சீனாவின் நண்டுப் பிடி நழுவியது! பாரதத்தின் கிடுக்கிப் பிடி இறுகுது!

 

ஜூன் மாதம் 16ந் தேதி முதல் டோக்லாம் பகுதியில் சீனா ராணுவத்தின் உதவியுடன் சாலை அமைக்க முற்பட்ட போது, இந்திய ராணுவம் தடுத்த நிறுத்தியது மட்டுமில்லாமல், பூட்டானை பாதுக்காக்கும் வகையில் தனது ராணுவத்தையும் நிறுத்தியது.  73 நாட்களாக சீனாவின் ஊடகங்களும், அதிகாரிகளும் கொடுத்த பேட்டி, விடுத்த அறிக்கை, எச்சரிக்கை இவற்றால், சீனா ஒரு பேட்டை தாதா போலத்தான் நடந்து  கொண்டது.  1962-ல் நடந்த யுத்தத்தை இந்தியர்கள் மறந்து விட்டார்கள் என எகத்தாளமாக விமர்சனம் செதது சீனா. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு போல் மோடியின் ஆட்சியும் இருக்கும் என்ற தவறான சீன கணிப்பின் விளைவு இது.

உலகில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் பாரதம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது.  சீனாவிற்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் அதிகார சக்தியாக, பொருளாதார சக்தியாக காட்சி தருகிறது.  ஆசிய நாடுகளின்  பொருளாதாரத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்கை கொண்டிருப்பதால் உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன.  ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா மூன்றாவது சக்தியாகவும், மிகவும் முன்னேறிய சக்தியாகவும் இருப்பதால், இந்த பின்னணயில் இரு நாடுகளின் துருப்புகள் ஒருவருக்கொருவர் பதற்றமான சூழ்நிலையில் எல்லையில் நிறுத்தப்படும் போது, ‘பிரிக்ஸ்’  நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய விவாதம் சீனாவில் நடப்பது  சரியாக இருக்காது என்றும், இந்தியா கலந்து கொள்வது கேள்வி குறியாகும் என்பதாலும் சீனா தனது வாலைச் சுருட்டிக் கொண்டது.

இந்தியா தனது ராஜதந்திர உறவுகளை உலக சக்திகளுடன் சிறப்பான முறையில் உறவை ஏற்படுத்திக் கொண்டது.   குறிப்பாக அமெரிக்கா. இது தவிர சீனாவின் எதிரி நாடுகளாக கருதப்படும், சீனாவின் அச்சுறுத்தலை அவ்வப்போது சந்திக்கும் ஜப்பான், மங்கோலியா, தென் கொரியா, வியட்நாம்  போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு நல்ல  நட்புகள் உருவாகியிருப்பதால், சீனாவுக்கு தனது எல்லைக்கே ஆபத்து என்ற பீதி படைகளை பின்வாங்கியது.

இந்திய-சீன ஏற்றுமதி இறக்குமதி ஏற்றத் தாழ்வால் சீனா பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக சீனாவின்  பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என்ற அச்ச உணர்வும் சேர்ந்துகொள்ள, தனது படைகளை டோக்கா லாம் பகுதியிலிருந்து வாபஸ் பெற சீனா முடிவு செதுள்ளது.  சீனாவில் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடந்து வருகிறது; சீனாவின் பொருளாதாரம் பாராட்டும் படி கிடையாது.  1962 போல் சீனா-இந்தியா போர் வந்தால், சீனாவை அதிக அளவில் பாதிக்கும் என்ற சிந்தனை வந்தததால் தனது துருப்புகளை சீனா விலக்கிக் கொண்டது.

