விஜயபாரதம் வரலாறு

பாரதம் சுதந்திரம் அடைந்த புதிதில் மக்களுக்கு நமது வரலாற்றை, நமது மொழிகளில், நம்மவர்களால் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதை தேசபக்தியுள்ள அனைத்து பெருமக்களும் உணர்ந்தார்கள். அதன் விளைவாக “நன்னெறி” பிறந்தது. 1948 மத்தியில் எளிமையான சிறு செய்தித்தாள் வடிவில் நன்னெறி வெளிவரத் தொடங்கியிருக்கலாம். கலாச்சார விழிப்புணர்வூட்டும் செய்திகளைத் தாங்கி வெளிவந்த வார இதழ் அது.

தமிழ் ஹிந்துவின் கலாச்சார தலைமை பீடமான மதுரை மாநகரில் இருந்து 1950 வாக்கில் “தியாகபூமி” வார இதழ் சஞ்சிகை வடிவத்தில் (Tabloid Format) வெளிவரத் தொடங்கியது. அதன் துவக்க கால ஆசிரியர்களுள் ஒருவர் சமூக சேவகரான ஒபுளா கே நித்யானந்தம். சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கியிருந்த பொதுமக்களுக்கு, தேசம் அன்னியர்களிடம் அடிமைப்பட்ட காரணங்களையும் அபாரமாக போராடி சுதந்திரம் பெற்ற வரலாற்றையும் எளிய தமிழில் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டுவதில் தியாகபூமி முன்னணி வகித்தது. இந்த வகையில் முதல் சுதந்திரப் போர் எனும் 1857 ல் மகத்தான பேரெழுச்சி நூற்றாண்டு கண்ட போது 1957 ல் தியாகபூமி அது குறித்து அரிய தகவல்கள் அடங்கிய மலர் ஒன்றை வெளியிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

1960 சுமாருக்கு தியாகபூமி தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் குடியேறியது. விரிவான வரலாற்று ஆய்வுக்கு பிறகு 1974 ல் சத்ரபதி சிவாஜி மஹாராஜா முடிசூட்டியதன் 300வது ஆண்டு விழா மலர் வெளியிட்டது தியாகபூமி. இது விழிப்புணர்வுள்ள பொதுமக்களின் கவனத்தை, கருத்தைக் கவர்ந்தது. தியாக மலர், தேசபக்தி மலர், தொண்டு மலர் என்று பண்பின் அடிப்படையில் அரிய தகவல்கள் தொகுத்து மலர்கள் வெளியிட்டு புகழ் பெற்றது. கலாச்சாரம் வற்றடிக்கப்பட்ட சூழலில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையினர் கண்ணில் அரிய பண்புகளைக் காட்டுவதற்காக இத்தகைய ஒரு பணியை சிரமேற்கொண்டது தியாகபூமி. அரக்கத்தனமான நெருக்கடி நிலவர ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தை தியாகபூமி ஆதரித்தது என்பதற்காக சர்வாதிகார அரசு அதை இழுத்து மூடியது. அதன் அப்போதைய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சர்வாதிகார தர்பாரை தூக்கி எறிந்து பாரதம் வெற்றிகரமாக தலைநிமிர்ந்த தருணத்தில் (விஜய பாரதம்!), 1979 ஸ்ரீ குரு பூர்ணிமை நன்னாளில் “விஜயபாரதம்” வார இதழ் சென்னையின் புகழ்பெற்ற கல்வியாளர் ஆர்.ஸ்ரீனிவாசனை ஆசிரியராகக் கொண்டு பிறந்தது. இது தியாகபூமியின் மறுபிறவி என்றே சொல்ல வேண்டும். ஊருக்குள் பிரிவினை வாதத்தையும் மொழி வெறியையும் கொண்டாடும் சூழல் பரவியிருந்த வேளையில் தன்னலம் இல்லாமல் மொழி, சாதி, சமய பேதம் பார்க்காமல் எளியோர் மத்தியில் தொண்டு புரியும் நல்லோர் பற்றி மக்களுக்கு எடுத்துச் செல்லும் அர்த்தமுள்ள பணியை விஜயபாரதம் தொடர்ந்து செய்தது. இதனால் தேசத்தின் உள்ளார்ந்த ஒருமை வலுவடைந்தது. மாநிலமெங்கும் பொது நூலகங்கள் உள்பட விஜயபாரதம் அமோக வரவேற்புப் பெற்றதில் வியப்பில்லை. இதழியல் பணியில் ஊரக இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தி, இதழியல் வகுப்பு நடத்தி, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, ஊக்குவித்து விஜயபாரதம் ஒரு புதுமை படைத்தது. இன்று எல்லா தமிழ் சேனல்களும் பிரபல தமிழ் நாளிதழ்களும் அத்தகைய இளைஞர்களை இருகரம் நீட்டி வரவேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக அதிநவீன டிஜிட்டல் அரங்கில் கால் பதிக்கும் விஜயபாரதம் நமது தாய்நாட்டின் தொண்டில் மேலும் மேலும் திறன்மிக்க கருவி ஆகிவிடும் என்பது உறுதி.