பரதன் பதில்கள்

பாரதியிடம்  விஞ்சி  நிற்பது  மொழிப்பற்றா,  ஆன்மிகப் பற்றா,  தேசப்பற்றா?        

– கே.கருப்பசாமி, ஈரோடு 

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்கிறாரே பாரதி. தேசப்பற்று, ஆன்மிகப்பற்று, மொழிப்பற்று என்ற வரிசைதான் சரியானது.

 

நமது  வாழ்க்கையை  எப்படி  அமைத்துக்கொள்ள  வேண்டும்?       

– வே.மாரியம்மாள், நாகப்பட்டினம் 

வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. பணத்திற்குப் பின்னால் ஓடி ஓடி நிம்மதியை இழந்துவிடக் கூடாது. திட்டமிட்ட உழைப்பு – அளவான ஆசை – அமைதியான பேச்சு – மிதமான உணவு – எளிமையான உடை – நிம்மதியான தூக்கம் என்று வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

 

பெண்களுக்கு  தியானம்  தேவையா?        

– அ. கோகிலா, திருச்சி 

இதென்ன கேள்வி? அவர்களும் மனிதர்கள் தானே? ஒரு பெண்ணின் மனதில் வெளியே சொல்ல முடியாத ஏகப்பட்ட மன வேதனைகள் இருக்கும். தியானம் ஒன்றே மனக்கவலைகளை மறக்கவும் துன்பங்களை எதிர்கொள்ளும் சக்தியையும் கொடுக்கும்.

 

பரதனாரே… நான்  தினசரி பிரார்த்தனை செய்கிறேன். ஆனாலும் பிரச்சினைகள்  துரத்துகிறதே?        

– எம். வனஜா, பவானி 

பிரார்த்தனையைப் பலப்படுத்துங்கள். இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இறைவனிடம் துன்பங்களை தாங்கக்கூடிய மனவலிமையைத் தருமாறு பிரார்த்தியுங்கள். தினசரி கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். ஒரு நோட்டில் ராம மந்திரம் எழுதி வாருங்கள்.

 

உலக  அழகியாக  இந்தியாவைச்  சேர்ந்த  மானுஷி  சில்வா  தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது   பற்றி?

– சி. சுப்பையா, சங்கரன்கோவில் 

இது இந்தியாவிற்கு கிடைத்த கௌரவம் என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள். இதெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் ரகசிய தந்திரம்தான். இந்திய சந்தைகளில் தங்களின் பொருட்களை விற்பதற்கான திட்டத்தின் ஒரு அம்சம்தான் அழகிப் போட்டி.

 

தமிழகத்தில்  மீனவர்  போராட்டம்  வலுத்து  வருகிறதே?        

– கே. மீனாட்சி, திண்டுக்கல் 

இந்த புயலுக்கு பிரதமர் மோடியா காரணம்? பின் ஏன் அவருடைய உருவ பொம்மைகளை கொளுத்துகிறார்கள்? இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சபீன் (சின்னத்துறை) அன்டோ ஜோலீஸ் (பூந்துறை) என்கிற கிறிஸ்தவ பாதிரிகள் உள்ளனர். ரயில் மறியலில் தலைமை தாங்கியவர்கள் பாதிரிகள். கூடங்குளம் நாடகத்தை நடத்தி தோல்வி கண்டவர்கள் அடுத்து ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் செய்கிற சதிதான் காரணம்.

 

திருமாவளவன்   ஹிந்து   கோயில்களை   இடிப்போம்  என்று   பேசியுள்ளாரே?        

– கி. சின்னசாமி, திருவள்ளூர்

இப்படி அவர் பேசியது முஸ்லிம்களின் கூட்டத்தில். காஞ்சி காமாட்சி கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருப்பதி கோயில்களை எல்லாம் இடித்து புத்த விஹார் கட்டவேண்டும் என்று பேசியுள்ளார். அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் நான் அந்த அர்த்தத்தில் பேசவேயில்லை என்கிறார். ஸ்ரீராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று பேசிய திருமா அவர்களே…! ஏசு, நபி நாயகமெல்லாம் என்ன பாத்திரங்கள் என்று பேசத் தயாரா?