நீர்நிலைகளை மீட்டெடுக்கும் விவசாயி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராகவன் மகன் நிமல் ராகவன்(31). இவர் கடந்த நான்கரை ஆண்டுகளாக துபாய் நாட்டில் சாஃப்ட்வேர் டெவலப்பராகவும், விலங்குகள் நல பாதுகாப்புக் குழுவின் அபுதாபி நாட்டின் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு விடுமுறையின் போது சொந்த ஊருக்கு வந்த நிமல், கஜா புயல் தாக்கியதில் நாடியம் கிராமம் மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிக்கப் பட்டவர்களுக்காக உதவ முடிவு செய்தார். இதையடுத்து, துபாயில் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்தில் செய்துவந்த வேலையை ராஜினாமா செய்வதாக இ-மெயி லில் கடிதம் அனுப்பிவிட்டு, முதலில் சொந்த ஊரில் கஜா புயல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

கடைமடைப் பகுதியான பேராவூரணி பகுதியில் விவசாய பாசனத்துக்கும், குடி நீருக்கும் தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்து, அதைப் போக்குவதற்காக தன் நண்பர்களுடன் இணைந்து ‘கைபா’ என்ற பெயரில் கடை மடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தை தொடங்கினார். இதன் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, முன் மாதிரியாக பேராவூரணியில் உள்ள 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டார்.

 

இதுகுறித்து நிமல் ராகவன் கூறியதாவது: கஜா புயலின்போது எங்களை, பலர் தொடர்புகொண்டு நிவாரண நிதி வழங்கினா். அவ்வாறு உதவியவர்களுக்கு எங்களின் அன்றாட வரவு, செலவு விவரத்தை அனுப்பி வைத்ததால் பலருக்கும் எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

இதையடுத்து, தண்ணீர் பற்றாக் குறையைப் போக்க முடிவு எடுத் தோம். ஒருகாலத்தில் காவிரி நீர் கடைமடைப் பகுதி வரை வந்தது. காலப்போக்கில் காவிரி நீர் எங் களுக்கு எட்டாக்கனியானதால் வானம் பார்த்த பூமியாகவே மாறி விட்டது. இதற்கு நீர்நிலைகள் தூர்வாரப்படாததும், ஆக்கிரமிப்பு களும் காரணம் என்பதை உணர்ந் தோம். ஊர் மக்களிடம் ஆலோசனை கேட்டு, நிதியுதவியையும் பெற்று முதலில் பேராவூரணி பெரிய குளத்தை தூர்வாரத் தொடங்கி னோம். தற்போது 60 சதவீதம் தூர்வாரியுள்ளோம். குளத்தின் கரைகளில் 6 ஆயிரம் பனை விதை களையும், 25 ஆயிரம் வெட்டி வேரையும் நடவு செய்துள்ளோம். குளத்தில் 3 இடங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து குறுங்காடுகளை உருவாக்க உள்ளோம்.

பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய நான்கு வட்டாரங்களிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஏரி, குளங் களை மீட்டு அதற்கான நீர் வழிப் பாதைகளையும், குளம், ஏரியையும் தூர்வாரி முதல்கட்டமாக கல் லணைக் கால்வாய் மூலம் வரும் தண்ணீரை கொண்டு செல்கிறோம். தற்போது கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வருவதால் அதைப் பயன் படுத்தி நீர்நிலைகளை நிரப்பி வருகிறோம். இதனால் பல ஆண்டு களுக்குப் பிறகு எங்கள் பகுதி நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அடுத்த கட்டமாக கல்லணைக் கால்வாயின் இரு கரைகளையும் பலப்படுத்த உள்ளோம்.

துபாயில் செய்துவந்த வேலையை விட்டுவிட்டு தற்போது சொந்த ஊரில் நண்பர்களுடன் சேர்ந்து 25 ஏக்கரில் இயற்கை விவசாயமும், நவீன விவசாயமும் மேற்கொண்டு வருகிறேன். துபாயில் வேலை செய்தபோது கிடைக்காத திருப்தி தற்போது எனக்கு கிடைத்துள்ளது என்றார்.