பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசை எதிர்த்து 17 கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றுசேர்வதாக ஊடகங்களில் தகவல்கள் வருகின்றன. 1975-ல் நாட்டையே நெருக்கடிநிலை என்னும் தள்ளிய காங்கிரஸ் கட்சியின் பின்னால், நெருக்கடி நிலையால் அவதிப்பட்ட கட்சிகள் சேர்வது காலத்தின் விசித்திரமான கோலம். கொள்கையற்ற மதச்சார்பின்மை அரசியல்வியாதிகளுக்கு வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் தெம்பில்லை. ஆனால், தேசநலனில் அக்கறை கொண்டவர்களுக்கு, அந்த 21 மாத நெருக்கடி நிலையின் கொடூர அனுபவங்களையும், மக்கள் சக்தியால் அதை வென்ற அற்புத நிகழ்வுகளின் நினைவலைகளையும் அசைபோட்டுப் பார்க்க தருணம் வாய்த்திருக்கிறது.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் அவரது சுயநலத்துக்காக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு, 42 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதை எதிர்த்துப் போராடிய ஜனநாயகக் காவலர்களின் பராக்கிரமங்களை இப்போதைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இதழ் அதற்கான ஒரு வாய்ப்பு.
இந்தியாவில் இதுவரை மூன்று முறை தேசிய நெருக்கடி நிலைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன அவற்றில் ஜனநாயகப் படுகொலை என்று வர்ணிக்கப்படுவது, 1975-ல் மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட தேசிய நெருக்கடி நிலைதான்.
அதன் பின்புலத்தில், அதிகாரத்தைத் தக்கவைக்கத் துடித்த இந்திரா காந்தியின் பதவி வெறியே பிரதானமாக இருந்தது. அதை புரிந்துகொள்ள வேண்டுமானால், நெருக்கடி நிலைக்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையை சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும்.
கறுப்பு நாட்களின் துவக்கம்
முதல் பிரதமர் நேருவின் திடீர் மறைவுக்குப் பிறகு, பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியும் மர்மமான முறையில் தாஷ்கண்டில் காலமானபோது, நேருவின் மகளை பிரதமராக்கினால் நாட்டுக்கு நல்லது விளையும் என்று காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கருதினர். ‘சிறியார் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்பதை அவர்கள் அப்போது உணரவில்லை.
ஆட்சிபீடத்தில் ஏறியவுடன் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. பழைய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் ஓரம்கட்டி,தனது அடிவருடிகளை மட்டும் அணுக்கத்தில் வைத்துக்கொண்டு செயல்படும் அவரது எதேச்சதிகாரம் கண்டு மூத்த தலைவர்கள் தனி அணியாக செயல்படத் துவங்கினர். அவர்களின் அதிருப்தி அரசுக்கு எதிரான விமர்சனங்களாக வெளிப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் (1971) இந்தியா பெற்ற மகத்தான வெற்றி, பிரதமர் இந்திரா காந்தியை கிறுகிறுக்கச் செய்தது. அந்த வெற்றிக்கு ராணுவமே காரணம் எனினும், அரசியல்ரீதியாக அதன் பலனை அவர் அறுவடை செய்தார். அந்த வெற்றி மமதையில், ஜனநாயக விரோதச் செயல்களில் காங்கிரஸ் கட்சியினர் (இந்திரா அணியினர்) செயல்படத் துவங்கினர். காங்கிரஸ் கட்சியினரின் ஊழல்கள், இந்திராவின் எதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக பிகாரில் ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய முழுமைப்புரட்சி இயக்கத்துக்கு மக்கள் ஆதரவு குவிந்தது.
இந்நிலையில், 1975 நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற்றதாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இந்திராவுக்கு எதிராக தீர்ப்பளித்தது. 1975 ஜூன் 12-ல் நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா அளித்த அந்தத் தீர்ப்பே, அதிகார மமதையில் இருந்த இந்திராவுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யத் தூண்டிய நிகழ்வு.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட இந்திராவின் மனுவை ஏற்ற அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஜூன் 24-ல் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதித்தார். எனினும், லோக்சபாவில் இந்திரா தனது வாக்குரிமையைப் பயன்படுத்தத் தடை விதித்தார். அவர் பிரதமராகத் தொடர்ந்தாலும் பின்னடைவான சூழல் ஏற்பட்டது. தனது வேறு யாரிடமும் விட்டுத் தரவும் அவர் தயாரில்லை.
