தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களின் கலாச்சார மேம்பாட்டுக்காகப் பாடுபடும் ஒருசில பிரமுகர்களில் ஒருவர் தடா. பெரியசாமி. அந்த சமூகங்களிடையே ஹிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பணி இவரது சிறப்பு கவனம் பெறுகிறது. விஜயபாரதத்திற்காக அவரை சந்தித்து உரையாடினார் எம்.ஆர்.ஜம்புநாதன். பேட்டியிலிருந்து சில பகுதிகள்.
தங்கள் அரசியல் ஈர்ப்பு, பயணம், ஏற்ற இறக்கங்கள் இவைகளைப் பற்றி?
எட்டாம் வகுப்பு படிக்கும்போதே எங்கள் பகுதியில் நிலவி வந்த தீண்டாமைக் கொடுமை என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த சமயத்தில் பக்கத்திலிருந்த குணப்பாடி என்ற கிராமத்தில் மேல் சாதியினர் பயன்படுத்துகின்ற கிணற்றில் குளித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அந்த கிணற்று நீரில் நேரடியாக மின்இணைப்பு கொடுக்கப்பட்டு நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இவற்றினால் எல்லாம் சிறு வயதிலிருந்து அம்பேத்கர், ஈ.வெ.ரா. போன்றோர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த வேளையில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களால் தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் பரவத் தொடங்கியது. அவர்கள் அடிப்படையில் நக்ஸல் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்திருந்தவர்கள். நான் அவர்களுடன் இணைத்துக் கொண்டேன்.
ஓ… தங்களுடைய பயணம் “ஆயுதப் புரட்சி”யில்தான் தொடங்கியதா…?
(சிரித்தவாறே…) ஆமாம்… உங்களால் நம்ப முடியாதுதான்.
மக்கள் யுத்தம் (PWG) என்ற நக்சல் அமைப்பிலிருந்து பிரிந்து வந்து புலவர் கலியபெருமாள், தமிழரசன் போன்றோர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி’ (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் அதனுடைய தமிழ்நாடு விடுதலைப்படை இவற்றில் ஈடுபடுத்திக் கொண்டேன்.
1985ல் சாதி ஒழிப்பு மாநாடு நடத்திய அனுபவம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. பிறகு ௬ ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டேன். விடுதலையான பின்னர், தலித் பேந்தர்ஸ் (விடுதலைச் சிறுத்தைகளின் முன்னோடி) அமைப்பில் பணியாற்றினேன். அப்பொழுதுதான் திருமாவளவனுடன் தொடர்பு ஏற்பட்டது.
அவருடன் சேர்ந்து விடுதலைச் சிறுத்தை கட்சியை உருவாக்கியதில் எனக்கும் பெரும் பங்கு உண்டு.
சாதிய கொள்கைகளிலிருந்து தேசியத்தின் பக்கம் எப்படி திரும்பினீர்கள்?
நான் சிறையிலிருந்தபோது டாக்டர் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தகங்களைப் படித்தேன். என் மனமாற்றத்திற்கு மிக முக்கியமான காரணங்களாய் இவை அமைந்தன. பொதுவுடமைக் கட்சியாகட்டும், தமிழ் தேசியவாதிகளாகட்டும் இவர்களெல்லாம் வர்க்கப் போராட்டத்தையும், ஈழத்தமிழர்களைப் பற்றியும், மும்பைத் தமிழர்களைப் பற்றியும் வாய்கிழிய பேசுவார்கள். ஆனால் தங்கள் ஊரில் சேரியில் துன்பப்படும் தமிழர்களைப் பற்றி பேசமாட்டார்கள். அவர்கள் முன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் செயல்பட மாட்டார்கள்.
அந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்திய ஜனகல்யாண் என்ற அமைப்பின் வாயிலாக சாதி வேற்றுமையின்றி ஏழை,எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரபல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவரு டைய செயல்முறை எனக்கு பிடித்ததால் நானும் அந்த இயக்கத்தில் ஈடுபட்டேன்.
உங்களுடைய வழிகாட்டிகள் குறித்து?
காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி, சுவாமி தயானந்த சரஸ்வதி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பெரியோர்கள்.
தங்களின் முந்தைய பணிகள்?
சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் வழிகாட்டுதல்படி அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தை களுக்காக சுமார் ௬௦ ஓராசிரியர் பள்ளிகள் தொடங்கி நடத்தி வருகிறேன். இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள நலிந்த பிரிவைச் சார்ந்த பெண்களுக்கு இலவச தையல் கல்வி, கணினி கல்விக்கான பயிற்சி நிலையங்களை நடத்தி வருகிறேன்.
பறையர் என்றழைக்கப்படும் இனத்தைச் சார்ந்த மக்கள் பல்வேறு மாவட்டங்களில் பற்பல பெயர்களில் அடையாளம் காணப்படுகின்றனர். உதாரணம் கன்னியாகுமரி மாவட்டம் – சாம்பவர்,
கடலூர் மாவட்டம் – ஆதிதிராவிடர். என்னுடைய இயக்கத்தின் மூலமாக இவர்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழ் அதாவது ‘சாம்பவன்கள்’ என்ற குலப்பெருமையுடன் அணி திரட்ட வேண்டும் என்பதே என்னுடைய முயற்சி.
அதென்ன சாம்பவ குலம்…?
