வீணாகாத கோடை விடுமுறை கற்றுக்கொள்ள பல கலைகள்

ஹா விடுமுறை! நினைத்தாலே இனிக்கிறது. தினமும் எழுந்ததில் இருந்து, பிடிக்கிறதோ, பிடிக்கலையோ, ஒரே அச்சில் வார்த்தது போல காரியம் ஆற்றுகிறோம். அதிலிருந்து, விடுதலை என்பது தான் இந்த விடுமுறைக் காலம் – கோடை விடுமுறை என்பது பழைய காலத்தில் இருந்ததில் இருந்து இப்போது மாறியுள்ளது.

முன்பெல்லாம் கோடை விடுமுறை என்றால் தாத்தா, ஆச்சி வீடு, மாமா, சித்தி, பெரியப்பா வீடு என சொந்தங்களைக் கொண்டாடும் விதத்தில் இருந்து வந்திருக்கிறது. இப்போது விடுமுறையிலும், காலை முதல் மாலை வரை, வகுப்புகளில் போட்டு, வரிசையாக நீச்சல், கராத்தே, கடம், வாய்ப்பாட்டு, வீணை, பெயிண்ட்டிங் என அவியலாக, எதிலும் நேர்த்தி இல்லாமல் பொழுது போக்குபவர்களும் பெருகி விட்டனர்.

மற்ற நாட்களில், ஆசை இருந்தும் செய்வதற்கு நேரமின்மை காரணமாக, ஒதுக்கி வைத்திருந்த ஏதோ ஒரு கட்டுக்கடங்காத விருப்பத்தினைப் பூர்த்தி செய்வதே, விடுமுறை நாட்களை ஆஹாவாக்குகிறது.thiran

அப்படி என்ன வித்தியாசமான ஆசைகள் நம் தமிழர்களுக்கு என்று சிலரிடம் கேட்கப் போக, ஓஹோ, இப்படி எல்லாம் கூட இருக்கிறதா என வியக்க வைத்தனர். என்னை அசத்தியது மட்பாண்டம் செய்வது. மிருதுவான களிமண், பிசைகையில் நம் கைகளில் ஆனந்தம் என்று விவரிக்கிறார் மீனாட்சி. சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி, அடையாறு என பல பகுதிகளில் வகுப்புகள் நடப்பதாகவும் சொன்னார். ‘கொள்வதற்கும் விட்டு விடுவதற்குமான சமநிலைதான் வாழ்க்கை’ என்பது மட்பாண்டம் செய்யும் குயவருக்கே உணர்வுபூர்வமாகப் புரிவது எளிது.

தஞ்சாவூர் சித்திரக் கலையைப் பாரம்பரியம் விரும்புவோர் ஆசைப்பட்டுக் கற்றுக்கொள்கிறார்கள். தஞ்சாவூர் ஓவியம் என்றவுடன், தன் கையால் வரைந்து பொன் வண்ணம் தீட்டி இரண்டாம் பட்டாலையில் மாட்டியிருக்க, அந்தப் பழைய வீட்டில் காற்றோட்டத்திற்காக விடப்பட்ட சிறிய ஓட்டை வழியே, சூரியக்கதிர்கள் லக்ஷ்மி படத்தில் விழுந்து ஜொலிப்பதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் தான். தன் கையால் செய்து மாட்டியது எவ்வளவு திருப்தியைத் தந்திருக்கும் என்பது அந்தத் தோழியின் முகத்தில் தெரிந்தது.

‘ஸ்கல்ப்டிங்’, சிற்பம் செதுக்குவது கூட பிரபலமான கோடை விடுமுறை செயல்பாடுகளாம். இந்தியப் பெருநகரங்களில் இப்படியெல்லாம் வசதிகள் இருப்பது சந்தோஷம் தருகிறது.

