ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான சில கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் அணி அபார வெற்றி பெறும் என்று ஆசைக்கனவுகளை வெளியிட்டன. அப்போது திமுக மிகவும் தீவிரமான அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராகவே, பல கட்சிகளின் தலைவர்கள் சூழ்ந்த திமுக பொதுக்கூட்டத்தில் அறிவித்தார் ஸ்டாலின். அன்று, மாநிலத்தை ஆளும் அதிமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் அமைதி காத்தன.
அந்த அமைதியின் அர்த்தம் இப்போது திமுக தலைவருக்குப் புரிந்திருக்கும். அதிமுக தலைமை மீது குறைந்த தர மதிப்பீடு கொண்டிருந்ததற்காக இப்போது ஸ்டாலின் தனிமையில் மருகக் கூடும். அமைதியாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் மிகவும் வலிமை வாய்ந்த கூட்டணியை அதிமுக உருவாக்கி விட்டிருக்கிறது-. அதுவும், மத்தியில் ஆளும் பாஜக உதவியுடன்.
வட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் தருவதாக உறுதி அளித்து கூட்டணியில் இணைத்ததே அதிமுகவின் நெற்றியடி. அதேபோல பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்பதில் கறாராக இருந்தபோது அதிமுக தலைமையின் கள அனுபவம் புரிய வந்தது. அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா இன்று இல்லாமல் இருக்கலாம். அக்கட்சியில் உள்ள தலைவர்களை சாதாரணமாக எடை போட முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா போன்ற, மக்களைக் கவரும் நிகரற்ற தலைமை தற்போது தங்களிடம் இல்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்துகொண்ட அதிமுக தலைமை, பிரதமர் மோடி என்ற தேசிய ஆளுமையை அரவணைத்துக் கொள்ள முடிவெடுத்தது, அக்கட்சியின் அரசியல் சாதுரி
யம். இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும், மு.க.ஸ்டாலின் இலவு காத்த கிளியாகத்தான் தமிழக அரசியல் களத்தில் காத்திருக்க நேரிடும் என்பதை அதிமுக தலைமையின் அதிரடி கூட்டணி அறிவிப்புகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
அதிமுக அணியில் புதுவையில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் சேர்ந்துள்ளது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளும் அதிமுக அணியில் சேர பேச்சு நடத்தி வருகின்றன.
ஒரு காலத்தில் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது இதுவரை தெளிவாகவில்லை. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் அக்கட்சி நிலைகுலைந்திருக்கிறது. அக்கட்சியை
யும் தங்கள் அணியில் சேர்க்க பாஜக முயற்சிக்கிறது. ஆயினும் தொகுதி எண்ணிக்கைவில் முடிவு எட்டப்படாததால் அதிமுக- தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் தாமதமாகிறது.
இதனிடையே, தேமுதிகவை திமுக அணியில் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது. அநேகமாக கேப்டன் இம்முறையும் ஏமாற மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவரை வீடு தேடிச் சென்று உடல்நலம் விசாரித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அதன் பின்னரே, விஜயகாந்த் உடல்நலம் இன்றி இருப்பது தமிழக அரசியல் தலைவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது என்பது அவல நகைச்சுவை. இப்போது பலரும் விஜயகாந்த் வீட்டுக்குப் படையெடுக்கிறார்கள். தேமுதிகவுக்கு இப்போது தேவை அரசியல் வெற்றிகளும், நம்பிக்கையான நண்பர்களுமே. அதனை அதிமுகவால் மட்டுமே தரமுடியும் என்பதை பிரேமலதா உணராதவர் அல்ல.
எதிர்த்தரப்பில் திமுக அணியில் இரு இடதுசாரிக் கட்சிகளும் மதிமுகவும் விடுதலைச் சிறுதைகள் கட்சியும் இரு முஸ்லிம் கட்சிகளும் பேச்சு நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 10, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என இரு கட்சிகள் மட்டும் திமுக கூட்டணியில் இதுவரை தங்கள் இடத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
இரு பிரதான கூட்டணிகளில் விடுபட்ட கட்சிகளான தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவை நிராதரவாகத் தடுமாறுகின்றன. திமுக அணியில் இருந்து துரத்தப்படும் கட்சிகளுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார் தினகரன். காங்கிரஸ் உதவியுடன் திமுக அணியில் இடம்பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடித்த கமல் இப்போது ஏமாந்த நரி போல, `சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்’ என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே, கூட்டணி அறிவிப்புக்கு முன்னதாகவே திருப்பூரிலும் மதுரையிலும் பாஜக தனித்து பொதுக்கூட்டம் நடத்திவிட்டது. இந்த இடங்களில் பிரதமர் மோடிக்குக் கூடிய மக்கள் திரள், பாஜகவின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு கட்டியம் கூறுகிறது. பாஜக தலைவர் அமித் ஷாவும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோரும் தமிழகத்தில் பிரசாரம் செய்து சென்றிருக்கிறார்கள். வரும் நாட்களில் பாஜக தலைவர்களின் படை தமிழகத்தை வலம் வரும்போது, மோடி அலை என்றால் என்ன என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ளும்.
தேசிய அளவிலும் கூட்டணியை வலுப்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்தத் துவங்கி இருக்
கிறது. அண்மையில் மூன்று வட மாநிலங்களில் நேரிட்ட இழப்புக்குப் பின், பாஜக சமயோசித
மாகவும், தெளிவாகவும் செயல்படத் துவங்கி இருக்கிறது. உ.பி.யில் பரம வைரிகளான பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதிக் கட்சியும் இணைந்திருப்பது பாஜக மீதான அச்சத்தின் வெளிப்
பாடே. அதனை எதிர்கொள்ள பாஜகவும் ஆயத்தமாகிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக கை கோர்ப்பதால், பாஜகவும் கூட்டணியை வலுப்படுத்தும் தேவை அதிகரித்துள்ளது. அதனால்தான், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 5 இடங்களுக்கு பாஜக ஒப்புக்கொண்டிருக்கிறது.
இப்போதைய தேவை, எதிர்க்கட்சியினர் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதே. இதுவே பாஜகவின் வியூகமாகத் தெரிகிறது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக- அதிமுக- பாமக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி வெல்லும்போது, தேசிய அளவில் மோடி எதிர்ப்பு தானாகவே காணாமல் போகும்.