மரத்தில் காய் காய்க்கிறது. அது காயாக இருக்கும்வரைதான் இயற்கை அதை மரத்தோடு பிணைத்து வைக்கிறது. காய் கனியாக கனியும்போது காம்பிலிருந்து விடுபட்டு விடுவதுதான் இயற்கை. கனியாகும்போதுதான் காயைவிட பயன் அதிகமாகும். ருசியும் தான். ஒருவருடைய பணிக் காலம் காய் என்றால், பணி ஓய்வுக் காலம் கனிந்து ருசிக்கும் கனி.
பள்ளிப்படிப்பை முடித்ததும் மேற்கொண்டு என்ன படிப்பது என்று சிறுவன் திகைப்பான். படிப்பெல்லாம் முடித்ததும் என்ன வேலை செய்வது என்று இளைஞனுக்குத் திகைப்பு. வேலையில் சேர்ந்து பணிக்காலம் முடிந்து பணி ஓய்வும் வரும்போது பக்குவப்பட்டவருக்கும் திகைப்பு: சும்மா இருக்காமல் என்ன செய்வது என்று.
இந்த திகைப்பு சிலருக்கு நகைப்பு ஏற்படுத்தும். காரணம் அவர்கள் பள்ளி ஆசிரியராக இருப்பார்கள்; பணி ஓய்வுப் பெற்ற பிறகு கல்வி தானம் செய்து காலத்தை ஓட்ட முடியுமே. அல்லது டாக்டராக இருப்பார்கள்; அவர்களுக்கு பணி ஓய்வு என்பதே கிடையாது. கை நடுக்கம் ஏற்படும் வயதிலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தந்தபடியே வாழ்நாளை ஓட்ட முடியும்.
இதுபோன்ற வகைகளைச் சேராத பணிகளில் ஈடுபட்டு குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர்கள்தான் பொதுவாக பணி ஓய்வுக்குப் பிறகு என்ன செய்து ஊருக்கு உபயோகமாக வாழலாம் என்று புரியாமல் தவிப்பார்கள்.
ஹிந்து மூதாதையர்கள் ‘வானப்பிரஸ்தம்’ என்ற ஒரு காலகட்டத்தை வகுத்து தந்திருக்கிறார்கள். உடல் தளரும் வேளையில் ஊருக்கு உபயோகமாக இருக்கவேண்டும் என்ற நினைப்புடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது வானப்பிரஸ்தத்தின் சாரம். இது இன்றைய காலகட்டத்தோடு எப்படி பொருந்தும்? பார்ப்போம்.
அட்டைப்படத்திலும் இந்தப் பக்கங்களிலும் வீட்டுத் தோட்டம், மொட்டை மாடித் தோட்டம் போட்டு பயன்பெறுகிற குடும்பங்களைச் சந்திக்கிறீர்கள். குடும்பத் தலைவர் பணி ஓய்வு காலகட்டத்தில் இதுபோன்ற எளிமையான பயிர்த் தொழில் செய்து நிம்மதியாக வாழமுடியும். மற்றவர்களை வாழ வைக்கவும் முடியும்.
ஏதாவது ஒரு அலுவலகத்தில் கோப்புகளை கவனிக்கும் அன்பர்கள், தச்சுவேலை போன்ற தொழில் சார்ந்த பொழுதுபோக்கு வைத்திருப்பார்கள். அவர்கள் பணி ஓய்வுக் காலமும் சுமுகமாக நடைபெற தச்சுவேலை அவர்களுக்கு கை கொடுக்க முடியும்.
கோயம்புத்தூர் பகுதியில் பல ஆண்டுகளாக ஆயுர்வேத டாக்டராக பணிபுரிந்து வந்த டாக்டர் சதீஷ் தனது மனைவியுடன் என்ன ‘பொழுதுபோக்கு’ ஏற்றெடுத்துக்கொண்டார் தெரியுமா? பள்ளிக்கூட வசதி இல்லாத தொலைதூர மலைவாழ் மக்கள் குழந்தைகளுக்கு வீட்டு வாசலில் கல்வியைக் கொண்டுவரும் ‘ஏகல் வித்யாலய’ (ஓர் ஆசிரியர் பள்ளி) இயக்கத்தில் அந்த தம்பதி தங்களை பணிக்காலத்திலேயே ஈடுபடுத்திக்கொண்டார்கள். ஊருக்கும் உபயோகம். உள்ளத்துக்கும் ஒரு பக்குவம். (சென்ற வாரம் டாக்டர் சதீஷ் காலமானார் என்பதுதான் சோகம்).
