எண்ணம் மகிழும் திருநாளாம் – தீபஒளி
எங்கும் ஒளிரும் புதுநாளாம்
மண்ணெலாம் அருள்மழை பெய்திடுமே – நம்
மனதெலாம் மகிழ்ச்சியில் உய்த்திடுமே!
பத்து அவதாரம் எடுத்தவனே – போரில்
பகவத் கீதையைத் தொடுத்தவனே!
முத்துக் குவியலின் கீதங்களே – கண்ணன்
மோகனப் புன்னகை ராகங்களே!
யதுகுல மக்களின் வழிகாட்டி – நாட்டில்
பொதுநலம் புகலும் தேரோட்டி
யதுகுலச் சமூக வானஒளி – பக்தி
அருள்தரும் இன்ப ஞானவெளி!
ஆள்வார் பக்தியின் நாயகனே – நம்
அன்னை யசோதையின் சேயவனே!
சூழ்வார் துயரம் துடைப்பவனே – நீண்ட
தொன்மை உலகத்தைப் படைத்தவனே!
இன்னல் வந்திடின் ஒழிப்பவனே – அசுரன்
இம்சையை நாட்டில் அழித்தவனே
அன்பால் மக்கள் வாழ்ந்திடவே – அரசு
ஆண்டிட வேண்டும் என்றவனே!
தொண்டு செய்து இருப்பதுதான் – நல்ல
தோழமை என்று சொன்னவனே!
பண்டு யமுனையில் வளர்ந்தவனே – திவ்யப்
பாடலில் நின்று ஒளிர்ந்தவனே!
ஆண்டாள் சூடிய மலர்மாலை – கண்ணன்
ஆர்வம் கொள்ளும் அதிகாலை
வேண்டுதல் கேட்கும் நற்செவிகள் – உலகின்
வேதனை தீர்க்கும் அருள்மொழிகள்
வண்ணம் பொருந்திய மாயோனாம் – வெள்ளை
மலர்மணம் பரவும் தூயோனாம்
கண்ணனைப் பாடி மகிழ்ந்திடுவோம் – அவன்
காலடி தொட்டித் தொழுதிடுவோம்!