சுமார் 50 பில்லியன் டாலர் அளவிற்கு சீனா பாகிஸ்தான் பொருளாதார காரிடர் மற்றும் ஒரே சாலை ஒரே மண்டலம் என்ற திட்டம் தவிடு பொடியாகிவிடும். இந்த இரண்டும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகள்  வழியாக செல்வதால், மேற்படி பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்ச உணர்வே மிகவும் முக்கியமான காரணமாக ஆவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் அண்டை நாடான இலங்கையும் இந்தியாவிற்கு ஆதரவாக கருத்து கூறியதும் கவனிக்க தக்கது.  2007-ல் இந்தியாவிற்கும்  பூட்டானுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பூட்டானின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு.  சீனாவின் அச்சுறுத்தலுக்கு பாரதம் பணிந்து இருக்குமானால், இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்கு இந்தியாவை நம்பாமல், சீனாவின் பக்கம் சாயும் அபாயம் ஏற்படும், இதன் காரணமாக இந்தியா பலவீனப்பட்டிருக்கும். துணிச்சலாக சீனாவின் ராணுவத்தை தடுத்து நிறுத்தியதன் காரணமாக அண்டை நாடுகளின் மத்தியிலும், உலக அரங்கிலும் இந்தியாவின் மரியாதை உயர்ந்தது என்பதை நன்கு உணர்ந்த காரணத்தாலும், மோடியின் ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாகவும், அண்டை நாடுகள் சீனாவின் பக்கம் சாயாமல், பாரதத்தின் பக்கம் தங்களின் ஆதரவை தெரிவித்ததால், இந்த வாபஸ் நடவடிக்கை என பலர் கூற தொடங்கினார்கள்.

கடந்த மூன்றாண்டுகளாக மோடி அவர்களின் சுற்றுப் பயணம் என்பது, ராகுல் காந்தி போல் பொழுது போக்கு உல்லாச சுற்றுப் பயணம் அல்ல, மோடியின் சுற்றுப் பயணத்தை பற்றி வியட்நாம் நாட்டின் வெளியுறவு அமைச்சரும், துணை பிரதம மந்திரியுமான பம் பின் மிக். தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவு வைத்துக் கொண்டு, இந்த பிராந்தியத்தில் தெற்கு சீன கடலின் சுதந்திரத்தை காக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு” என்று கூறியது இதன் காரணமாகவே மோடி  தங்களின் ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக கிழக்கு கொள்கையை செயல்படுத்த, தென் கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.  இந்தியாவின் மீது சீனா போர் தொடுக்குமானால், இந்த நாடுகளின் வழியாக அதாவது தென் சீன கடல் வழியாக போர்க் கப்பல்கள் வருவதை தடுக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும்; அந்த நாடுகளின் எல்லைகளில் சீனாவின் எல்லைப் பிரச்சனை வேறு தீவிரமாகும். இதனால், சீனாவை ஒரு கட்டுக்குள் வைக்கக் கூடிய ஆற்றல் இந்தியாவிற்கு மட்டுமே உண்டு என்பதை தென் கிழக்கு நாடுகள் உணர்ந்துள்ளன.

இந்த நாடுகளின் அச்சத்தை போக்கும் விதமாக, வட கொரியா அணு வெடிப்பு சோதனை செத போது, இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்தது மட்டுமில்லாமல், ஐ.நா. சபையில் வட கொரியாவின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தது.  இதனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மத்தியில் அவர்களின் பாதுகாப்பிற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை பாரதம் ஏற்படுத்தியதன் விளைவு, சீனா டோக்லாம் பகுதியிலிருந்து தனது படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொண்டது.

பிரதமர் மோடி, சீனாவிற்கு ஒரு தடுப்பு அமைக்க வேண்டும் என்பதற்காக நடத்திய பேச்சு வார்த்தை என்பதை கூட அறிவுசார்ந்த எதிர்கட்சியினர் புரிந்து கொள்ளாமல், விமர்சனம் செதார்கள்.   2015-ல் மோடியின் சுற்றுப் பயணத்தில் இடம் பெற்ற நாடுகள், மங்கோலியா, வியட்நாம், தென் கொரியா, ஜப்பான் போன்றவை.   இந்த நாடுகள் சீனாவுடன் எல்லைப் பிரச்சினையில் உள்ள நாடுகள்.  4,677 கி.மீ தூரம் உள்ள சீனா மங்கோலியா எல்லையில் 2906 கி.மீ. பிரச்சினைக்குரியது; இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.  795 கி.மீ. எல்லைப் பிரச்சினைக்குரிய நாடு வியட்நாம்; இரண்டு தீவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் சிக்கியுள்ள நாடு ஜப்பான்.  தென் கொரியாவும் சில தீவுகள் சம்பந்தமான பிரச்சினையில் சிக்கியுள்ளது. இதுபோல சீனா 18 நாடுகளுடன் இன்னும் எல்லைப் பிரச்சினையில் தீர்வு காணவில்லை.  18 நாடுகளில் நட்பு நாடுகள் என்றால் பாகிஸ்தான் வட கொரியா அவ்வளவுதான்!