சாமானிய மக்களின் உடல்நலம் கருதி மோடி அரசு எடுத்துள்ள ‘344 களுக்குத் தடை’ என்ற நடவடிக்கைகள் குறித்து பலத் தரப்பினரும் கருத்து கூறுகிறார்கள். கருத்துக்கள் அவர்களுக்கே உரியவை.
ஆங்கிலேயனின் கல்வி முறையை விடாப் படியாக வைத்திருக்கும் பாரதம் இங்கிலீஷ் மருத்துவமுறையை அதன் தீமைகளோடு சுவீகரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது அலோபதி மருத்துவத்தின் ஆரோக்கியமற்ற சீர்கேடுகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
மருந்துக் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு விலையை உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதில் மருந்து கட்டுப்பாடு அலுவலர்களும், மருத்துவர்களும் உடந்தை.
ஒரு வியாதிக்கு மருந்து வாங்கினால் (டாக்டர் சொல்லி) அதில் பல வியாதிகளுக்கான மருந்துகள் கூட்டாஞ்சோறாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. எது உடலுக்கு நல்லது செய்யும், எது கெடுதல் செய்யும் என்று பிரித்தறிய முடியாது. இந்தக் கூட்டு மருந்துகளைத்தான் பாரத அரசு இப்போது தடைசெய்திருக்கிறது.
மருந்துவிலை போலவே மருத்துவமனைச் செலவும் சாமானியரை கடனில் தள்ளுகிறது. அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு ஒரு தீர்வு.
உள்ளூர் சாமானியருக்கு உயர்தர மருத்துவம் எட்டாக்கனி. அதே சமயம் மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் வெளிநாட்டவர்களுக்கு மாப்பிள்ளை உபசாரம். அந்நிய கரன்சி மீது மருத்துவத் தொழிலதிபர்களுக்கு அப்படி ஒரு மோகம். நம் நாட்டு வள்ளல் பெருமக்கள் தர்ம ஆஸ்பத்திரி நடத்த முன்வரவேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மருத்துவமனை நடத்த தூண்டப்படவேண்டும். இளம் மருத்துவர்களுக்கு சமுதாய பிரக்ஞை, தேசபக்தி ஊட்டி எளியவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ளத் தூண்ட வேண்டும்.
மருத்துவத் தொழிலில் தாண்டவமாடும் ஊழலை அரசு களையெடுக்க வேண்டும்.
– டாக்டர் சுப்பையா,
புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்
‘காம்பினேஷன் ட்ரக்ஸ்’ எல்லாவற்றையும் சந்தையில் இருந்து விரட்டி விடுவது உசிதமாகத் தெரியவில்லை. ‘இர்ரேஷனல் காம்பினேஷன்’ மருந்துகள் சில, அதிக பிரச்சினை இல்லாமல் சில பத்தாண்டுகள் பலன் பார்க்கிறோம். அவைகளின் பலன் கருதி, தேவையான மாற்றம் செய்து சந்தையில் விட்டால், விதிகளுக்கு உட்பட்டு மக்களுக்கும் பயன்தரும் வண்ணம் இருக்கும்.
– டாக்டர் மனகாவல பெருமாள், நெல்லை
இப்போ, சளி, மூக்கடைப்பு, காய்ச்சல், தலைபாரம் என வந்தால் ஒரே மாத்திரை எளிதாக இருக்கிறது. காசும் மிச்சம். தனித்தனியாக வாங்கணும்னு சொல்ராங்களே, ரொம்பச் செலவாகுமோ? அது எங்களுக்குப் பிரச்சினை தானே? ஒரு மாத்திரைக்குப் பதில் ஒன்பது மாத்திரை வாங்க யாரிடம் காசு இருக்கிறது?
– சரோஜா, சாமானியர், திருச்சி
ஜலதோஷமா, மூக்கடைப்பா, யார் சார் டாக்டரிடம் செல்வார்கள்? நேரே ஃபார்மஸிக்குப் போய், விக்ஸ் ஆக்ஷன் 500 ஒன்றை வாங்கிப் போட்டு விட்டு, போய்க் கொண்டே இருப்போம். இப்போ அதைத் தடை பண்ணிட்டாங்களாமே. 344 மருந்துகளைத் தடை செய்திருக்காங்களாம். கேஸ் தான் நடக்கும். நாம அமெரிக்காகாரன் சொல்றதையே கேக்கறோமோ? அவன் தான் மருந்துக் கம்பெனி. அவன் தான் எதிர்க்கவும் செய்யறான். நம்ப ஆட்களா ஒண்ணும் செய்ய மாட்டேங்கிறாங்க.
– திருப்பதி, மாத்திரை சாப்பிடும் நபர், மானாமதுரை
மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், நோயாளிகளின் இந்த மனநிலையை பயன்படுத்திக்கொண்டு பல்வேறு விதமான கூட்டு மருந்து மாத்திரைகளை தயாரித்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு மருந்துக்கும், தனியாக இருக்கும்போது கிடைக்கும் மருத்துவ குணம், இரண்டு அல்லது மூன்று மருந்துகளுடன் சேரும்போது அப்படியே இருப்பதில்லை. இதற்கு சரியான முறையில் பரிசோதனை (Trial) செய்து நிருபித்திருக்க வேண்டும்.
பெரும்பான்மையான மருந்து நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, சரியான பரிசோதனை தகவல் ஆதாரமில்லாமல் (Trial Report) பல்வேறு விதமான மருந்துகளின் கூட்டு மருந்துகளை தயாரித்து வருகின்றனர்.
