குடும்பத்திற்குள் இறங்கும் விஷ ஊசிகள்

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ‘சொல்வதெல்லாம் உண்மையா?’ என்ற தலைப்பில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதே போன்று நிர்மலா பெரியசாமி, குஷ்பூ போன்றோரும் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ‘ரியாலிட்டி ஷோ’ என்ற பெயரில் இதேபோன்று பல தொலைக்காட்சிகள் நடிகைகளை வைத்து நடத்தி வருகின்றன பெரும்பாலும் கள்ளக் காதல், தகாத உறவு போன்றவைகளே. இந்த ‘ஷோ’க்களில் அலடசப்படுகின்றன. நான்கு சுவர்களுக்குள் பேசி முடிக்க வேண்டிய அந்தரங்க விஷயங்களை லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளில் வெளிப்படுத்துவது அநாகரிகம் என்ற சொரணை கூட இல்லாமல் ஒளிபரப்புகிறார்கள்.

குடும்பத்தில் பிரச்சினைகள் வந்தால் அதைத் தீர்ப்பதற்கு குடும்ப நல கோர்ட்டுகள் இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மகளிர் காவல் நிலையத்தில் தெரிவித்து அதற்கான தீர்வைப் பெறலாம். அதை விட்டுவிட்டு தொலைக்காட்சிகளில் டமாரம் அடிப்பது கேவலம். பெரும்பாலும் இதுபோன்ற நிகழ்சிகளில் ஏழை, எளிய மக்களையே தேடிப் பிடித்துக்கொண்டு போய் காட்டி இழிவுபடுத்துகிறார்கள். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தங்களுடைய தகாத உறவுகளை நாலு பேர் பார்க்கும் விதத்தில் விவாதிக்கச் செய்கிறார்கள். இதனால் எந்த ஒரு குடும்பப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. மாறாக வஞ்சகமும் பழிவாங்கும் எண்ணமும்தான் அதிகரிக்கும். அடுத்தவர்களுடைய குடும்பத்தில் நடக்கும் இதுபோன்ற கீழ்த்தரமான விஷயங்களை கேட்பதோ, பார்ப்பதோ மட்டமான ரசனை. இதைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகள் தங்களுடைய பார்வையாளர் எண்ணிக்கையை (டி.ஆர்.பி. ரேட்டிங்) அதிகப்படுத்திக்கொள்வது படு கேவலம்.

பல தொலைக்காட்சிகளில் வருகின்ற சீரியல்கள் பணத்துக்காக ஆணோ பெண்ணோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று போதிக்கின்றன. தொடர்ந்து இத்தகைய சீரியல்களை பார்த்து வருகிறவர்களின் மனம் கெட்டுப்போவது யாருக்கு நல்லது?

தொலைக்காட்சிகளுக்கு உள்ள சுயதணிக்கை நெறி முறையை கண்டிப்பாக அமல் செய்ய பாரத அரசு ஆவன செய்ய வேண்டும்.