ஹெலிகாப்டர் ஊழல் சிறை செல்வாரா சோனியா காந்தி?

ஏப்ரல் 24 அன்று மாநிலங்களவையில் டாக்டர் சுப்ரமணியன் சாமி எழுப்பிய குற்றச்சாட்டு என்னஹெலிகாப்டர் ஊழல் என்றால் என்னஇந்த ஊழலுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் என்ன சம்பந்தம்இதில் சோனியா காந்தியின் பங்கு என்ன? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கவே இந்த கட்டுரை.

 

மது நாட்டின் குடியரசுத் தலைவர்,  குடியரசு துணைத் தலைவர், பிரதமர், நாட்டின் உயர் பதவிகளை வகிப்பவர்கள் பயணிக்க இந்திய விமானப்படை புதிய தொழில்நுட்பம் கொண்ட அதிவேக ஹெலிகாப்டர்களை வாங்க 1999ம் ஆண்டு முடிவு செய்கின்றது.  உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனங்கள் பங்குபெறும் வகையில் உலகளவிலான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) 2002ம் வருடம் மார்ச் மாதம் வெளியிடப்படுகின்றது.  மொத்தம் 12 ஹெலிகாப்டர்களை ரூ.3,600 கோடி கொடுத்து வாங்குவதற்கான இந்த ஒப்பந்தத்தைப் பெற பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.  இந்த ஒப்பந்தத்தைப் பெற அகஸ்டா வெஸ்ட்லண்ட் ­ ­(Augusta Westland) என்ற நிறுவனமும் போட்டியில் இறங்குகின்றது. இந்த நிறுவனம் இத்தாலியில் இயங்கிவரும் பின்மெக்கானிக்கா (Finmeccanica) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம்.

2002ம் ஆண்டு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி, பல்வேறு தடைகளுக்குப் பின்னர் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்படுகின்றது.  இதற்கிடைப்பட்ட காலத்தில், இந்திய விமானப்படை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் (Special Protection Group) அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் என்று பல்வேறு நிலையில் விவாதங்கள் supra-maniya-swamyநடைபெறுகின்றன.  எந்த ஹெலிகாப்டர் சிறந்தது?” என்று முடிவெடுப்பதில் இவர்கள் அனைவரும் விவாதிப்பதும் அந்த ஹெலிகாப்டர்களை சோதனை செய்வதுமாக எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அகஸ்டா வெஸ்ட்லண்ட் ஹெலிகாப்டர்கள் தான் சிறந்தவை என்று முடிவெடுக்கப்பட்டு, 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகின்றது.  ஒப்பந்தப்படி இதுவரை மூன்று ஹெலிகாப்டர்கள் இந்நிறுவனத்தால் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்படுகின்றது.

அனைத்தும் அமைதியாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் 2013ம் ஆண்டு திடீரென்று புயல் ஒன்று கிளம்புகின்றது.  இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்துவந்த குசெப்பே ஓர்சி (Giuseppe Orsi) என்பவர், அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றார்.  அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால் அகஸ்டா வெஷ்ட்லண்ட் ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையினருக்கு விற்க பின்மெக்கானிக்கா நிறுவனம் இந்தியாவில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது” என்பதுதான்.  மேலும், இந்த லஞ்ச நடவடிக்கையில் சிலர் இடைத்தரகர்களாக செயல்பட்டனர் என்றும் அப்போதைய விமானப்படை தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகியும் அவரது உறவினர்களும் இதில் நேரடியாக லஞ்சம் பெற்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுகின்றது.

இதற்கு முன் இந்தியாவிற்கு  ராணுவத் தளவாடங்களை விற்க லஞ்சம் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது அனைவரின் நினைவிலும் இருக்கும்.  போபோர்ஸ் பீரங்கி ஊழல் என்ற அந்த மாபெரும் ஊழலை கண்டுபிடித்து உலகிற்கு வெளிக்காட்டியது ஸ்வீடன் நாடு.  மேற்கத்திய நாடுகளில் லஞ்சம் வாங்குபவர்களை விட, லஞ்சம் கொடுப்பவர்களைத் தான் அதிகம் தண்டிக்கின்றனர்.  (நம் நாட்டில் இருவரும் தண்டிக்கப்படுவதில்லை என்பது வேறு விஷயம்).  போபோர்ஸ் ஊழலுக்குப் பிறகு அதே போல மற்றொரு ஊழல் ராணுவத்துறையில் நிகழ்ந்துவிட்டதோ என்று அனைவரும் கேள்வி எழுப்பிய சமயம், அப்போதைய காங்கிரஸ் அரசு இத்தாலி நாட்டின் காவல்துறை எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு மத்திய புலனாய்வுத் துறைக்கு (Central Bureau of Investigation – CBI) உத்தரவிடுகின்றது.

