தமிழக பூதான யாத்திரையின்போது ஒரு நாள் ஆச்சார்ய வினோபா பாவேக்கு திருக்குறளை நன்றாக அறிந்த நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். அப்போது, ‘‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும்’’ என்று ஆரம்பிக்கும் குறளுக்கு உவமை கூறுமாறு அவரை வினோபா கேட்டார்.
‘‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்று முழுத்
திருக்குறளையும் கூறி அவர் அதற்கு உதாரணம் தந்தார்:
‘‘சிற்பி ஒருவன் கல்லில் ஒரு நாயின் சிலையை அழகாகச் செதுக்கி வைத்திருக்கிறான். தூரத்திலிருந்து பார்த்தால், அது அசல் நாய் போலவே காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில் அது கல்லா, நாயா என்று கண்டு கொள்வதுதான் அறிவு.’’ இந்த உவமையால் திருப்தி அடையாத வினோபாஜி, ‘‘நான் ஓர் உதாரணம் கொடுக்கிறேன், பாருங்கள்’’ என்று கூறி, கீழ்க்கண்டவாறு விளக்கம் கொடுத்தார்:
‘‘ஒரு எம்.எல்.ஏ.யும் வினோபாவுடன் யாத்திரையில் கலந்துகொள்ளுகிறார். பார்த்தால் பூமிதானத்தில் மிகுந்த அக்கறையுள்ள மிகவும் நல்ல ஒரு தொண்டர் போலவே அவர் காட்சியளிக்கிறார். ஆனால் உண்மையில் அவர் தமது எம்.எல்.ஏ. ஸ்தானத்தை அந்தத் தொகுதியில் ஸ்திரப்படுத்துவதற்காகவே வினோபாவுடன் வருகிறார். அதுதான் மெய்ப்பொருள். இதைக் கண்டு கொள்வதுதான் அறிவு’’ என்று கூறவே, கூடியிருந்தவர்கள் எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.
வினோபா மேலும், ‘‘இப்படிச் சொல்வீர்களா; இதை விட்டு விட்டு ‘சிற்பி’ என்று ஆரம்பித்து தத்துவம் பேசுகிறீர்களே!’’ என்று சொன்னார்.