இதுபோன்ற, ஆதாரம் இல்லாத கூட்டு மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள், நோயாளிகளுக்கு உடனடியாக தெரியவில்லை என்றாலும், பாதிப்புகள் நிச்சயம் உண்டு என்பதை மருத்துவர்களும் மறுப்பதில்லை. ஆகையால், நோயாளிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கதே!
-வ. ச. ராஜ்குமார், மருத்துவ பிரதிநிதி
சட்டம் போட்டது சரிதான், கூட்டு மருந்துகளுக்கு தடை செய்ததும் சரிதான். ஒரு நாளில் பல கோடி ரூபாய்களுக்கு விற்பனையாகும் மருந்துகளை உடனடியாக கடைகளிலிருந்து அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை. 7000 வகையான கூட்டு மருந்துகள் இனம் கண்டு விற்பனையை கவனிப்பது எப்படி? மெடிஸன் எனப்படும் தனித்தனி மருந்துகளை எழுதித்தர மருத்துவரும், வாங்க வேண்டிய சூழலில் நோயாளிகளும் தள்ளப்படுகிறார்கள். கூட்டு மருந்து இல்லாத தனி மருந்துகள் விநியோகிக்காத நிலையில், தினமும் வேளாவேளைக்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? ஜெனிரிக் கெடிஸின்களின் உற்பத்தியை அதிகரித்து, காம்பினேஷன் தயாரிப்புகளை நிறுத்த வேண்டும்.
-எஸ். செல்வகுமார்,
பாலாஜி பார்மசூடிகல்ஸ், சாலிகிராமம், சென்னை.
காம்பினேஷன் ட்ரக்” ஏன் வேண்டாமெனச் சொல்கிறார்கள் என்றால் நம் உடல் ஒவ்வொரு மருந்தினையும் எடுத்து க்ரஹித்துக் கொள்ளும் நேரம், ‘உச்ச நிலைச் செயல்பாடு’ ஆகியன மாறும். ஆங்கிலத்தில் peak level action என்பர். அதைப் பற்றின யோசனை இல்லாமல், வெவ்வேறு தன்மை கொண்ட மருந்துகளை, பேக் செய்து விடுகின்றனர். இதை முதலில் ஒழுங்குபடுத்த வேண்டும். இந்தியாவில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படாத இர்ரேஷனல் காம்பினேஷன் மருந்துகள் (irrational combination drug industry) தயாரிப்பு நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி பெறுமானவை. மக்கள் தங்கள் மூட்டு வலி. தீர்ந்ததா, சளி குணமாயிற்றா, நிவாரணம் உடனே கிடைத்ததா, என்றே பார்க்கிறார்கள்.
– செல்லப்பன், பொதுநலவாதி, கோவை
அரசு, தேவையான நடவடிக்கை எடுத்து சரி செய்வதை விடுத்து, தடாலடியாக மருந்துகளை நிறுத்தினால், ஸ்டாக்கிஸ்டுகள், நாங்கள் என்ன செய்வோம். குறிப்பிட்ட ஒரு மருந்து மட்டுமே வருடத்திற்கு ரூ. 40 லட்சம் வரை விற்கும். அது அடி வாங்கினால், எவ்விதம் தொழில் செய்வது?
– பெயர் வெளியிட அலோபதி மருந்து சாப்பிடுபவர், மானாமதுரை
‘காம்பினேஷன் ட்ரக்ஸ்’ பொதுவாக இரண்டு மூன்று மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பதே. அதைத்தான் அரசு தடை செய்துள்ளது. தலைவலி மருந்து என்றால், அதில் ‘மைக்ரைன்’ என்னும் ஒற்றைத் தலைவலி, சாதாரண தலைவலி, தலைபாரம் என எல்லாவற்றுக்கும் சர்வரோக நிவாரணியாக, ஒரு வலிநிவாரணி விற்கப்படுகிறது. ‘மைக்ரைன்’ பிரச்சினை உள்ளவர்களுக்கு உண்டான மருந்தையும் சிறிய அளவில் எடுத்திருப்போம். உதாரணத்திற்குச் சொல்கிறேன். தடையினால், இது தவிர்க்கப்படும். மைக்ரைனுக்கு என்ற மருந்து சரியான விகிதாச்சாரத்தில் பக்குவமாக நோய் தீர்ப்பதாக அமையும். தடை வரவேற்கத்தக்கதே. – மல்லிகா, திருச்சி
ஒரு கலவை மருந்தில், பல மருந்துகள் இருக்கும். அறிகுறிகளும், எதிர் அறிகுறிகளும் கொண்டிருக்கும். பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்ய இயலாது. இரு வேறு மருந்துகள் கலவையாகும் போது விளைவு மோசமானதாக, வெளியில் தெரியாததாகக் கூட இருக்கலாம். நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை என்பதுதான் உண்மை. விலை சகாயமாகக் கிடைக்கிறது என்பது ஒன்றே இந்தக் கலவை மருந்துகளின் லாபம். மற்றபடி, சர்வதேசத் தரத்திற்கு இல்லை. மற்ற நாடுகளில் விற்க முடியாத மருந்துகளை, தைரியமாக இந்தியாவில் விற்பனை செய்யும் கம்பெனிகள், இவற்றைக் கண்காணிப்பே இல்லாமல் விட்டு இருந்த அரசு… இப்போதாவது விழித்துக் கொண்டுள்ளதே!
– பத்மனாபன்,
மருந்து விற்பனையாளர், நாகர்கோவில்
தொகுப்பு: பூமாகுமாரி, குருசிவகுமார்