இன்று (செப் 11) சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய நாள். இரண்டாவது ஆச்சார்ய வினோபா பிறந்தநாள். பண்டிட் தீன்தயாள்ஜியின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். சுவாமி விவேகானந்தருக்கு இரண்டு பரிமாணங்கள் இருந்திருக்கின்றன. வெளிநாடுகளில் ஒவ்வொரு மேடையிலும் தருணத்திலும் கம்பீரமாக பாரதத்தின் பெருமையையும் தொன்மையையும் முழங்கினார். அதேநேரம் நம் நாட்டு மக்களிடம் உரையாடும் போதெல்லாம் நம்முடைய குறைகளையும் தீமைகளையும் சாடுவதிலும் இடித்துக் கூறுவதிலும் தயங்கியதே இல்லை. அன்றைக்கு அவர் பயன்படுத்திய சொற்கள் மிகவும் கடுமையானவை. உள்ளத்தை ஊடுருவிச் செல்பவை. காரணம் என்னவென்றால் அவர் பாரத நாட்டு மக்களின் மீது வைத்திருந்த அன்பும் அவரின் தவ வலிமையுமே.
மானுட சேவையே மாதவ சேவை என்று அவர் எந்த காலத்தில் வலியுறுத்தினார் என்று கவனிக்க வேண்டும். அவர் வாழ்ந்த சமூகத்தில் மூடபழக்கங்களும் வெற்று சடங்குகளும் மேலோங்கியிருந்தன.
இரும்பை ஒத்த, எஃகினை ஒத்த உள்ளத்திலிருந்து வந்ததினால் அந்த சொற்களை கேட்பவரின் மனதில் நேரடியாக சென்றடைந்து அவர் விரும்பிய தாக்கத்தை மெல்ல ஏற்படுத்தின.
நான் இன்று அரங்கத்திற்கு வரும்போது எல்லோரும் ‘வந்தே மாதரம்’ என்று உரத்த குரலில் பன்முறை கோஷம் மனதிற்கு மிகவும் நிறைவளித்தது. புல்லரிப்பைக் கொடுத்தது. அதே நேரம், ஒன்று என் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. உள்ளபடியே நாம் பெண்களை, பெண்மையை போற்றுகிறோமா? நம் தாய்மார்களையும் சகோதரிகளையும் உரிய மரியாதையுடன் நடத்துகிறோமா? அப்படி இருக்கையில் ‘வந்தே மாதரம்’ என்று முழங்க எனக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?
அதேபோல, பாரத் மாதா கீ ஜெய் என்று முழங்கினீர்கள். நான் இந்த அரங்கத்தில் இருப்பவர்களை மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் – பாரத தாயை மதிப்பதாக சொல்லிக்கொண்டே வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்தும் வீட்டுக் குப்பை கூளங்களைத் தெருவில் கொட்டியும் அவளின் தேகத்தை அசுத்தப்படுத்துகிறோமே, இது என்ன நியாயம்? கல்லூரி மாணவர்களே, உங்கள் கல்லூரி தேர்தல் முடிவில் வளாகத்தில் எத்தனை காகிதத் தோரணக் குப்பைகள் சேருகின்றன? தூய்மை வளாகம் என்பதை நீங்கள் ஏன் உறுதியுடன் நடைமுறைப்படுத்தக்கூடாது?
சுவாமி விவேகானந்தர் ஏட்டுச் சுரைக்காய் கல்வியை என்றும் போற்றியவரில்லை. இளைஞனே, நீ ஏதேனும் ஐந்து குறிக்கோள்களை கைக்கொண்டு அந்த குறிக்கோள்களே உன் வாழ்க்கை மயமாகி உணர்வுபூர்வமாக செயல்படுத்த அவற்றின் பயனை நீயும் உணர்ந்து சமுதாயமும் மேம்பட்டால் மட்டுமே உன்னை அறிவுடையவன் என்பேன்” என்று பலமுறை அவர் சொல்லியிருக்கிறார். கல்வி என்பது திறமையாய் பரிமளிக்க வேண்டும். இதனையே அரசு குடுடிடூடூ ஐணஞீடிச் என்று செயல்படுத்தி வருகிறது. இதனை முழுமையாகப் பயன்படுத்த ‘முத்ரா வங்கி’யின் திட்டங்களின் உதவியையும் ஏற்று சிறந்த தொழில் முனைவோர்களாக விளங்க வேண்டும் – வையத் தலைமை கொள்ள வேண்டும் என்பதே எங்கள் அவா.
முத்தாய்ப்பாக ஒன்று, நீங்கள் ரோஜாக்கள் தினம் (வாலன்டைன் தினம் என்பதனை சூசகமாக வெளிப்படுத்தினார்) என்பது போன்ற எத்தனையோ தினங்களைக் கொண்டாடுகிறீர்கள். அவற்றின் உள்ளே நான் புகமாட்டேன். ஆனால் இளைஞர்களே, என்னுடைய ஒரு உள்ளக் கிடக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஹரியானாவிலோ பஞ்சாபிலோ கல்லூரியில் நீங்கள் ‘தமிழ் தினம்’ ஏன் கொண்டாடக்கூடாது? அந்த நாட்களில் தமிழ்நாட்டின் நல்ல பாடல்களை பாடி மகிழலாமே? தமிழர் விளையாட்டுகளை கற்றுக் கொள்ளலாமே? நல்ல தமிழ் திரைப்படங்களையோ, தமிழர் கலை நிகழ்ச்சிகளையோ கண்டு களிக்கலாமே? அந்த பகுதியிலிருந்து நம் ஊர்களில் குடியேறி வசிக்கும் படிக்கும் மாணவ மாணவியர்களை பெருமைப்படுத்தி நட்புறவை வளர்க்கலாமே? அதேபோல தென் பாரதத்தில் சீக்கிய குருமார்களின் தியாக மயமான வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறி ஊக்கம் பெறலாமே? அப்பொழுதுதானே பாரத் மாதா கீ ஜெய் (வெல்க பாரத அன்னை) என்பது பொருள் பொதிந்ததாகும்?
(செப்டம்பர் 11 அன்று டில்லியில்
மாணவர் தலைவர்களிடையே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரையிலிருந்து)
தமிழில்: ரமணி மைந்தன்