ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தை மார்க்சிஸ்டுகள் ஊதிப் பெரிதாக்கினார்கள். பல்கலைக் கழக வளாகத்தில் உரையாற்றிய மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது. தலித் மாணவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இதன் பிரதிபலிப்பாக, ஒரு தலித் மாணவர் உயிர் இழக்க நேரிட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும். ஹைதராபாத் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் பதவி பறிக்கப் பட வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டார்.
மார்க்சிஸ்டுகள் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் இருப்பது சகஜம்தான். ‘பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோரின் பாதுகாவலர்கள் நாங்கள்தான்’ என்று மார்க்சிஸ்டுகள் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் உயர் அமைப்பான அரசியல் தலைமை குழுவில் கடந்த 50 ஆண்டுகளாக தலித் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.
மார்க்சிஸ்டு குண்டர்கள் தலித் பெண்களை எந்த அளவுக்கு சித்திரவதை செய்துள்ளார் என்பதற்கு கேரள நிகழ்வுகள் வலுவான சான்றுகளாக உள்ளன. ஆனால், இதை மாநில மார்க்சிஸ்டு தலைமையோ அல்லது மத்திய மார்க்சிஸ்டு தலைமையோ கண்டுகொள்ளவில்லை.
முதலாவதாக, சுமார் ஒரு மாமாங்க காலம், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகப் போராடிவரும் புலையர் (தலித்) சமூகப் பெண் சித்ரலேகாவின் சோகங்களை கவனிப்போம்.
கேரளாவின் வடக்குப் பகுதியில் உள்ள பையனூரை சேர்ந்தவர் சித்ரலேகா. அவர் தனது கணவர் சிரீஷ்காந்த், இரண்டு பாட்டி, ஆகியோருடன் இடைற்றே இறைமங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். 2004ல் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்டோரிக்ஷா ஒன்றை வங்கிக் கடன் மூலம் அவர் வாங்கினார். அவ்வூரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், அவரது வாகனத்தை நிறுத்த இடம் அளிக்க முடியாது என்று மார்க்சிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கூறிவிட்டனர். இதற்கு, சித்ரலேகா புலையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதுதான் பிரதான காரணம். ஆனால், அவர் இடைவிடாமல் துணிவுடன் போராடினார். இறுதியில் அவரது வாகனத்தை ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர், அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.
ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு அவரைச் சரமாரியாகத் திட்டினர். ஒருமுறை ஆட்டோவிலிருந்து அவரை இழுத்துப்போட்டு, அடித்து உதைத்தனர். நினைவிழந்த நிலையில் மயங்கிக் கிடந்த அவரை, வேறொரு ஆட்டோவை பிரயோகித்துக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் நூலிழையில் தப்பிவிட்டார்.
இதற்குப் பிறகும், மார்க்சிஸ்டுகளின் வன்முறை வெறியாட்டம் சற்றும் குறையவில்லை. அவரது ஆட்டோவைத் தீ வைத்துக் கொளுத்தி, சாம்பல் ஆக்கினர். சித்ரலேகா, அவரது கணவர் சிரீஷ்காந்த், கணவரின் சகோதரர் மகேஷ், சகோதரியின் கணவர், ஆகியோர் மார்க்சிஸ்டு குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். போலீசில் புகார் கொடுக்கச் சென்றபோது, அதைக் காவலர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. எரிகிற நெருப்பில் எண்ணெய் போல, சித்ரலேகாவை போலீசார் இதற்கிடையே ஆட்டோவுக்காக வாங்கிய கடனுக்காக வங்கியாளர்கள் நெருக்கடி அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. கண்ணூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன், அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மார்க்சிஸிஸ்டு குண்டர்களின் பயந்து, மனித உரிமை ஆர்வலர்கள் யாரும் சித்ரலேகாவுக்கு உதவ முன்வரவில்லை.
சித்ரலேகாவின் பரிதாப நிலை கண்டு மனம் இரங்கிய பொதுமக்கள் சிலர், அவருக்காகக் குரல் எழுப்பினர். அழுத்தம் கொடுத்தனர். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் மார்க்சிஸ்டு குண்டர்கள் 6 பேர் மீது மீது முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. வழக்கு பதிவான பிறகும் கூட, சித்ரலேகாவுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நிம்மதியும் கிடைக்கவில்லை.