அரசு நிர்வாகத்தில் நீதித்துறையின் தலையீடு அதிகரித்து வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டிவந்த பிரதமர் இந்திரா, தனக்கு வந்த நெருக்கடியை தேசத்தின் மீதான நெருக்கடியாக முன்னிறுத்தி, நெருக்கடி நிலையை அறிவித்தார். அவரது பரிந்துரையை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றார் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது. இந்திய ஜனநாயகம் மீது இருண்ட கிரஹண காலம் அறிவிக்கப்பட்ட அந்த நாள்: 1975, ஜூன் 25.
இம்மென்றால் சிறைவாசம்
நெருக்கடிநிலையின்போது, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலிலிருந்து மக்களைக் காக்க இந்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் இந்திரா வானொலியில் முழங்கிவந்தார். ஆனால், அரசியல் சாசனம் அளித்த அடிப்படையான ஆறு உரிமைகளும் எந்தக் கேள்வியுமின்றிப் பறிக்கப்பட்டன.
சமத்துவத்துக்கான உரிமை, சுதந்திர இயக்கத்துக்கான உரிமை, சுரண்டலுக்கு எதிராகப் போராடும் உரிமை, மத சுதந்திர உரிமை, சட்டப்படி தீர்வு காணும் உரிமை ஆகியவை ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள். ஜூன் 25 நள்ளிரவிலிருந்தே அவை அரசால் பறிக்கப்பட்டன. சமூக வாழ்வின் முக்கிய அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்திய சில நிகழ்வுகளை மட்டும் இங்கு காணலாம்:
* நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட உடனேயே, நாடு முழுவதும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், சரண் சிங், அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, அசோக் மேத்தா, ராணி விஜயராஜே சிந்தியா, ராணி காயத்ரி தேவி, ஆச்சார்ய கிருபாளினி, ராஜ்நாராயணன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாளாசாகேப் தேவரஸ் உள்ளிட்டோர் அடுத்த 21 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பிணையில் வெளிவரும் உரிமை மறுக்கப்பட்டது. எந்த விசாரணையும் இன்றி அவர்கள் சிறைவாசம் அனுபவித்தனர்.
* மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிரான மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. முதலில் இதற்கு பலியானது குஜராத் அரசு. அடுத்து வீழ்ந்தது தமிழகத்தில் ஆண்ட கருணாநிதியின் திமுக அரசு. ஆரம்பத்தில் திமுக அரசு இந்திராவை நேரடியாக பகைத்துக் கொள்ளவில்லை என்பதால் உடனடியாகக் கலைக்கப்படவில்லை. எனினும், இந்திராவை எதிர்த்த பல தலைவர்களின் புகலிடமாக தமிழகம் விளங்கியதால், திமுக அரசை இந்திரா கலைக்க உத்தரவிட்டார் (1976 ஜனவரி).
* மத்திய அரசிலேயே இந்திராவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திரசேகர், மோகன் தாரியா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்திராவை பிரதமராக்க முன்னின்று செயல்பட்ட காமராஜரே வீட்டுக்காவல் நிலையை எதிர்கொண்டார். எனது அரசியல் அனுபவத்தில் நான் செய்த பெரும் பிழை இந்திராவை பிரதமராக்கியது தான் என்று அவர் கடைசிக் காலத்தில் புலம்பினார். ஜனநாயகம் புதைக்கப்பட்ட அந்த நாட்களில் தான் அவர் மனம் வெதும்பி உயிரிழந்தார் (1975, அக். 2).
* அரசை எதிர்த்தால் சிறைவாசம். பாராட்டினால் வெகுமதி என்ற நிலையில் சுயநலக்காரர்கள் பலர் ஆட்சிபீடத்தின் ஆதாரத் தூண்களாக மாறினர். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ராயே, இந்திராவுக்கு சாதகமாக செயல்பட்டார். நீதிபதிகள் பலர் மிரட்டப்பட்டனர். அல்லது அவர்களுக்கு மறைமுகமாக பரிசுகள் அளிக்கப்பட்டன. அரசை எதிர்த்து நீதித்துறையின் குரல் எழாதவாறு அரசு திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டது.
