கார்த்திகை மாதம் ஐயப்பனுக்குரிய விரத காலம். மாலையணிந்து 41 நாள் விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வார்கள். இதில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை விரதத்திற்கான நெறிமுறைகள். இந்த நெறிமுறைகளை ஒரு குடும்பஸ்தரால் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பின்றி தனியாளாக கடைபிடித்தல் நடவாத காரியம். அப்படிப்பட்ட சில நெறிமுறைகளைப் பற்றி இக்கட்டுரையில் பேசுவோம்.
- மாலை அணிவதற்கே முதலில் பெற்றோர், இல்லாளின் சம்மதம் தேவை.
- விரதமிருப்பவர் சூர்யோதயத்துக்கு முன் எழுந்து குளித்துவிட்டு சரணம் சொல்ல வேண்டும். சரணம் சொல்வதற்கு முன் வாசல் தெளித்து கோலமிட்டு, வீட்டையும் பூஜை செய்யும் இடத்தையும் சுத்தம் செய்து விளக்கேற்ற வேண்டும். மனையாள், பெற்றோர் என்று குடும்ப அங்கத்தினரும் விரதமிருப்பவருடன் அதிகாலை விழித்தெழுந்து ஒத்துழைத்தாலன்றி இவை சாத்தியமில்லை.
- அடுத்த மிக முக்கியமான நெறிமுறை பெண்கள் சம்பந்தப்பட்டது. வீட்டு விலக்காகும் நாட்களில் பார்க்கவோ பேசவோ கூடாது. வீட்டு விலக்கு விஷயங்களைக் கடைபிடித்தல் பத்தாம்பசலித்தனம், அவசியமற்றது, பெண்களை சிறுமைப்படுத்தும் விஷயம் என்று கூறி அந்த பழக்கத்தை விட்டு வரும் இந்த காலத்தில், இல்லாள், மகளின் பூரண ஒத்துழைப்பன்றி விரதம் கடைபடித்தல் சாத்தியமற்றது.
- இல்லத்தில் ஐயப்ப பூஜை ஏற்பாடு செய்து மற்ற ஐயப்பமார்களை கலந்து கொள்ள அழைத்து அவர்களுக்கு அமுது செய்விப்பது நடைமுறை. வீட்டுப் பெண்களே தேவையானவற்றை சமைத்து பரிமாற வேண்டும். அது மட்டுமின்றி ஜாதி பேதம் பாராமல் ஐயப்பமார்களை உபசரிக்கும் போது, வேற்றுமை பாராட்டும் மனப்பான்மை மாறி வீட்டார் மனதில் நல்லிணக்கம் வளர ஏதுவாகிறது. இப்படி முழு பக்தியுடன் அவர்களும் பங்குபெறுவது மிகவும் போற்றுதலுக்குரியது.
- அதே போல விரத காலத்தில் குடும்பத்தினரும், திரைப்படங்கள், ஷாப்பிங் மால் என்று அழைத்துப் போகச்சொல்லி கேட்காமல் இருப்பது நல்ல சூழ்நிலைக்கு ஊட்டம்.
தினசரி பூஜைக்கு உறுதுணையாக இருந்து பங்கேற்பது என மாலை அணிந்த நாள்முதல் மீண்டும் இல்லம் திரும்பும் வரை குடும்பத்தினர் அனைவரும் ஆன்மிகச் சூழலை உருவாக்குவதில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆகி விடுகின்றனர். வீட்டில் சத்தம் போட்டு பேசி, விவாதிப்பதை தவிர்ப்பது, உணவுக் கட்டுப்பாடு இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் குடும்பத்தினரின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. ஆக, தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு பதினெட்டாம்படி ஏறுவதும் தன் புலன்களை எல்லா விதத்திலும் கட்டுப்படுத்தி ஈச்வர சிந்தனையோடு இருப்பதும் தவிர, குடும்பத்தினரும் சுத்தம் பேணி தமது ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் பக்திக்கு உட்படுகின்றனர். இதன் பலனாக ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் சூழல் உருவாகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பாங்கு வளர்ந்து குடும்பத்தில் ஒற்றுமை ஓங்குகிறது.