சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தி ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸாரை, ‘‘மசூத் அஸார் ஜி’’ என்றார். காங்கிரஸ் கட்சியை பொறுத்த மட்டில், தேச பக்தர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் பயங்கரவாதிகளை மரியாதையாக அழைப்பதும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் வாடிக்கை. தனது தாய்நாடு பாரத தேசம் என்பதையே மறந்து விட்டு பாகிஸ்தானுக்கு விசுவாசமாக நடக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் சொல் ‘‘ஜி’’.
1998-ல் கோவையில் அத்வானியை கொல்ல நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் மதானியை சிறையில் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் உண்டு. 2008 பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட மதானியை விடுவிக்க கேரள காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடக தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்த நிகழ்வு நடந்துள்ளது. அன்றைய கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி கர்நாடக முதல்வர். ஜகதீஷ் ஷெட்டருக்கு மதானியின் மகள் திருமணத்திற்கு வர ஜாமீனில் அவரை விடுவிக்க தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, மதானியை ஜாமீனில் விடுவிக்க கேட்ட பிணையத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால், குறைக்க கோரி கடிதம் எழுதினார். குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியான அப்துல் நாசர் மதானிக்காக வாதாடிய காங்கிரஸ் கட்சி, மாறாடு (கேரளா) கலவரத்தின் போது, தாக்குதல் நடத்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே ஊடகங்களில் பேசினார்கள்.
நாடு முழுவதும் நடந்த பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளிலும், பயங்கரவாத செயல்பாடுகளிலும் சிமி இயக்கத்தினருக்கு பங்கு உள்ளது என்ற ஆதராங்களின் அடிப்படையில், அந்த அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்த போது 2006 ஜுலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் சிமி இயக்கத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் சல்மான் குர்ஷித். இவர் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர். இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், ஆமதாபாத், ஜெய்ப்பூர், டெல்லி குண்டு வெடிப்புகளிலும் 2006-ல் நடந்த மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் சிமிக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சராக இருந்த சுசீல் குமார் ஷண்டே தெரிவித்தார். பயங்கரவாத அமைப்பு என தெரிந்தும், நீதி மன்றத்தில் வழக்கிற்கு ஆஜரானது, தொழில் தர்மம் என பிதற்றினர் சல்மான் குர்ஷித். இவர்கள் தான் பயங்கரவாதிகளுக்கு சர்வ மரியாதை கொடுப்பவர்கள்.
2001 முதல் 2016 வரை அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காகவே பயங்கரவாத, பிரிவினைவாத, தடை விதிக்கப்பட்ட அமைப்பான உல்பாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.
இந்தியாவில் நடந்தும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாகயிருந்து செயல்படும் நாடு பாகிஸ்தான். லஷ்கர்–இ–தொய்பா, ஜெய்ஷ்–இ–முகமது என்ற இரண்டு அமைப்புகளை உருவாக்கியது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்பது உலகறிந்து விஷயம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தானின் டி.வி. நடத்திய விவாதத்தில், பாகிஸ்தான் இந்தியா பேச்சு வார்த்தை மீண்டும் தொடர வேண்டுமானால், இந்தியாவில் பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும், மோடி ஆட்சியில் இருக்கும் வரை பேச்சு தொடர முடியாது என்றார். ஆனால் பாரதத்தில் பயங்கரவாத செயல்களை செய்யும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற சிந்தனை
யில்லாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி, 2001-ல் சிமி மீது தடைவிதிக்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தில், தடைவிதிப்பதால் மட்டும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என சிமிக்கு ஆதரவாக பேசியவர். நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்க முற்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குருவுக்கு ஆதரவாக டெல்லி ஜவஹர்லால் பல்கலை கழகத்தில் இடதுசாரி மாணவர்கள் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், பாரத தேசத்தை துண்டு துண்டாக்குவோம் என கோஷமிட்டவர்கள் மத்தியில் பேசியவர் ராகுல்காந்தி. இவர்களுக்கு தேசத்தின் பாதுகாப்பை விட ஆட்சியில் அமர வேண்டும் என்பதே முக்கியம்.