அவரது மகன் மனுவால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. வேலைக்குச் சென்று, குடும்ப பாரத்தைச் சுமக்கவேண்டிய நிலைக்கு மனு தள்ளப்பட்டான். நல்ல உள்ளம் கொண்ட சிலர் சித்ரலேகாவுக்காகக் குரல் எழுப்பிய போதிலும் மார்க்சிஸ்டு குண்டர்கள் அச்சுறுத்தியதால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மார்க்சிஸ்டு குண்டர்கள், இதற்கு மேலும் ஒருபடி சென்றனர். சித்திரலேகாவுக்கு எதிராக, கண்டனப் பேரணிகளை நடத்தினார்கள்.
சித்ரலேகா, 122வது நாள் தர்ணா போராட்டம் நடத்தியபோது, மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி சம்பவ இடத்துக்குச் சென்றார். அருகே உள்ள பஞ்சாயத்தில் 5 செண்டு நிலம் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதன் பிறகு, சித்திரலேகா திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகம் எதிரே தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சூரிய மின்தகடு பிரச்சினையில், சரிதா நாயர் சுமத்திய குற்றச்சாட்டால், உம்மன் சாண்டியின் நிலை ஆட்டம் கண்டுள்ளது. இதனால் சித்திரலேகாவுக்கு நிலம் கிடைக்குமா? நிம்மதி திரும்புமா? என்பவை கேள்விகளாகவே உள்ளன. டூ
முஸ்லிம் லீக் ஊழியரை படுகொலை செய்த மார்க்சிஸ்டுகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் அப்துல் சுக்கூர் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்டுகளே காரணம். மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பி. ஜெயராஜன், பி.வி. ராஜேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று கேரள உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சுக்கூரின் தாயார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இவ் விவகாரத்தில் கண்டிப்புக் காட்டியுள்ளது.
அப்துல் சுக்கூரைப் படுகொலை செய்ய மருத்துவமனை அறை ஒன்றில் தான் சதி திட்டத் தீட்டப்பட்டுள்ளது. அங்கிருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அப்போது உடன் இருந்த ஜெயராஜ், ராஜேஷ், மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்ற கேள்வி சம்பந்தப்பட்ட நபர்களை உலுக்கிவிட்டது.
‘குற்றப் புலனாய்விலும் அது தொடர்பான நடவடிக்கைகளிலும் குற்றவாளிகளின் ஆதிக்கம் நீடித்தால், நீதியை எப்படி நிலைநாட்ட முடியும்? நீதிபதிகள் மௌனப் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க முடியாது. அரசு உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்‘ என்று உயர் நீதிமன்றம் இடித்துரைத்தது. ஜனவரி 9 அன்று நீதிமன்றம் விசாரணையை முடுக்கிவிடுமாறு இஆஐயை கேட்டுள்ளது.
சிவப்பு குண்டராதிக்கம்
தலித் மாணவி வாழ்வே தரைமட்டமானது!
கொச்சி அருகே உள்ள திருப்புணித்துறா ஆர்.எல்.வி. கலைக்கல்லூரியில், மோகினி ஆட்டம் பயின்று வந்த தலித் மாணவிக்கு மார்க்சிஸ்டு கட்சியை சேர்ந்த மாணவர்கள் கொடுத்த தொல்லைக்கு அளவே இல்லை. ‘இந்திய மாணவர் பெருமன்றம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த அவர்கள், தலித் மாணவியின் நெஞ்சத்தைத் தகாத வார்த்தைகளால், குத்திக் கிழித்தார்கள். இதையடுத்து, தலித் மாணவி அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளைப் போட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்றார். தற்கொலை செய்துகொள்வது ஏன்” என அவர் குறிப்பு எழுதிவைத்துள்ளார். அதில், இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்தது என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஏபிவிபியைச் சேர்ந்தவர்களுக்கும் இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து வாக்குமூலம் அளித்தவர்களில் தலித் மாணவியும் ஒருவர். தங்களைப் பற்றி புகார் கூறிவிட்டாரே! என்ற ஆத்திரத்தில் தலித் மாணவியை இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்தவர்கள் அச்சுறுத்தினார்கள், அல்லல்படுத்தினார்கள். மாணவிகளின் விடுதிக்குள் அத்துமீறிப் புகுந்து ஆபாச சுவரொட்டிகள் ஒட்டினார்கள். மாணவியை வசைபாடினார்கள். இதனால், மாணவியின் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணமும் ரத்தாகிவிட்டது. மோதல் முற்றியதையடுத்து, ஆர்.எல்.வி. கலைக் கல்லூரி இழுத்து மூடப்பட்டுவிட்டது. கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலித் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலை படிப்படியாகத் தேறி வருகிறது.