இந்தியாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெருநிறுவனங்கள், உள்ளூர் சிறு நிறுவனங்கள் என வகைப்படுத்தலாம். இந்நிறுவனங்கள் மத்திய அரசிடம், தயாரிக்கப்போகும் மருந்தின் தன்மைகளை சொல்லி அனுமதி பெறுவார்கள். பிறகு மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று உற்பத்தியைத் துவக்குவார்கள். பின் தேசமெங்கும் விற்பனை செய்வார்கள். அதன்பின் விற்பனை தந்திரங்களை பயன்படுத்தி மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளுக்கு அதிக கமிஷன், மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கி லாபம் கொழிப்பார்கள். மத்திய அரசு நிறுவனமான ‘டிரக் பிரைஸ் கன்ட்ரோல்’ நிர்ணயித்த விலையில் எப்படி லாபம் சம்பாதிக்க முடியும் என்ற கேள்வி நல்ல கேள்விதான். அனுமதி பெற்ற மருந்துடன் வேறு ஒன்றையும் இணைத்து, தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் சிறந்த கேள்விதான். அதற்கு எல்லோரும் அறிந்த ‘விஷயம்’தான் பதில்.
அவில் (Avil) என்ற மாத்திரை மிக மிக குறைந்த (25 காசு) விலையுள்ள மாத்திரை. அதன் மருத்துவ குணங்களுடன், வேறு ஒன்றை சேர்த்து அதிக விலைக்கு (ரூ.6) கிடைக்கச் செய்வார்கள். இதனால் நோயாளிக்கு பக்கவிளைவு ஏற்படாதா? என்ற கேள்வியும் அற்புதமான கேள்விதான். அதனால் என்ன? இந்த கூட்டு மருந்துகள் விற்பனையால் கிடைத்தது தானே இந்தச் செல்வச் செழிப்பு!
ஸம்ஹிதையென சம்ஸ்கிருதத்தில் கூறும் pharmacopaeia எனப்படும் விதிமுறை அமெரிக்கா, பிரிட்டனில் இருப்பது போல நம் பாரதத்திற்கும் உண்டு. உலகின் மிகச் சிறந்த தரமான ஆங்கில மருந்துகளை நம் நாட்டு நிறுவனங்கள் தயாரித்தது உண்டு. இதற்கு காங்கிரஸ் மத்திய அமைச்சராகப் பணியாற்றிய மோகன் தாரியாதான் காரணம். அதன்பின் மேற்கத்திய நிறுவனங்கள் திட்டமிட்டு இந்திரா காந்தியின் உதவியுடன் இந்திய நிறுவனங்களை முடக்கிப்போட்டன.
மேலும், மேற்கத்திய நாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை, அதேபெயரில் அல்லது அதன் ஒலி ஓசையின் பெயரில் இந்நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. ஏழுஆண்டுகளுக்கு முன்பே இந்த கூட்டு மருந்துகளுக்கான தடை குறித்த அறிக்கையை மத்திய அரசு அமைத்த கமிட்டி, அன்றைய காங்கிரஸ் அரசிடம் ஒப்படைத்தபோதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது லட்சோபலட்சம் சுவிஸ் டாலர் கேள்விதான். இப்போது, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை பலனளிக்க சம்பந்தப்பட்ட அனைவரின் ஆதரவும் தேவை.
(கட்டுரையாளர் மருந்து உற்பத்தித் துறையில் அனுபவம் உள்ள தேசபக்தர்)
* ANALGIN இது ஒரு வலி நிவாரணி. ஆனால், மனித உடலில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை இது தடுக்கும்.
* TEGASCROD இது மலச்சிக்கலை போக்கும் ஒரு மருந்து. ஆனால், இதைத் தொடர்ந்து உண்டால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுத்தும்.
* PERGOLIDE இது பார்க்கின்ஸன் நோய்க்கு மருந்து. ஆனால் இதயவால்வுகளை பாதிப்படையச் செய்யும் என்பதால், அந்நிய நாடுகளில் தடை. ஆனால் இந்தியாவில் தாராளமாக பரிந்துரைக்கப்படுகிறது.