குட்டிக் குழந்தைகளுக்கு, களிமண்ணால் பொம்மைகள், சிறு பயனுள்ள பொருட்கள் செய்யச் சொல்லித் தருவதும் நடக்கிறது.

பையன்களுக்கு, சிறுவர்களுக்கு கால்பந்து, நீச்சல், சாஃப்ட்வேர், கொஞ்சம் பெரியவர்களுக்கு கோடிங், கிரிக்கெட், கூடைப்பந்து; எல்லோருக்கும் ஆளுமை வளர்த்துக் கொள்ள ‘பெர்சனாலிட்டி டெவலப்மென்ட்’. கராத்தே, சிலம்பம், ஏரோ மாடலிங், டெய்லரிங், ஃபேஷன் டிஸைனிங், ரோபாடிக்ஸ், வேத கணிதம், இசை, ஆர்ட் – கிராப்ட், என கலாட்டா தான். அவர் அவருக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்வது அவசியம்.

இவை எல்லாம் சென்னையில் தான் நடக்கின்றன என்று இல்லை. தமிழகம் முழுவதும் டவுன்களில் இப்படியான வகுப்புகள் அதிகம் முளைத்து விட்டன. ஸ்கேட்டிங் சக்கரங்களை மாட்டிக் கொண்டு சிறுவன் செய்து காட்டும் வித்தைகளைக் கண்டு நம்மால் நிச்சயம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. பாலன்ஸ், நிதானம், வேகம், காற்றைக் கிழித்துக் கொண்டு அழுத்தம் கொடுத்து வேகமாகச் செல்லும்போது ஏற்படும் அனுபவம் – இது புதுசு.

சரி, பழைய காலத்தில் என்ன செய்தோம்? யோசித்துப் பார்க்கிறேன். என் அப்பா ஷார்ட் ஹேண்ட் படிக்கக் கொண்டு சேர்த்தார். என் வயதை ஒத்தவர்கள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் செல்லாதவர்களே இல்லை எனும் அளவிற்கு லோயர், ஹையர் என பாஸ் பண்ணிக் கொண்டு இருந்தார்கள். என்னடா ஒரு தேசமே டைப்பிஸ்டு ஆகிவிடும் போலிருக்கிறதே என நான் வியந்தது உண்டு. தூத்துக்குடியில் வசதியான வீட்டுப் பிள்ளைகள் கிட்டார் கற்றுக் கொண்டார்கள். நெல்லையில் பரதம் கற்க என்று போவார்கள். இப்போது வீட்டிலேயே கோலம், சமையல், மனம் அறிவு கண்களுக்கு பயிற்சி தரும்  பல்லாங்குழி, பாண்டி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொள்ளலாம்.   கிராமத்துக்கு போனால் பல வகை பயிர்களை, பாசன முறையை அறிந்துகொள்ளலாம். பெரியவர்கள் கூறும் வீட்டு வைத்தியத்தை, கிராமபுற பாட்டுகளை பதிவு செய்யலாம். இப்போது கேட்க வேண்டுமே – குழந்தைகள் என்னவெல்லாம் செய்கிறார்கள்!

மீன் பிடிக்கிறார்கள். கவிதை எழுதுகிறார்கள், வெப்சைட் புதிதாக உண்டு பண்ணுகிறார்கள். முகநூல் பக்கங்களில் உலாவருகிறார்கள். கூடைப்பந்து, செல்லப் பிராணி வளர்ப்பு, புதிய கேச அலங்காரம், மாடித்தோட்டம், போட்டோ கிராஃபி, வீடியோ பயிற்சி, செல்போன், கம்ப்யூட்டரில் சிப்லெவல் வரை கற்றுக் கொள்ளுதல், சாஃப்ட்வேர் படிப்புகள், செஸ், அனிமேஷன், ஓவியம், சுற்றுலா சென்று அதை பதிவு செய்தல் என்று அவர்களுக்குத் தான் செய்ய எத்தனை இருக்கிறது!

