குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்திடவும் தம்பதியர் இடையே புரிதலை கொண்டுவரவும் சமுதாய உயர்வுக்கு குடும்பங்களின் பங்களிப்பை புரிய வைக்கவும் சென்னை தியாகராய நகரில் உள்ள சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 04, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ‘ஹிந்து குடும்ப சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவினை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணகி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவர் குழந்தைகளை மதிப்பெண் எடுக்கும் மெஷினாகப் பார்க்காமல் அவர்கள் முழு வளர்ச்சியடைவதற்கு பெற்றோர் உதவவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் பின்னர், பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், கணவன் – மனைவியருக்கு தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டுக்கள் கலாச்சாரம், உடற்பயிற்சி சார்ந்தைவையாகவே இருந்தது சிறப்பு.
‘புரிஞ்சிக்கலாமா-சிக்கலாமா’ என்ற தலைப்பில் கணவன் – மனைவியருக்கான விவாத அரங்கம் நடத்தப்பட்டது. இதில் கணவன், மனைவியை பற்றியும் அவரது உணர்வுகள் பற்றியும் வேலைகள் குறித்தும் அறிந்து வைத்துள்ளாரா என்றும், அதேபோல் மனைவி தன் கணவனின் வேலை குறித்தும் அவரது உணர்வுகள் பற்றியும் அறிந்துவைத்துள்ளாரா என்பதை பற்றியதாக அமைந்திருந்தது. அதைப்போல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை எந்த அளவு தெரிந்து வைத்துள்ளனர் என்பது குறித்த போட்டியும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நடந்த வினாடி-வினா, கோலப் போட்டி, சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு இரு கண்களையும் கட்டிக்கொண்டு தங்கள் தாயை கண்டுபிடிக்கும் கண்ணாமூச்சி ரே-ரே விளையாட்டு, தா- சேய் பாசப்பிணைப்பை உணர்த்தும் வண்ணம் இருந்தது.
அதைத் தொடர்ந்து திருமண வாழ்வில் அரை நுற்றாண்டை கடந்த வயது முதிர்ந்த தம்பதியருக்கு, இளம் தம்பதியினர் பாதபூஜை செது ஆசி பெற்றனர். குழந்தைகள் தங்களது திறமைகளை நடனம் ஆடியும் பக்தி பாடல்களைப் பாடியும் வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் நிறைவு உரையாற்றிய ஆர்.பி.வி.எஸ். மணியன், கணவன், மனைவியையும், மனைவி கணவனையும் எவ்வாறு புரிந்து நடக்க வேண்டும் என்பதையும் குடும்ப உறவுகளை மதித்து வாழவும் பாரம்பரிய ஹிந்து கலாச்சாரத்தை நமது குழந்தைகளுக்கு நாம்தான் கற்றுத்தர வேண்டும், கலாச்சாரமானது குடும்பம் வழியாகவே வளர்கிறது, எனவே, நம் முன்னோர் நம்மிடம் பத்திரமாக பாதுகாத்துத் தந்த இந்த பண்பாட்டை, நாம் பத்திரமாக நமது எதிர்கால சந்ததியினர்ருக்குத் தர வேண்டும். நம் பாரத தேசம் ஹிந்து மட்டுமே இருக்க வேண்டும் என முழங்கி தன் உரையை நிறைவு செதார்.