* அரசு நிர்வாகமோ, நெருக்கடி நிலை என்ற பூதம் கண்டு மருண்டு போயிருந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எந்தக் கேள்வியுமின்றி அரசின் முறையற்ற ஆணைகளைச் செயல்படுத்தினர். பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்ற முதுமொழி உண்மையாயிற்று. ஊழல்மயமான அதிகாரவர்க்கத்துக்கு முற்றதிகாரம் படைத்த ஆட்சியாளரை எதிர்க்கும் திராணி இல்லாமல் போனது வியப்பில்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் அரசு அலுவலகங்கள் சரியான நேரத்தில் இயங்கியதாக பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் பலரை இப்போதும் நாம் காணலாம். உண்மை என்னவெனில், நேர்மையும் உள உறுதியும் இல்லாத அற்பப் பதர்களால் அரசு நிர்வாகம் நிறைந்திருந்ததும் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் கண்ணிருந்தும் குருடர்களாக அரசு ஊழியர்கள் மாறியதும் தான் அவர்களது மௌனத்துக்கு காரணமாயின. அரசை விமர்சித்த பணியாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டதும் அவர்களது பீதியை உறுதிப்படுத்தியது.
* தேசபக்த இயக்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அரசால் தடை செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலரும் தொண்டர்களும் பல்லாயிரக் கணக்கில் கைதாகினர். மிசா சட்டத்தில் கைதானோரில் பெரும்பகுதினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான். ஜமாஅத் ஏ இஸ்லாமி அமைப்பும் தடை செய்யப்பட்டது. இடதுசாரிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்திராவை ஆதரித்தனர்; மார்க்சிஸ்டுகள் எதிர்த்தனர்.
* கடுமையான செய்தித் தணிக்கை கோலோச்சியது. பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் அனைத்துமே அரசு நியமித்த அதிகாரிகளின் கழுகுக் கண்களில் பட்ட பிறகே வெளிவந்தன. இதற்கு 95 சதவீத பத்திரிகைகள் உடன்பட்டன. அரசு காகித ஒதுக்கீடு, அரசு விளம்பரம் என்ற ஆயுதங்களே பத்திரிகை உரிமையாளர்களை வழிக்குக் கொண்டுவர போதுமானதாக இருந்தது. ராம்நாத் கோயங்காவின் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, சோவின் ‘துக்ளக்’ போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய சில பத்திரிகைகளே நெருக்கடி நிலையை எதிர்த்தன. அரசுத் தனிக்கை செய்யப்பட்ட செய்தி இருந்த இடங்களை காலியாக விட்டும் தலையங்கப் பகுதியை வெற்றிடமாகக் காட்டியும் கோயங்கா அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்தார். விஜயபாரதத்தின் முந்தைய வடிவான ‘தியாகபூமி’ நெருக்கடிநிலையின்போது முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* பத்திரிகை மட்டுமல்ல, நாடகங்களும் திரைப்படங்களும் கூட அரசுத் தணிக்கைக்கு உள்ளாகின. நடிகர் தேவ் ஆனந்தின் திரைப்படங்களுக்கு தூர்தர்ஷனில் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது ஓர் உதாரணம். இந்திராவின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பவராக அப்போதைய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா செயல்பட்டார். தூர்தர்ஷனும் ஆல் இந்தியா ரேடியோவும், அரசின் ஊதுகுழலாகவே மாற்றப்பட்டன. இந்திரா அரசின் இருபது அம்சத் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வதே அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களின் கடமையானது. நாட்டில் நடத்தப்பட்டுவந்த கொடுமைகளை மூடி மறைக்கும் விதமாக அரசின் வெகுவாக விளம்பரப்படுத்தி மக்களை முட்டாளாக்க முயன்றது அரசு.
* குடிசைகளை அகற்றுவதாகக் கூறி அரசு டில்லி சேரிப்பகுதியில் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைகளும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி அரசு மேற்கொண்ட கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கின. இவற்றின் பின்னிருந்து இயக்கினார், இந்திராவின் புதல்வர் சஞ்சய் காந்தி.
மீட்கப்பட்ட ஜனநாயகம்
இவ்வாறாக நாட்டையே சிறைக்குள் தள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து எக்காளமிட்ட இந்திரா காந்தியை, ஜெ.பி. தலைமையிலான மக்கள் இயக்கம் போராடி வென்றது தனியொரு வரலாறு. அதன் பின்புலத்தில் எந்த பிரதிபலனும் பாராமல், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சமர் புரிந்த ஆயிரக் கணக்கான ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்களின் தியாகமும் உறைந்திருந்தது. நெருக்கடி நிலை குறித்து பிற்பாடு விசாரித்த ஷா ஆணையத்தின் அறிக்கை விவரங்களைப் படித்தால், அதன் முழு விவரங்கள் தெரிய வரும்.
ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்தல், சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளை மக்களுக்கு தெரியப்படுத்துதல், இந்திராவின் எதிரிகளை அரசியல்ரீதியாக ஒன்றுபடுத்துதல், தலைமறைவுப் போராட்டம், ரகசிய பத்திரிகைகள் விநியோகம், மக்கள் திரளை வலுப்படுத்துதல், தலைவர்களின் நிகழ்ச்சிகளை திட்டமிடல், சத்தியாக்கிரஹம், உலக நாடுகளில் இந்தியாவின் உண்மை நிலையை வெளிப்படுத்துதல் என பல முகங்களைக் கொண்டதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் பணி அமைந்திருந்தது.
தனிப்பட்ட அகங்காரத்தால் சிதறுண்டு கிடந்த அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்தது சவாலான பணி. ஜனசங்கத் தலைவர் நாணாஜி தேஷ்முக் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஜெ.பி. என்ற தியாகத் திருவுரு முன்னர் அனைவரும் கட்டுப்பட்டனர். அதன் விளைவாக, ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய ஜனசங்கம், பாரதிய லோக்தளம், சோஷலிஸ்ட் கட்சி ஆகிய 4 கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி உருவானது.
அதிகாரம் கண்களை மறைத்த நிலையில் சித்தார்த்த சங்கர் ரே போன்ற அடிவருடிகளின் குழுகானத்தால் தன்னை மறந்திருந்த இந்திராவுக்கு, ஜனநாயக சக்திகளின் தலைமறைவுப் போராட்டம் பெரும் தொல்லையாக இருந்தது. தவிர, உலக நாடுகளும் இந்தியாவில் ஜனநாயகம் கொலை செய்யப்படுவதைக் கண்டிக்கத் துவங்கின. வேறு வழியின்றி புதிய 1977 மார்ச்சில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டார் இந்திரா.
எதிர்க்கட்சிகள் பிரிந்திருந்தால் இந்திரா எண்ணியபடி மீண்டும் அரியணை ஏறி இருப்பார். ஆனால், நெருக்கடி நிலையின் போதே, அவருக்கு எதிராக, இடதுசாரிகள் தவிர்த்த மாபெரும் கூட்டணி உருவாக்கப்பட்டுவிட்டது. ஆர்.எஸ்,.எஸ். உருவாக்கிய லோக சங்கர்ஷ சமிதியின் இடையறாத பணிகளால் மக்கள் உணர்வு பெற்றிருந்தார்கள். அதன் விளைவாக அடுத்து வந்த தேர்தலில் ஜனதா மாபெரும் வெற்றி கண்டது; இந்திரா தனது சொந்தத் தொகுதியான ரேபரேலியிலேயே தோல்வியுற்றார். ஜனதா கட்சியின் அரசு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்தது.
தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-ல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். நாட்டைக் கவிழ்ந்த புகை மண்டலம் விலகியது; ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம்.
வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். அன்றைய பாரதிய ஜனதங்கம், நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. வாஜ்பாய், அத்வானி, நாணாஜி ஆகியோர் இல்லாமல் ஜனதா உருவாகியிருக்க வாய்ப்பில்லை. தங்களை அர்ப்பணித்து ஜனசங்கத் தலைவர்கள் ராஜதந்திரத்துடன் மேற்கொண்ட முயற்சிகளால்தான் ஜனதா ஆட்சி உருவானது. அதன் அடுத்த வடிவு தான் பாரதிய ஜனதா கட்சி (1980). பாஜகவின் 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. எனினும் காங்கிரஸ் போல் அல்லாமல் பாஜகவின் நாளங்களில் ஜனநாயகத்தைக் காக்கும் துடிப்பு பாய்கிறது.
ஆனால், 1975-77-ல் இந்திராவின் எதேச்சதிகாரத்தால் பாதிக்கப்பட்டு, அதற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன? பாரதிய லோக்தளத்தின் நிறுவனர் சரண் சிங்கின் மகன் அஜீத் சிங் காங்கிரஸுடன் குலாவுகிறார். மிசா சட்டத்தில் சிறைப்பட்ட லாலு பிரசாத் யாதவ் தனது ராஷ்ட்ரீய ஜனதாதளத்தை காங்கிரஸின் கூட்டாளி ஆக்கிவிட்டார். ஜெ.பி. இயக்கத்தால் உருவான சோஷலிசத் தலைவர்களான முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதாதளம்) ஆகியோரும் இந்திராவின் பேரன் ராகுலுக்கு கொடி பிடிக்கிறார்கள்.