 

சேவாபாரதியின் பண்பாட்டு வகுப்புகள்

சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பாக பல்வேறு இடங்களில் நடத்தப்படும் கோடைகால பண்பாட்டு வகுப்புகள் குழந்தைகளின் வெறுமையைப் போக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

அதில் குழந்தைகள், பஜன், வினாடி வினா, தேசபக்திப் பாடல்கள், கதை சொல்லுதல், பொன்மொழிகள், நல்ல பழக்க வழக்கங்கள், விளையாட்டுகள் என எல்லாவற்றையும் கற்று மகிழ்வுடன் விடுமுறையை பயனுடன் அனுபவிக்கிறார்கள்.

இந்தாண்டு சென்னையில் பல சேவா மையங்களில் ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் பேசுதல், தேவாரம், திருப்புகழ் பாடல் வகுப்புகள், நாளிதழ் புத்தகங்கள் வாசிப்பும் கருத்துப் பரிமாற்றமும் பாரம்பரிய விளையாட்டுகள், கூட்டாஞ்சோறு, அடுப்பில்லாத சமையல் விருந்து போன்ற பல்வேறு சிறப்பான வகுப்புகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளது.

இவை அனைத்தும் முற்றிலும் இலவசம். பங்கு பெறுவோருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

பகுதிவாசிகள் அல்லது நமது பண்பாட்டு வகுப்பு குழந்தைகள் மட்டுமல்லாது, அவரவர் வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு வந்திருக்கும் உறவுக்கார குழந்தைகளுடன் கலந்துகொண்டு, இனிமையான வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களையும் பெறலாம்.

தொடர்புக்கு: சேவாபாரதி மத்திய அலுவலகம், 9444 777 106, 044 – 26424076

 தகவல்: காஞ்சனமாலா

 

 

சேவிகா சமிதியின் தேசிய ஒருங்கிணைப்பு முகாம்

பெண்களை தன்னம்பிக்கையுடன் சுய சிந்தனையுடன் தானும் தேசத்திற்கு சேவைசெய்ய தன் குடும்பத்தினரையும் மற்றவர்களையும் ஈடுபடுத்தி, இளைய சமுதாயத்தினரை, நேர்மை நிறைந்தவராக, உழைப்பாளியாக, தேசிய சிந்தனையாளராக உருவாக்க ஹிந்து தர்ம வழி வாழ்க்கைமுறையை பின்பற்றிட, ஹிந்து பெண்களை, குடும்பங்களை ஒன்றிணைத்திட, உள்ளத்தூய்மை, துணிவு, தன்னலமின்மை இவற்றைப் பெற்றிட, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெண்களை ஒன்றிணைத்து வரும்  அகில பாரத பெண்கள் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதியின் பயிற்சி முகாம் இந்த வருடம் ஏப்ரல் 24 மாலை தொடங்கி மே 9 வரை நாமக்கலில் நடைபெற உள்ளது.

13 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடையவும்.

தொடர்புக்கு: 99419 87917, 99406 74384, 97919 58144

தகவல்: வித்யா ஸ்ரீதர்

 

 

நான் இலவச இணையதள பயிற்சி தினம் 2 மணி நேரம், 15 நாள் பயிற்சி பெற்று இப்ப இணையதள மூலம் மின்சார கட்டணம், ரயில்மற்றும் பேருந்து   பயண முன்பதிவு, சினிமா முன்பதிவு செய்து சம்பாதிக்கிறேன்.

-ஜெகன்னாத், திருச்சி

 

சிறுவனாய் இருந்த போது விளையாட்டாய் கோடை விடுமுறை கால் பந்து பயிற்சி எடுத்து கொண்டேன். வருடா வருடம் பயிற்சி நடக்கும். மற்ற நாட்களிலும் கால் பந்து விளையாடாமல் இருக்க முடியவில்லை. அப்படி ஆரம்பித்தது இப்போது ஜெர்மனி செல்லும் வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது.இரண்டு ரவுண்டு செலக்ஷன் முடித்து கிளம்புகிறேன். அங்கே பயிற்சி முடித்து நல்லா பெர்பாமான்ஸ் கொடுத்தால் ஜெர்மன் நாட்டு அரசு மேற்கொண்டு பயிற்சி, என் மேல் படிப்பு இரண்டையும் பார்த்து கொள்ளும்.கோடை விடுமுறைக்கு நன்றி.