விசாரணைக்குப்பின், கிறிஸ்டினா மைக்கேல் என்ற இடைத்தரகர் மூலம் இந்த ஊழல் நிகழ்ந்துள்ளது என்றும், இதில் விமானப்படை தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர்கள், சந்தோஷ் பக்ரோடியா என்ற மத்திய இணை அமைச்சர், அவரது உறவினர்கள், அபிஷேக் வர்மா, அவரது பெண் நண்பர் என பலர்  ஈடுபட்டனர் என்று CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.  மொத்தம் ரூ.360 கோடி லஞ்சமாக பெறப்பட்டது என்றும் அதை கிறிஸ்டினா மைக்கேல் என்ற இடைத்தரகர்தான் கையாண்டார் என்றும் தெரிய வருகின்றது.  இந்த விசாரணையின்போது, மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்த எம்.கே.நாராயணன் (இவர் ஹெலிகாப்டர் வாங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்ட சமயத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தவர்) மற்றும் கோவாவின் ஆளுனராக இருந்த பி.வி. வாஞ்சு (இவர் அந்த சமயம் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவராக பதவி வகித்தவர்) ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.  இந்த விசாரணைக்காக அப்பொழுது காங்கிரஸ் ஆட்சியின் சட்டத்துறை அமைச்சராக இருந்த கபில் சிபில் மறுப்பு தெரிவித்தபோதிலும், குடியரசுத் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று இந்த இரு ஆளுநர்களும் விசாரிக்கப்பட்டனர்.  அதன் காரணமாக இருவரும் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்யவேண்டிய சூழலும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சோனியா காந்தி லஞ்சம் பெற்றாரா?

agasta-westlandஇதற்கிடையில், இத்தாலியின் கீழ் கோர்ட்டில் குசெப்பே ஒர்சிக்கு போலி பில் தயாரித்ததாக குற்றம் நிரூபணம் ஆகி அதற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது.  லஞ்சக் குற்றச்சாட்டு அனைத்தையும் நிரூபிக்க இயலவில்லை என்று கூறி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட பிற இடைத்தரகர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.  இந்த முடிவை எதிர்த்து இத்தாலி நாட்டின் காவல்துறை மேல்முறையீடு செல்கின்றது.  மேல்முறையீட்டின் தீர்ப்பு 2016 ஏப்ரல் மாதம் 7ம் தேதி வெளிவந்து உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.  இதில், கீழ்க் கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்தது மட்டுமல்லாமல், ஒர்சிக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கின்றது.  மேலும், லஞ்சத் தொகைக்கு இணையாக 7.5 மில்லியன் ஈரோ அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதோடு மட்டுமா விட்டது அந்த கோர்ட்?  வழக்கின் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது அரசியல் ஆலோசகர் அஹமது பட்டேல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.  சோனியா காந்தி என்ற பெயர் வரும் இடத்தில் ‘சிக்நோரா காந்தி’ என்று குறிப்பிட்டுள்ளது.  சிக்நோரா என்ற இத்தாலிய வார்த்தைக்கு திருமதி என்று பொருள்.  அதாவது திருமதி காந்தி” என்று குறிப்பிட்டுள்ளது சோனியா காந்தியை குறிப்பிடுவதாகவே பொருள் கொள்ளவேண்டும்.  மேலும், விமானப்படை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு லஞ்சப்பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்றும் இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