சம்பு என்கின்ற சிவபெருமானின் வழித் தோன்றல்கள் நாங்கள் என்பது எங்களுடைய தனிச்சிறப்பு. உங்களுக்குத் தெரியுமில்லையா…? சாம்பமூர்த்தி, சாம்பசிவன் என்பதெல்லாம் சிவனைக் குறிப்பதல்லவா…?
அதேபோல் திருவள்ளுவர் எங்கள் குலத்தின் முன்னோடி. அதுமட்டுமல்ல, ஜாதகம் கணித்து குறி சொல்லும் பரம்பரையினர் நாங்கள். ஜோதிடம் என்னும் அறிவியல் கலையை உலகத்திற்கு தந்தவர்கள் நாங்கள்.
தங்களின் சமீபத்திய பணிகள்?
சிதம்பரத்தில் அமைந்துள்ள சுவாமி சஹஜானந்தா ஜெயந்தி விழாவிற்கு ஜனவரி மாதம் ௨௩ம் தேதி எங்கள் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த ௧௦௮ பேரும் பூணூல் அணிந்து பங்கு கொண்டோம். சுவாமி சஹஜானந்தர் அவர்கள்தான் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் முன்னேற்த்திற்காக பெரும் தொண்டாற்றியவர். ௫௦ ஆண்டுகளுக்கு முன்னர் அவரால் தொடங்கப்பட்ட ‘நந்தனார் சேவாஸ்ரம டிரஸ்ட்’ மூலம் பயனடைந்தவர்கள்தான் இன்றைக்கு தலித் அரசியல் செய்து கொண்டிருக்கும் பலர். இந்த டிரஸ்ட் தொடர்ந்து செயல்பட என்னால் இயன்ற பங்களிப்பினை அளித்து வருகிறேன்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் உண்டான தொடர்பு குறித்து?
ஸ்ரீ ஸ்ரீயின் வாழும் கலை பயிற்சியைப் பெற்றுள்ளேன். யோகா, பிராணாயாமம் இவற்றின் மூலமாக கோபம், மனஅழுத்தம், எதிர்மறை எண்ணம், தோல்வி மனப்பான்மை போன்றவைகளை போக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன். சமுதாயப் பணியில் ஈடுபடு பவர்களுக்கு இந்தக் குறைகள் கூடாதுதானே?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடைய வழிகாட்டுதலின்படி பட்டியல் இன மக்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுப்பதும், தாய்மதம் திரும்ப வைப்பதும் என்னுடைய பணியாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.
தலித், தலித்தியம் போன்ற சொல்லாக் கங்கள் குறித்து உங்கள் கருத்து?
பதில் : தலித், தலித்தியம் என்னும் வார்த்தைகள் எல்லாம் கிறிஸ்தவ மிஷினரிகளால் ௯௦களுக்குப் பின்னர் மதமாற்ற திணிப்பிற்கான தந்திரங்கள். தலித் என்றால் ஒடுக்கப்பட்டுள்ள, இருட்டிலுள்ள போன்ற எதிர்மறையான கருத்துகள் விதைக்கப்படுகின்றன. ஒருவிதமாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்ற சொற்கள் இவை. என்னைப் பொருத்தவரை பட்டியல் இன மக்கள், திருக்குலத்தோர், அரிசனங்கள் என்று அழைப்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
ஆரியம் – திராவிடம் குறித்து தங்கள் பார்வை?
ஆரியம் என்பது ஒரு உயர்ந்த பண்பாட்டைக் குறிக்கும் சொல். ஆரியம் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து வந்த இனமல்ல. டாக்டர் அம்பேத்கர் எழுத்துகளைப் படித்தவர்களுக்கு இந்த உண்மை நன்கு விளங்கும். அம்பேத்கர் ஆரியம் திராவிடம் என்ற இனவாதத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு தமிழகத்தில் தலித்தியம் பேசி அரசியல் வியாபாரம் செய்பவர்கள் பலர். இவர்கள் மறைமுகமாக கிறிஸ்தவ, முஸ்லிம்களின் கைக்கூலிகள். அதேபோலதான் நவீன பெளத்தம் (நியோ புத்திஸ்ட்) என்பவர்களும்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) உடனான உங்கள் தொடர்பு?
2002, 2003 கால கட்டத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.சுடன் நான் தொடர்பில் உள்ளேன். பல முகாம்களிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். தீண்டாமை என்பது சங்கத்தில் அறவே கிடையாது. இந்துக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற மனப்பான்மையுடன் பழகுவது எனக்கு பிடித்திருக்கிறது. அதேபோல் தனிநபர் துதி பாடுவது தனக்குத் தானே விளம்பரம் தேடிக் கொள்வது போன்ற சிறப்புகள் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒன்று.
பாரதிய ஜனதா கட்சியுடன் உங்களுடைய பயணம்…?
2004ல் பா.ஜ.க. சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளன் நான். சுமார் ௧.௫ லட்சம் வாக்குகளைப் பெற்றும் மூன்றாமிடம்தான் வர முடிந்தது.
தற்போது பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர், கடலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர். சுவாமி விவேகானந்தர் போன் றோர் கனவின்படி வலிமையான பாரதம் அமைய தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு செயல்படும் பா.ஜ.க.தான் நம் நாட்டின் இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் தேவை.
– தடா பெரியசாமி