இந்திய விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தபால் துறையில் மறுபடியும் பணியில் சேர்ந்து அதிலிருந்தும் ஓய்வு பெற்ற அன்பரிடம், இனி வாழ்க்கை அவ்வளவுதானா?” என்று கேட்டபோது கம்பீரமாக புன்னகை பூத்தார் அவர். பணிக் காலத்திலேயே பல ஆண்டுகளாக அவர் வீட்டைத் தேடி வருபவர்களுக்கான அடையாளம், தெருக்கோடியில் வரும்போதே அதிகாலையில் அவரது கணீரென்ற பஜனை கானம். அலை அலையாக வீதி நெடுக பரவும் அந்த அதிர்வுகள் அவரது பணி ஓய்வுக் காலத்தை, மிகவும் பிசி ஆக்கிவிட்டது என்றால் மிகையல்ல.
பணி ஓய்வு காலத்தில் இதைச் செய், இதைச் செய்யாதே என்று சங்கதிகளை பட்டியல் போடுகிற பழக்கமும் உண்டு. அந்த பட்டியலில் இருந்து ஒரு சில: 1) எதையும் அனுபவித்து செய்யுங்கள், 2) எடை கூடாதீர்கள், 3) நடைபயிற்சியை கைவிடாதீர்கள், 4) காசு பண விஷயத்தில் மிதமாக இருங்கள், 5) நோய் வந்தால் இயற்கை மருந்துகளை நாடுங்கள்… என்று யோசனைகளை மிக விரிவாக போட்டு பரப்பிய ஒரு ஜப்பானிய டாக்டர் பற்றி விஜயபாரத்திற்கு சுவையாக தகவல் அனுப்பியிருக்கிறார், வாசகர் மன்னை மாதவன்.
போன விஜயபாரதம் அட்டைப்படக் கட்டுரை தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வது குறித்து அமைந்தது. அரசின் தொழுநோய் சிகிச்சை பிரிவு பணியாளராக இருந்த சந்திரன் தனது பணிக்காலத்திலேயே தொழுநோயாளிகளின் தேவையை தெரிந்து வைத்திருந்ததால் பணி ஓய்வு காலத்தில் அவரால் அந்த சகோதரர்களுக்கு சேவை செய்வதில் மிகவும் உபயோகமாக இருக்க முடிகிறது என்பது கூடுதல் தகவல். சந்திரன் ஒரு உதாரணம் மட்டுமே. அவர் போல இன்னும் பலர்.
மும்பையில் வெற்றிகரமான வணிகப் பிரமுகராக இருந்த ஒரு அம்மையார், ‘சம்பாதித்தது போதும்’ என்ற எண்ணம் வந்ததும் கோவையை அடுத்த ஒரு சிற்றூரில் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் தனது பணி ஓய்வு காலத்தை பயன்படுத்தினார். அதற்காக அங்கேயே அவர் செட்டில் ஆனார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதுபோல ‘ஏதாவது நல்லது செய்யவேண்டும்’ என்ற எண்ணத்தை பணிக்காலத்தின் போதே மனதில் வளர்த்துக்கொண்டு பொம்மை செய்வது, சித்திரம் வரைவது, வீட்டுத் தோட்டம் போடுவது, பஜனை, யோகா, புத்தகம் சேகரிப்பது என்று ஏதாவது உபயோகமாகக்கூடிய பொழுதுபோக்கை தேடிக்கண்டுபிடித்து அன்றாட வாழ்க்கையில் இசைத்துப் பொருத்திக் கொண்டால் பணி ஓய்வு காலத்தில் அது கைகொடுக்கும் என்பது மட்டுமல்ல மனதும் அதற்கு ஏற்றாற்போல இசைந்து கொடுக்கும்.
லாபம்?
* சம்பாதிக்காத காலத்திலும் ஒருவர் தனக்கு மனதுக்குப் பிடித்த செயலில் ஈடுபட முடியும். அதனால் மன நிம்மதி.
* உபயோகமாக பொழுதை கழிப்பதால் வீட்டாரிடம் குறையாத அன்பு.
* அக்கப்பக்கத்துக்கு பயனுள்ள வகையில் ஒருவர் பொழுதுபோக்கு அமைந்தால் கேட்கவே வேண்டாம், பரிவும் பாராட்டும் குவியும்!
(குரு சிவகுமார் உதவியுடன்)