இன்னொரு வரிவிதிப்பு, இன்னொரு எதிர்ப்பு!

நாடு நெடுக திருப்பதி கோயில் உள்பட எத்தனையோ கோயில்களில் பிரசாதத்தின் மீது வரி போட்டிருப்பதை விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் செய்துள்ளது. பக்தர்கள் பூஜைக்கு பயன்படுத்தும் ஊதுபத்தி சாம்பிரானி, பசுநெய், விக்கிரகங்கள் போன்றவற்றிற்கும் வரி விதித்திருப்பது பரிஷத்தின் கண்டனத்திற்கு உள்ளானது. குஜராத்தில் ஜூன் 24, 25 தேதிகளில் நடைபெற்ற பரிஷத்தின் மத்திய நிர்வாக கவுன்சில்

கூட்டத்தின்போது இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டது. ஹிந்து சமய சம்பந்தமான பண்டங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை ரத்துசெய்யும்படி கேட்டுக்கொண்டு நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கடிதம் எழுதி கோரியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும் என்றும் பரிஷத் கோரியுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தவர்கள் பசுப்பாதுகாப்பை புறக்கணிப்பது விசித்திரமானது என்று பரிஷத்தின் ஆன்றோர்கள் சுட்டிக்காட்டினார்கள். பசுப்பாதுகாப்பாளர்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவது சதி வேலை என்றும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்றும் பரிஷத் கேட்டுக்கொண்டது. பசுவை  பாதுகாக்க காவல்துறை தவறும்போது பசுப்பாதுகாப்பாளர்கள்தான் வீதிக்கு வரவேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.