சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அன்பர் பாலசுப்பிரமணியம் மகளுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சாதாரணமாக இதுபோன்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் காதை அடைக்கும் கச்சேரியும், உற்சாகம் மீறினால் ஆட்டம் பாட்டமும் நடைபெறும். ஆனால் விதிவிலக்காக இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான தன்னலமற்ற தொண்டு அமைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
விருப்பமுள்ளவர்கள் கண் தானம், ரத்த தானம், தேக தானம், உடல் உறுப்பு தானம் செய்வதற்கு படிவங்கள் வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. ஏராளமானவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தன் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நாட்டுக்கு பயன்படும் விதத்தில் நடத்திய பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நமது பாராட்டுகள்.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டு சிறுவர்கள் (இவர்களுக்குப் பின்னணியில் கிறிஸ்தவ மிஷனரிகள் இருக்கலாம்) தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தடைசெய்ய வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. பொதுவாகவே தீபாவளி, விநாயகர் சதுர்த்தி வந்தால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கு பேய் பிடித்துவிடும்.
‘த இந்து’ தமிழ்ப் பத்திரிகையில் (சென்னை பதிப்பு) 28.10.2015 அன்று 9ம் பக்கத்தில் உங்க சாப்பாட்டுல பீப் இருக்கா?” என்ற தலைப்பில் கே.கே. மகேஷ் என்பவர் எழுதிய ஒருபக்கக் கட்டுரை வந்துள்ளது. அதில் எந்த ஓட்டல்ல மட்டன் சாப்பிட்டாலும் மட்டன்தானா? இல்லை மாடாங்கிற சந்தேகம் தொடருது. இதே சந்தேகம் எல்லோருக்கும் வரும்னு நினைக்கிறேன். அதனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ‘அரை டவுசர்களை’ப் பூராம் இந்த மாதிரி ஓட்டல்களுக்குக் கங்காணியாப் போட்டு நம்ம கலாச்சாரத்தைக் காப்பாத்துங்க“ என்று தரக்குறைவாக எழுதியுள்ளார். இதுபோன்ற கருத்துகள் வருமானால் வாசகர்கள் தமது கண்டனங்களை சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு எழுதி அனுப்பி பதிவு செய்வது நல்லது.
வாழி நலம் சூழ.
ம. வீரபாகு, ஆசிரியர்