இரண்டு ஆண்டுகளாக ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிராக – பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, பிரிக்ஸ் மாநாட்டின் தீர்மானத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்தது, பாரதத்திற்கு கிடைத்த வெற்றி. கடந்தாண்டு கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் சீனா தடுத்தது. அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத குழுக்கள் பற்றிய பிரச்சினையை பிரிக்ஸ் மாநாட்டில் எழுப்பக் கூடாது என மாநாட்டிற்கு முன்பே சீனா இந்தியாவை எச்சரித்தது. இந்நிலையில் பாரத தேசத்தில் பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாத செயல்களை தூண்டிவிடும் லஷ்கர் -இ- தொய்பா, ஜெய்ஷ் -இ- முகமது ஆகியவற்றை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்து சீன பிரிக்ஸ் மாநாடு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது அபாரம். சீனாவின் பல்டிக்கு என்ன காரணம்?
தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளால் சீனாவிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் பல பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு கோடி உய்குர் இஸ்லாமியர்கள் சீனாவில் வசிக்கிறார்கள். இவர்கள் பகுதி ஜின்ஜியாங் மாநிலம். 2008லிருந்து உய்குர் இஸ்லாமியர்கள் தனிநாடு கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
எவ்வாறு பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவோ, அதே போல் சீனாவின் ஜின் ஜியாங் மாநிலத்தில் உள்ள உய்குர் இஸ்லாமியர்களுக்கு ஆயுத பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கும் அல் காயிதா அமைப்பு பாகிஸ்தான் வழியாகவே கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்திற்கு வழங்கி வருகிறது. பாகிஸ்தானுக்கு நண்பனாக இருப்பதால், அந்நாட்டில் பயிற்சி பெறும் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை அடக்குதற்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருக்கும் என சீனா கணக்கிட்டது தவறாக முடிந்துள்ளது.
ஜிங்ஜியாங் மாநிலம் சீனாவிற்கு முக்கியமான பகுதி. அதிக கனிமவளம் நிறைந்த பகுதி. சீனாவின் கனவு திட்டமான One Belt One Roadக்கு முக்கியமான வழி ஜிங்ஜியாங் மாநிலம். அதிக அளவில் உய்குர் முஸ்லிம்கள் கொண்ட பகுதி. பயங்கரவாதத்தை அடக்குவதற்கான சீனா அரசாங்கம் இஸ்லாமியர்கள் மீது பலவித தடைகளை விதித்துள்ளது. ஆனாலும் பல இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளன.
1990, 1997, 2016 ஆகிய வருடங்களில் உரும்சி பகுதியிலும் 2010-ல் அக்சூ என்ற இடத்திலும், 2011-ல் ஹூட்டன், கஷ்கர் பகுதியிலும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த காரணமான இயக்கம் கிழக்கு துர்கிஸ்தான் முஸ்லிம் இயக்கம். ஏன் சீனா கிழக்கு துர்கிஸ்தான் முஸ்லிம் அமைப்பையும் தடைசெய்ய (இ.டி.ஐ.எம்.) முன் வந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். இ.டி.ஐ.எம். என்று அமைப்பை உருவாக்கியவன் வடமேற்கு ஜின்ஜியாங் மாநிலத்தைச் சார்ந்த உய்குர் முஸ்லிம். 1999-ல் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஒரு சந்திப்பில், உஸ்பெக்கிஸ்தான் முஸ்லிம் இயக்கமும் கிழக்கு துர்கிஸ்தான் முஸ்லிம் அமைப்பும் இணைந்து ஜிங்ஜியாங் மாநிலம் உள்ளிட்ட பகுதியுடன், உய்குர் முஸ்லிம்கள் வாழும் துருக்கி, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளை இணைத்து தனி நாடு கோரிக்கையை முன் வைப்பது என்றும் இதற்கு அல்காயிதா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் உறவு ஏற்படுத்தி, பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பை ஒடுக்க சீனா பல முயற்சிகள் மேற்கொண்டது. கிழக்கு துர்கிஸ்தான் முஸ்லிம் அமைப்பு மேற்கூறிய நாடுகளில் உள்ள உய்குர் முஸ்லிம் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்பட்டது. இவர்கள் தான் 2008-ல் சீனாவின் பல நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினார்கள், குறிப்பாக ஷாங்காய் நகரிலும் குன்மிங் நகரிலும் பேரூந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. ஆகவே வெளிநாடுகளின் உதவியில்லாமல் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பை அழிக்க இயலாது என்கின்ற அடிப்படையில் பிரிக்ஸ் மாநாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு தீர்மானத்திற்கு சீனா ஒப்புதல் அளித்தது. இதை விட முக்கியமான காரணம், இந்த அமைப்பிற்கு நிதி உதவி செய்யும் அல்காயிதாவானது, லஷ்கர், ஜெய்ஷ்-இ-முகமது வழியாக நிதி வழங்குகிறது. எனவே சீனா தனது நாட்டில் முஸ்லிம் பயங்கரவாத ஒழிப்பிற்கு இந்தியாவும் துணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தீர்மானத்தை ஆதரித்தது.
சீனா தனது குள்ளநரித்தனத்தை விட்டு விடவில்லை என்பதையும் இந்த பிரிக்ஸ் மாநாடு வெளிப்படுத்தியுள்ளது. எப்படியாவது பாகிஸ்தானை பிரிக்ஸ் அமைப்பில் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே, சீனா ஐந்து நாடுகள் கொண்ட அமைப்பை விரிவாக்க துருக்கி, இந்தோனேஷியா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இந்த கோரிக்கையை பிரிக்ஸ் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டிருந்தால், இதையே சாதகமாகிக் கொண்டு சீனா பாகிஸ்தானையும் கூட்டமைப்பில் இணைந்திருக்கும். சீனாவின் குள்ளநரித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீனாவில் நடந்த மாநாட்டில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுவும் இந்தியாவிற்கு கிடைத்த பெரிய வெற்றி.
********************************
மோடி பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிறகு மியான்மர் நாட்டிலும் மூன்று நாள் தங்கினார். அந்நாட்டு மக்கள் கொடுத்த வரவேற்பு மியான்மர் நாட்டின் ராக்கைன் மாகாணத்தில், கலவரத்தில் ஈடுபட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் விஷயத்தில் மோடி எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்கள், போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவதால், அவர்களை வெளியேற்ற மத்திய அரசு முயலுகிறது. இதே நேரத்தில் மியான்மர் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக, ஐ.நா. சபையின் ஒப்புதல் இல்லாமல் ஊடுருவும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிக்கடி அஸ்ஸாமில் வகுப்பு கலவரங்கள் நடப்பதற்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஒரு முக்கியமான காரணம் என்பதாலும் இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
********************************