நெருக்கடி நிலையால் வெகுவாக பாதிக்கப்பட்ட திமுக, பழைய வரலாற்றை மறந்துவிட்டு காங்கிரஸ் துதி பாடுகிறது. இடதுசாரிக் கட்சிகள் பாஜக என்னும் பொது எதிரியை வெல்வதற்காக காங்கிரஸுடன் உறவாடுகின்றன. சரத் பவார், மமதா பானர்ஜி போன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் தலைமையை ஏற்கத் தயாராகிறார்கள். அவர்கள் தங்கள் முன்மாதிரியாக இந்திராவை எதிர்த்த சந்திரசேகரையோ, மோகன் தாரியாவையோ ஏற்றிருந்தால்தான் வியக்க வேண்டும்.
தங்கள் அரசியல் பிழைப்புக்காக மதச்சார்பின்மை என்ற முகமூடியுடன் இந்தக் கட்சிகள் அணிதிரண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கும் வெட்கமில்லை. அதிகாரம் பறிபோன பின் செல்லாக்காசாகி மோடி வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் அக்கட்சிக்கு, தன்னை மீட்கக் கிடைக்கும் கொம்பாக மலைப்பாம்பு கிடைத்தாலும் தவறில்லை என்பதே நிலைப்பாடு. மக்களைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை.
தற்போது இக்கட்சிகள், அனைத்தும், மோடி அரசு எதேச்சதிகாரமாகா செயல்படுவதாகவும் நெருக்கடிநிலையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதாகவும் புரளி பேச துவங்கி இருக்கின்றன. ஊழல் பெருச்சாளிகள் மீதும் மோசடிப் பேர்வழிகள் மீதும் மோடி அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளின் விளைவு அது.
நிதர்சனத்தில், இவர்கள் தான் மோடி என்னும் செயல்வீரரின் ஆழிப்பேரலையில் முடங்கி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்கள் வலியை, மக்களின் மீதான அடக்குமுறையாக சித்தரிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், இவர்களது கபட நாடகங்களும் அரசியல் வியாபாரக் கூட்டணிகளும் விரைவில் பல்லிளிக்கும்; உண்மையே வெல்லும்.
நெருக்கடி நிலையின் கொடுமையான அனுபவங்களை அதிக அளவில் அனுபவித்தவர்கள் மட்டுமல்ல, அதை நீக்கப் போராடி வடுக்களைப் பெற்றவர்களும் சங்கக் குடும்பத்தினர் தான். அதனால் தான் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில் என்றும் சங்கக் குடும்பம் முன்னிற்கும். ஏனெனில், அரசியல் அதிகாரத்தை விட நாட்டுநலன் முக்கியமானது என்பது அவர்களது இதயத்தின் உயிர்மூச்சு.
மிசா சட்டம்
நாடு முழுவதும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 1,10,806 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவோரின் கதி இதுவே என்பது அரசால் அனைவருக்கும் உணர்த்தப்பட்டது. இச்சட்டத்தில் அடைக்கப்பட்ட பலர் சிறையில் கொடும் சித்ரவதையை சந்தித்தனர். அவர்களில் பலர் எந்த எதிர்ப்பும் இன்றிக் கொல்லப்பட்டனர்; பலர் நிரந்தரமாக ஊனமாக்கப்பட்டனர். கேரளத்தை உலுக்கிய ராஜன் கொலை வழக்கு (1976) இதற்கு சிறு உதாரணம். தமிழகத்திலும் திமுக அரசு கலைக்கப்பட்டபிறகு கருணாதிதியின் மகன் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானார். அவரை சிறையில் சித்ரவதை செய்தனர். மற்றொரு திமுக தலைவர் சிட்டிபாபு சிறைக் கொடுமைகள் தாளாமல் உயிரிழந்தார்.