-கனிஷ்க், சென்னை

 

நான் புடவைகளில் பெயின்ட்டிங் செய்ய கற்றுக் கொடுக்கிறேன், பெண்களுக்கு மட்டும். கோடை விடுமுறையில்  இதுபோன்ற புதிய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம்.

– கீதாஞ்சலி, விழுப்புரம்

போன கோடை விடுமுறையில், தோழிகளாக சேர்ந்து ஆரி ஒர்க் பண்ண கற்று கொண்டதில் சொந்தக்காரர்கள் நெறைய பேருக்கு சேலை ப்ளௌஸ் என்று ஆரி வேலைப்பாடு செய்து தருகிறேன். மனசு நிறைவாக பொழுதும் போகிறது.வருமானமும் ஆச்சு.கழுத்து வலிக்கிற மாதிரி இருந்தால் ரெஸ்ட் எடுத்து செய்யலாம்.வீட்டு வேலையும் பாதிக்கப் படாது.

– சுபா, மும்பை

 

இப்பொழுது வெயில் காலம் விடுமுறை , யோகா செய்ய பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளேன். இரண்டு  மாதங்கள் ஒழுங்காக மூச்சு பயிற்சி, ஆசனங்கள் எல்லாம் செய்ய உடம்பு லேசாக இருப்பது போல் உள்ளது. ராம்கோ நடத்தும் பயிற்சி மிகவும் பிரயோஜனம் ஆக உள்ளது.

– லேகா, ராஜபாளையம்

 

ஒவ்வொரு வருஷமும் எங்கள் அபார்ட்மெண்ட் குழந்தைகள் என் வீட்டில் நடக்கும் பாட்டு, ஓவியம் கிளாஸ்  ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். எனக்கும் சந்தோஷமாக இருக்கும்.அப்படி எக்ஸ்செஞ் புரோக்ராம்க்காக வியட்நாம் வரை போய் அங்கு குழந்தைகளுக்கு 2 மாதம் ஆங்கிலம் சொல்லி கொடுக்கும் சந்தோஷமும் கிடைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

– கவின், தூத்துக்குடி

 

என் பெயர் அனு. இரண்டு குட்டி குழந்தைகளின் தாய்.இந்த வருடம் கார் ஓட்ட கற்றுக் கொண்டேன். லைசன்ஸும் வங்கி விட்டேன். கார் ஓட்டக் கற்று கொள்வது சிரமமாக இல்லை. திருநெல்வேலியில் பெண்களே சொல்லி கொடுக்கும் டிரைவிங் பள்ளியில் கற்றது இலகுவாக இருந்தது. மைசூரு போனதும் ரொம்ப உதவியாக இருக்கும். அடுத்த வருடம் விடுமுறையில் டைலரிங்க் கற்றுக்கொள்ள ஆசை. ஒவ்வொரு வருடமும் ஒரு வித்தை, சின்னதோ பெரியதோ படித்து விடுவது என் வழக்கம்.

– அனு ரமேஷ்,மைசூரு

 

இந்த சம்மர்ல ‘மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிஷியால் இன்டலிஜென்ஸ்‘ படிக்க போகிறேன். ஆன்லைன்ல் படித்து வைத்துக் கொண்டால், காலேஜ் முடித்ததும் ப்ரொஜெக்ட் சேர்ந்து மேலும் திறமையை கூட்டினால் ஜோரான வேலை காத்திருக்குமே!

– அஷ்வின், கோவை