நாமெல்லாம் காடன், மாடன் போன்ற சிறு தெய்வங்களை வணங்குகிறோம் என்று நம்மில் சிலரே குறை காண்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே, தெய்வத்தில் ஏது உயர்வு, தாழ்வு? நாமெல்லாம் ‘தெய்வம் உண்டென்றிரு, ஒன்றென்றிரு’ என்பதை நம்புபவர்கல் அல்லவா?
உண்மையில் பார்த்தால் காடனையும் மாடனையும் வழிபடுவதற்கு நாம் ஒன்றும் வெட்கப்பட வேண்டியதில்லை. ஏன்? காடன் என்றால் விஷ்ணுவையும் மாடன் என்றால் சிவனையும் சுட்டுகின்றன என்று தமிழும் படித்து பக்தியிலும் தோய்ந்தவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். சங்க இலக்கியங்கள் நிலத்தை ஐவகையாகப் பிரிக்கின்றன. அவற்றுள் ஒன்று முல்லை. முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமும். தமிழ்நாட்டில் காட்டுமன்னார் கோயில் ஒரு பிரசித்தி பெற்ற பெருமாள் ஆலயம் அமைந்த ஊர். இயற்கையில் எங்கு பார்த்தாலும் இறைவனே என்ற மனோபாவம் தமிழ்நாட்டோடு நிற்கவில்லை. யமுனை நதிக்கரையில் கண்ணன் தன் தோழர்களோடு மாடு மேய்த்தும் ஆடிப்பாடியும் மகிழ்ந்த பிருந்தாவனம் (துளசிக்காடு) நம் அனைவருக்கும் புனிதமானது தானே.
இன்னும் சற்றே மேலே போனால் ஒரு வனமே பெருமாளாகப் பார்க்கப்படுகிறது என்பதை அறிவோமா? ஆம். இறைவன் தன்னைத் தானே வெளிப்படுத்திக் (ஸ்வயம்வியக்த) கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய ஸ்தலங்களுள் ஒன்று நைமிசாரண்யம், நீம்சார், நிம்கார் என்றும் அழைக்கப்படுகிறது. திருமால் தன்னுடைய சக்ராயுதத்தால் தானவாசுரன் என்ற கொடிய அரக்கனை ஒரு நிமிஷத்தில் சம்ஹாரம் செய்தமையால் இந்த ஸ்தலத்திற்கு நைமிசாரண்யம் என்ற பெயர் தோன்றிற்று என்று வராஹ புராணம் கூறும் (அரண்யம் என்றால் காடு).
தனது தந்தையான பிரம்மாவின் கை தர்ப்பை மோதிரம் (பவித்ரம்) கழன்று விழுந்த இந்த நைமிசாரண்யம்தான் தவம்புரிய உலகிலேயே மிகச் சிறந்த இடம் என்று நாரதர் தேர்ந்தெடுத்ததாக கருதப்படுகிறது. அதேபோல இங்குள்ள சக்கர குண்டம், சந்திர குண்டம் போன்ற திருக்குளங்களும் பல புண்ணிய நதிகளும் மேன்மையானவை என்று போற்றப்படுகின்றன. இவற்றில் நீராடினால் பல பிறவிகளில் தொடர்ந்து ஒருவர் சுமக்கும் பாவமூட்டைகள் கரையும் என்பதும் நம்பிக்கை.
ஒரு முறை விருத்திராசுரன் என்ற அரக்கன் அந்நாள் வரை அறியப்பட்டிருந்த எந்தவொரு ஆயுதத்தாலும் தான் கொல்லப்படலாகாது என்று வரம் வாங்கி வைத்திருந்தான். பிறகென்ன? தேவர்களையும் மானுடர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். இந்திரனின் ஆட்சியைப் பறித்தான். அப்போது இறைவனிடம் சரணடைந்த இந்திரனுக்கு ஒரு புதிய ஆயுதம் பெற நைமிசாரண்யத்துள் தவம்புரிந்து வந்த ததீசி முனிவரை அணுகி, அவருடைய முதுகெலும்பைப் பெற்று வருமாறு கூறினார். இந்திரன் பணிவுடன் வேண்டவே, ததீசி முனியும் மனமுவந்து ஒப்புக் கொண்டார். அப்போது முனிவர், பல புண்ணிய தீர்த்தங்களும் நீராட வேண்டி தன் உடலை உதிர்க்க வேண்டுமே, அதற்கு என்ன வழி என்று யோசித்தபோது, இறைவன் ஆணைப்படி நைமிசாரண்யத்தின் குளங்களில் அனைத்து புண்ணிய நதிகளும் பாய்ந்து ததீசி முனிவர் தன்னெலும்பை ஈந்தார்.
இந்த வனப்பகுதி கோமதி நதியின் கரையில் அமைந்துள்ளது இந்த திருத்தலத்தில்தான். தான் வியாசரிடம் கற்ற பதினெட்டு புராணங்களையும் ஏனைய ரிஷிகளுக்கு முனிவர்களுக்கு போதித்தார். நைமிசாரண்யம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லட்சுமணபுரியில் (லக்னோ) இருந்து வடக்கே சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ளது. பெரியாழ்வார் இரண்டு பாடல்களாலும் திருமங்கையாழ்வார் பத்து பாடல்களாலும் மங்களா சாசனம் செய்துள்ளனர். திருமங்கை மன்னன் ஒவ்வொரு பாடலின் கடைசியிலும் ‘நைமிசாரண்யத்துள் எந்தாய்’ என்று இந்தக் காடனைப் பணிகிறார்.