சோகமும் நெஞ்சைப் பிழியும் வகையில் இரண்டு அத்தியாயங்களில் 58 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிரிவினையின் கொடுமையை நேரில் கண்டு அனுபவித்த கல்யாணம் (மகாத்மாவின் தனி செயலர்) வாயிலாக விவரித்திருப்பது, நூலின் நம்பகத்தன்மையை மேலும் கூட்டுகிறது. ஆசிரியர்களிலின் புத்திசாலித்தனத்தை பாராட்டலாம். தமிழ்நாட்டில் பலரும் அறியாத, பத்திரிகைகள் வெளியிட மறுக்கிற பல விவரங்கள் இந்த நூலில் பொதிந்துள்ளன (பக்க எண் 636 – 681 மற்றும் 724 – 736). டூ
நூலின் பெயர்: இந்தியா அன்று முதல் இன்று வரை
நூலாசிரியர்கள்: எம். குமார் – ஜி. சுப்பிரமணியன்
நூலின் விலை: ரூ. 650/- பக்கங்கள் : 933
கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம்
போன்: 044 – 2434 2810, 2431 0769