பாட்டைத் திறந்தது பண்ணாலே

பாரதியார் இல்லத்தில் அம்மாக்கண்ணு எனும் பெண்மணி வீட்டு வேலைகள் செய்து வந்தார். அவருடைய மகன் தான், பாரதி தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடும் வேணு முதலி. இவன் உடற்பயிற்சிகளில் தேர்ந்தவன். இந்த வேணு முதலியைத் தன் கட்டுரைகளில் பலவிடங்களில் பாரதியார் குறிப்பிடுகிறார். அம்மாக்கண்ணு பாரதியாரிடம் பணம் காசு எதையும் எதிர்பார்த்து வேலை பார்த்தவரல்ல. அவர் மீதிருந்த பாசத்தின் காரணமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். சில நேரங்களில் பாரதியார் மனைவி சம்பளம் கொடுப்பார், அதை பாரதி குடும்பத்திற்கு பணத் தட்டுப்பாடு நேரும்போது அம்மாக்கண்ணு அவர்களுக்கே செலவும் செய்து விடுவார்.

செல்லம்மா பாரதியார் தன் மகள் சகுந்தலாவுடன் பிறந்த வீட்டுக்குக் கடையம் சென்று விட்டார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மாவுக்குத் திருமணம் பேசப்படும் விஷயம் பாரதிக்குத் தெரிவிக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன பாரதி தாடி மீசை வளர்த்துக் கொண்டு ஒழுங்காக உணவு உண்ணாமல், மனம் போனபடி திரிந்து வந்தார். அப்படியொருநாள் இவர் வீடு திரும்பாததால் பலரும் பல இடங்களுக்குச் சென்று தேடினார்கள். இவர் புதுச்சேரி ரயில்

நிலையத்தில் இருப்பதாகச் செய்தியறிந்து இவரைத் தேடிக் கொண்டு அம்மாக்கண்ணு சென்றார். இவரைத் தேடப் புறப்படும் முன்பாக ‘ஐயர் (பாரதி) பசி தாங்கமாட்டாரே… அவர் காணவில்லையென்றால் என்ன செய்வது?  பசியால் வருந்துவாரே’ என்று ஒரு தூக்கில் தயிர் சோறு எடுத்துக்கொண்டு இவரைத் தேடி அம்மாக்கண்ணு செல்கிறார். ரயில் நிலையத்தில் இவரைக் கண்டு முதலில் இந்த உணவை சாப்பிடுங்கள் என்று அவருக்குக் கொடுத்துத் தாயினும் சாலப் பரிந்தூட்டி பசியாற்றுகிறார். அந்தத் தாயின் மீது பாடப்பட்ட ஒரு பாடல் இதோ. பாரதி வீட்டைப் பூட்டிக் கொண்டு எங்கோ வெளியில் போய்விட்டு வந்து வாசல் பூட்டைத் திறக்க முயல்கிறார். சாவி கிடைக்கவில்லை. உடனே அம்மாக்கண்ணு ஓடி வந்து அந்தப் பூட்டைத் தன் கையால் அசைத்துத் திறந்து விடுகிறார். உடனே பாரதி அந்த அம்மையார் மீது ஒரு பாடலைப் பாடி அதற்கு அம்மாக்கண்ணு பாட்டு என்று பெயரிடுகிறார். அது:

பூட்டைத் திறப்பது கையாலே – நல்ல

மனந் திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப

வீட்டைத் திறப்பது பெண்ணாலே.