பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியின் பாடல் ஒவ்வொன்றும் ஜனித்த சரித்திரங்களின் தொகுப்பை மலர்ச் செண்டாக்கி அந்த மகாகவியின் பிறந்தநாள் காணிக்கையாக அவர் திருக்கரத்தில் சமர்ப்பிக்கிறோம். அந்த ஆவேசக் கவிஞனோ அகிலத்துக்கே அதிரடியாக அன்புச் சேதி அறிவிக்கிறான்.
பண்டைய தமிழ்நாட்டில் ஏராளமான தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள் இருந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பெருமையும் புகழும் உண்டு. உலக மறை நூலாம் திருக்குறளை போற்றி வணங்கும் ஒரு நீதிநூலாக இவ்வுலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. திருக்குறள் எழுதியதால் திருவள்ளுவர் போற்றப்படுகிறார். வான்மீகத்தைக் கரைத்துக் குடித்துத் தமிழில் அழியாப் புகழ்வாய்ந்த ராமகாதையை வடித்துக் கொடுத்தார் கம்பர் பெருமான். இப்படியே சிலப்பதிகாரம் இயற்றி பெருமை கொண்ட இளங்கோவடிகள், பாரதம் இயற்றிய வில்லிபுத்தூரார் இப்படி மாபெரும் புலவர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் அந்த வரிசையில் வந்தவர் மகாகவி பாரதியார்.
மேற்சொன்ன புலவர்களைப் போல ஏதோவொரு தலைப்பில் நூலெழுதி பெயர் பெற்றவரல்ல. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தை இலக்கியமாக்கினார். அவர் வாழ்ந்த நாட்களைத் தன் கவிதைகளில் வடித்தார். சமகாலத்தின் கண்ணாடியாக விளங்கியதால் பாரதி போற்றப்படுகிறார். அவர் கவிதை எழுதிய சம்பவங்களுக்குப் பின்புலத்தில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் கவிதை புனையும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு அதன் மூலம் புதிய புதிய கவிதைகளைப் படைத்து வைத்ததனால் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தனியொரு காப்பியத்தைப் படைக்கவில்லை. ஆனாலும் அவருடைய முப்பெருங் காப்பியங்களான, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு இன்றும் உயிர்ப்போடு மக்கள் மத்தியில் நடைபோடுகிறது.
வாழ்ந்த காலத்தை இலக்கியமாக்கினார்.
வாழ்ந்த நாட்களைத்
தன் கவிதைகளில் வடித்தார்.
சமகாலத்தின் கண்ணாடியாக விளங்கியதால் பாரதி போற்றப்படுகிறார்.