திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தன் குடும்பத்தினருடன், 1934-ல் திருச்செந்தூரிலிருந்து முருகன் வாழும் திருத்தலங்கள் தோறும் சென்று திருப்புகழ் பாடி வயலூருக்கு வந்து சேர்ந்தார். தரிசனம் முடித்து, அன்றைய தின அர்ச்சகர் ஜம்புநாத சிவாச்சாரியாரின் சூடத்தட்டில் ஒரு எட்டணாவை காணிக்கையாக போட்டார். பிறகு கோயிலைப் பற்றிய அபிப்பிராயத்தை பார்வையாளர் புத்தகத்தில் எழுதிவிட்டுச்சென்று விட்டார். அன்று இரவு, கோயில் தர்மகர்த்தா தோட்டா ராதாகிருஷ்ண செட்டியார் கனவில் சந்நியாசி கோலத்தில் ஒருவர், ‘எட்டணா வாங்கி விட்டாயே… ராஜகோபுரம் கட்ட முடியுமா?’ என்று கேட்டாராம். கனவில் வந்தவர் முருகன் என்பது செட்டியாரின் எண்ணம். மறுநாள் கோயில் ரிடமும் ‘எட்டண்ணா உண்டியலிலோ, காணிக்கையாகவோ, யாராவது கொடுத்தார்களா…?” என்று விசாரித்தார்.
சிவாச்சாரியார், வாரியார் கொடுத்த எட்டணாவைப் பற்றிச் சொன்னார். அவரிடமிருந்து எட்டணா திரும்பப் பெறப்பட்டு மணியார்டர் மூலம் வாரியாருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ‘‘தங்களுடைய தொகையை இறைவன் ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை” என்ற செய்தியும் மணியார்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வாரியார் ‘‘என்ன சோதனை இது?” என்று மனமுடைந்தார். பின்னர் வாரியார் சுவாமிகள் திருச்சிக்கு வந்திருப்பதை அறிந்து, வயலூர் கோயில் தர்மகர்த்தா வாரியாரைச் சந்தித்து தான் கனவு கண்ட நிகழ்ச்சியைத் தெரிவித்தார். ‘வயலூர், ராஜகோபுரம் கட்ட தன்னால் பணம் சேர்க்கமுடியுமா’ என்று குழம்பிய நிலையிலிருந்த வாரியாருக்கு நண்பர்கள் உற்சாகம் தர, திருச்சியில் அவரது தொடர் உபன்யாசங்கள் மூலம் நிதியும் சேர்ந்தது. தன் முயற்சி ஒன்றையே மூலதனமாக வைத்துத் தொடங்கிய வாரியார் சுவாமிகளின் ராஜகோபுரத் திருப்பணி ௧௯௩௭ல் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றுமுதல் இன்றுவரை வயலூரோடு வாரியார் சுவாமிகளின் தொடர்பு நீடித்து வருகிறது.