அன்பு, பாசம்,காதல் உள்ளிட்ட மன நிலைகளை விளக்கும் இலக்கியங்கள் அக இலக்கியங்கள் எனவும் போர் சமூக கட்டமைப்பு சமூகப்போக்கு உள்ளிட்டவற்றை விளக்கும் இலக்கியங்கள் புற இலக்கியங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலான காலகட்டத்தில் இயற்றப்பட்ட இந்த இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படுகின்றன.இந்த இலக்கியங்களில் வரும் பல்வேறு தகவல்களை வெறும் கற்பனைக் கதைகள் என்றும் தமிழகத்தில் முற்காலத்தில் நாகரிகமடைந்த சமூகம் இல்லை என்றும் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்துள்ள வடிகால் அமைப்பு மற்றும் வடிகட்டும் அமைப்புக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் கி.ஸ்ரீதரன் கூறியதாவது:கீழடி அகழாய்வில் கிடைத்த வடிதட்டு போன்ற அமைப்பை சங்க இலக்கியத்தில் சுருங்கை என அழைக்கப்படுகிறது
பரிபாடல்
இது குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் வாய்க்கால்களில் பொருத்தப்பட்டு நீரை வடிகட்டும் அமைப்பாக செயல்பட்டுள்ளது. நிலத்தின் அடியில் நீண்ட யானையின் துதிக்கை போல் உள்ள குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும் அவற்றில் வடிகட்டும் அமைப்புகள் இருந்ததாகவும் பரிபாடல் குறிப்பிடுகிறது.அதாவது ‘நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து கடுமாகி களிறணத்துக் கை விடு நீர் போலும்’ என அதுவிவரிக்கிறது. இதில் சுருங்கை என்ற சொல் வடிகாலில் பொருத்தப்பட்டுள்ள வடிகட்டியை குறிக்கிறது.
நெடுநெல்வாடை
அதேபோல் அரண்மனையின் நிலாமுற்ற மாடியில் இருந்து மழை நீர் வெளியேற மீன் வடிவ துாம்பு அமைக்கப்பட்டு இருந்ததாக நெடுநெல்வாடை குறிப்பிடுகிறது. துாம்புக்கு அம்பணங்கள் என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் மதுரைக் காஞ்சி சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி உள்ளிட்ட இலக்கியங்களும் சுருங்கை பற்றியும் நீர்வடிகால்கள் பற்றியும் பாடியுள்ளன.இலக்கியங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் சுடுமண் நீர்க் குழாய்கள் கீழடியில் மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை சென்னையின் நங்கநல்லுார் உள்ளிட்ட இடங்களிலும் கிடைத்துள்ளன. அரிக்கமேடு வசவசமுத்திரம் திருக்கோவிலுார் உறையூர் உலகடம் உள்ளிட்ட இடங்களில் செய்த அகழாய்வுகளில் 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சுருங்கை என்னும் வடிகட்டி அமைப்புகள் கிடைத்துள்ளன.தரைக்குக் கீழே நீரை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட வடிகால்கள் படைவீடு கங்கைகொண்ட சோழபுரம் கரூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்துள்ளன.
தொழில்நுட்பம்
பழந்தமிழர்கள் நீர் செல்லும் குழாயின் ஒருமுனையை குறுகலாகவும் மறுமனையை அகலமாகவும் வடிவமைத்து குழாய்களை ஒன்றுக்குள் ஒன்று பொருத்தினர். இவ்வாறான மேம்பட்ட அமைப்பால் இரு குழாய்களை இணைக்க களிமண் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படவில்லை.இவ்வாறு மேம்பட்ட நீர்வடிகால் அமைப்புகள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளால் சங்க இலக்கியங்கள் வெறும் புனைவுகள் மட்டுமல்ல வரலாற்று சான்றுகளாகவும் உள்ளன என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.