டெண்டர் முறையிலேயே முறைகேடு

தகுதி இல்லாத ஒரு நிறுவனம் தான் தனது பொருளை விற்க லஞ்சம் கொடுக்கும்” என்பது நடைமுறை.  அகஸ்டா வெஸ்ட்லண்ட் ஹெலிகாப்டர்கள் நமது வி.ஐ.பி.க்களை ஏற்றிச் செல்ல உகந்தவையா என்ற ரீதியில் தற்பொழுது பல்வேறு கேள்விக்குறிகள் எழுப்பப்படுகின்றன.  முதல்முதலாக டெண்டர் விடப்பட்டபோது, சுயமாக இயந்திரம் தயாரிப்பவர்கள் (Original Equipment Manufacturers) மட்டுமே இந்த டெண்டரில் கலந்துகொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  அகஸ்டா வெஸ்ட்லண்ட் நிறுவனம், சுயமாக இயந்திரம் தயாரிப்பவர்கள் அல்ல என்று தெரியவந்ததும், ராணுவ அமைச்சகம் இந்த கட்டுப்பாட்டை தளர்த்துகின்றது.  அடுத்ததாக, வி.ஐ.பி. ஹெலிகாப்டர்கள் 19,000 அடி உயரம் வரை பறக்கும் சக்தி கொண்டவையாக இருக்கவேண்டும் என்பது ஒரு முக்கிய தகுதி.  ஆனால், அகஸ்டா வெஸ்ட்லண்ட் ஹெலிகாப்டர்கள் 15,000 அடி உயரம் வரை மட்டுமே பறக்கும் சக்தி வாய்ந்தவை.  இந்த தகுதியும் பிற்பாடு தளர்த்தப்பட்டது.  மூன்றாவதாக, தேர்ந்தெடுக்கப்படும் ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, அவற்றின் பறக்கும்சக்தி, செயல்படும் விதம், தொழில்நுட்ப உத்திகள் ஆய்வு செய்யப்படும்.  ஆனால், அகஸ்டா வெஸ்ட்லண்ட் ஹெலிகாப்டர்கள் விஷயத்தில் இந்தத் தகுதியும் தளர்த்தப்பட்டது.  நமது விமானப்படையினரும் அரசு உயர் அதிகாரிகளும் இத்தாலி நாட்டிற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அகஸ்டா வெஸ்ட்லண்ட் ஹெலிகாப்டர்களை ஆய்வு செய்தனர்.  இந்த மூன்று தகுதியின்மைகளையும் மீறி, அகஸ்டா வெஷ்ட்லண்ட் ஹெலிகாப்டர்கள் தான் வேண்டும் என்று முடிவெடுக்க யார் காரணம் என்று தற்பொழுது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

மோடி அரசின் துரித நடவடிக்கைகள்

குற்றம் சாட்டப்பட்டுள்ள பின்மெக்கானிக்கா அகஸ்டா வெஸ்ட்லண்ட் நிறுவனங்களுக்கு உடனடியாக தடை விதித்து 2014 ஜூலை 3  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  மத்திய ராணுவ அமைச்சகத்தின் உத்தரவு எண். 31013/4/2008/டி.விஜ் (தேதி: 3.7.2014) மூலம், இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் வியாபாரத்தை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  லஞ்சம் கொடுக்க இடைத்தரகராக இருந்து செயல்பட்ட கிறிஸ்டினா மைக்கேல் தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகின்றார்.  அவரை நாடு கடத்தி, இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இங்கிலாந்து நாட்டின் அரசுக்கு இன்டர்போல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.  லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகியை நேரில் ஆஜராகுமாறு மத்திய அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

 

ஊழலில் பத்திரிகையாளர்கள் உள்கை?

டெல்லி மாநகரின் முக்கிய ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த இடைத்தரகர் கிறிஸ்டினா மைக்கேல், டெல்லியில் பணிபுரியும் பல பத்திரிகையாளர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் என்றும் அவர்களுக்கு  மதுபான விருந்து, அந்நிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம், விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் மற்றும் சில கேளிக்கை விருந்துகளுக்காக சுமார் 50 கோடி ரூபாய் செலவழித்தார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.  தங்கள் நிறுவனத்தின் மேல் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்றும், தங்களது நிறுவனம்தான் மிகவும் தரமான ஹெலிகாப்டர்களை தயாரித்து வருவதாகவும் தங்களது செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் எழுதவைக்க  இந்த அளவு பெரும்தொகை செலவழித்ததாகத் தெரிய வந்திருப்பதால், டெல்லியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலர் தங்களது தூக்கம் இழந்து தவித்துவருகின்றனர்.

 

தெளிவுபடுத்த வேண்டியது சோனியா  கடமை : அமீத் ஷா                                         

லஞ்சம் வாங்கினார் என்று சோனியா காந்தி மீது இத்தாலி நாட்டின் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, குற்றம் சாட்டிய சுப்பிரமணியன் சாமியின் கேள்விக்கு பதில் அளிக்கவேண்டிய கடமை சோனியா காந்திக்கு உள்ளது.  அதைவிடுத்து, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் கூச்சல் எழுப்புவது, மோடி அரசின் மீது பதில் குற்றச்சாட்டு சுமத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் கண்டித்தக்கது.  காங்கிரஸ் கட்சியின் இத்தகைய நடவடிக்கை, திருடன் ஒருவன் போலிஸ் மீது குற்றம் சாட்டுவதற்கு சமம்” என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமீத் ஷா தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ? சாமி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சியையும் சோனியா காந்தியையும் மிகவும் பரிதாபமான சூழ்நிலைக்கு தள்ளியிருப்பது உண்மைதான்.  இந்த இக்கட்டான சூழலில் இருந்து சோனியா காந்தி மீண்டு வருவாரா? அல்லது இடைத்தரகர் அபிஷேக் வர்மா,  அவரது பெண் நண்பர் சகிதம் திஹார் சிறைக்கு போனது போல இவரும் செல்வாரா? இதுதான் தற்போது டெல்லியின் அதிகார மையங்களில் உலா வரும் ஒரே கேள்வி.