அண்மையில் காலமான இரா. செழியன் அவர்களின்
ஷா கமிஷன் அறிக்கை மறுபதிப்பு
1975-77 நெருக்கடி காலத்தில் அரசாங்கம் இழைத்த அநீதிகளை ஆராய ஜனதா அரசால் ‘ஷா’ கமிஷன் நியமிக்கப்பட்டது. நாடு முழுவதும் எந்தவித விசாரணையும் இல்லாமல் சிறையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1,10,806 பேர். இதைப்பற்றி எல்லாம் நீதிபதி ஜே.சி. ஷா ஆராய்ந்து தனது அறிக்கையை வெளியிட்டார். ஆனால் மீண்டும் இந்திரா காந்தி பதவிக்கு வந்தபிறகு அந்த அறிக்கையின் நகல் எங்கெல்லாம் இருந்ததோ அவற்றை எல்லாம் சேகரித்து கொளுத்தி விட்டார்கள். கடைசியில் விசாரித்த பிறகு இரண்டே பிரதிகள் லண்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்ததாக செய்திகள் வந்தன. அதிர்ஷ்ட வசமாக அதன் ஒரு நகல் என்னிடம் இருந்தது. நான் அதனை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டேன். (விஜயபாரதம் நேர்காணல்: பிப்ரவரி 14, 2014)
தேச நலனில் சமரசத்திற்கு இடமில்லை”
1977 மார்ச் மாத முதல் வாரம். தேர்தலுக்கு இன்னும் இரண்டே வாரங்கள் இருந்தன. மிகவும் மூத்த புலனாவுத்துறை அதிகாரி ஒருவர், வெளியிலிருந்த தலைவர்களை ரகசியமாக சந்திக்க விரும்பினார். இதன்படி சங்கத்தின் ஐந்து மூத்த தலைவர்களை அவர் சந்திக்க ஏற்பாடு செயப்பட்டது. தேர்தல் பிரசாரத்திலிருந்து சங்கத் தொண்டர்களை வாபஸ் பெற்றுவிட்டால் சங்கத்தின் மீதான தடையை நீக்குவது பற்றி பரிசீலனை செயப்படும் என்று அவர் தெரிவித்தார். அவர் சோன்ன வாதங்கள் இவை: சமரசமாகப் போகும் நோக்கத்தோடு அரசே முன்வந்திருக்கிற வேளையில் அதே உணர்வோடு நடந்துகொள்வதே ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு அழகு. ஏற்கனவே கடந்த 21 மாதங்களாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் அவர்களால் தாக்குபிடிக்க முடியும்.
அந்த அதிகாரிக்கு திட்டவட்டமான பதில் கிடைத்தது: ‘இந்த சிக்கலான நேரத்தில் அரசாங்கத்தோடு சமரசமாகப் போவது, தேசத்தைக் காட்டிக் கொடுப்பது போல் ஆகும். வாக்குச்சீட்டு மூலமே இந்த நெருக்கடி தீர வேண்டும் என்று சங்கம் கருதுகிறது. ஒருவேளை தேர்தலில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால், போராட்டத்தை சங்கம் தொடர்ந்து நடத்தத் தயார். சிறையில் உள்ள சங்க ஊழியர்களின் அபாரமாக உள்ளது. வெளியிலும் சங்கம் நடத்துகிற தலைமறைவு இயக்கத்திற்கு அதிகம் அதிகமாக பொதுஜன ஆதரவு கிடைத்து வருகிறது. தங்களுடைய தியாகத்தையும் இன்னல்களையும் வீணடிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவதையும் வெளியிலேயும், உள்ளேயும் இருக்கிற சங்க ஊழியர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். சங்கத்தின் மீதான தடையை நீக்கி அரசு சங்க ஊழியர்களை விடுதலை செயுமானால் அரசின் மீதுள்ள பொதுஜன ஆத்திரம் ஒரு அளவு குறையக்கூடும். அரசு இறங்கி வருவதற்கு ஏதாவது பதில் வேண்டுமென்றால் இதுதான் அந்தப் பதில்’.
‘சங்கம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தேசத்திற்கு நம்பிக்கை துரோகம் செவதற்கு ஒப்பான வகையில் உங்கள் ஆசைகாட்டலுக்கு மசியும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினீர்களா என்ன’ என்றும் அந்த அதிகாரியிடம் கேட்கப்பட்டது. அரசின் முயற்சி தோற்றது, அரசு அதிகாரி புறப்பட்டார். வாசற்படியில் கால் வைத்தவர் திரும்பிப் பார்த்து மெல்லச் சோன்னார், ‘உங்களிடமிருந்து நான் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன். உங்களைப்பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன்’.
எதிர்க்கட்சியினரை பிளவுபடுத்தி மனோதைரியத்தை சிதறடிக்க கடைசி நிமிட முயற்சியாக இந்திரா காந்தி செத தந்திரம் தோல்வி அடைந்தது. அரசியல் சூதாட்டத்திலும் அவர் தோற்றார். நாடு வென்றது.
– ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள் புத்தகத்திலிருந்து