ஸ்வாதி சம்பவம் தரும் பாடம்

சம்பவம் தரும் பாடம்

வெளி வெப்பம் இருக்கலாம்,

வீட்டு நிழல் இருக்கணும்!

 

பட்டப் பகலில் பரபரப்பான ரயில்வே ஸ்டேஷனில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்வாதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சிதான்.

ஸ்வாதியின் பெற்றோர் அவருக்கு நல்ல குணநலன்களைக் கற்றுக்கொடுத்து மிகுந்த பாதுகாப்போடு, மிகச்சிறந்த பெண்ணாக வளர்த்திருக்கிறார்கள் என்பது அவரைப் பற்றி வெளிவந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பெரும்பாலான வீடுகளில் கண்கூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சில செய்கைகள் இந்தக் கட்டுரையை இந்த துயரமான சமயத்தில் எழுதத் தூண்டியது.

இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவக்கூடிய சில டிப்ஸ்:family

ஆண் குழந்தைகள் வளர்ப்பில் அதிக கவனம்: ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் கொஞ்சம் அதிக அக்கறை காட்டவேண்டும். அவர்களுக்கு பெண் உடல்நலம், அவர்களின் மாதாந்திர வலிகள், பிரசவ மறு ஜனனம் இப்படி எல்லா விஷயங்களையும் அவ்வப்போது அம்மாக்கள் தங்கள் வாழ்க்கையில் இருந்தே உதாரணங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அவை பெண்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருந்துவிடக்கூடாது. பெண்களிடம் மரியாதை கொடுக்கும் விதத்தில் அமைய வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் மீதான பார்வையை மாற்ற வேண்டும். பெண்களை புரிந்துகொள்ளப் பழக்க வேண்டும் என்பதைவிட அவர்களைப் பற்றியே அவர்கள் அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும். தான் யார், எப்படி இருக்க வேண்டும். வாழ்க்கையில் என்ன செய்ய இருக்கிறோம், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் யோசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுதல்: பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். அன்றாடம் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் நடக்கின்ற விஷயங்களை பேச்சுவாக்கில் அவர்களாகவே பகிர்ந்து கொள்வதைப்போல சூழலை ஏற்படுத்த வேண்டும். அப்படி அவர்கள் நிகழ்வுகளை பகிரும்போது, சட்டென ஆத்திரமோ, கோபமோ படாமல் டென்ஷன் ஆகாமல் சொல்வதை முழுவதும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதையும் மறைக்காமல் சொல்வார்கள். ஏதேனும் தவறு எனப் பட்டால் அதற்கேற்ப அவர்களிடம் பேசலாம்.

பிரச்சினைகளை பெற்றோரிடம் பகிருங்கள்: படிக்கின்ற மாணவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் சரி தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், முதலில் பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும்.  பெற்றோர்களால் மட்டுமே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சற்று ஆழ்ந்த புரிதல் இருக்கும். எப்படி அதை சரி செய்யலாம் என்று தங்கள் அனுபவத்தில் யோசிப்பார்கள்.

உங்கள் குழந்தைகள் உங்கள் சொத்து: பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், அவர்களை எதுவும் கேட்கக் கூடாது என நினைத்து ஒதுங்கி, அவர்களுக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்து கெடுத்துவிடக் கூடாது. எத்தனை வயதானாலும், அவர்கள் உங்களுக்குக் என் மகன் எங்கே செல்கிறான், என்ன செய்கிறான் என்றே எனக்குத் தெரியாது, வாரத்தில் ஒருநாள்தான் பேசுவேன், பாவம் ஓடா உழைக்கிறான், ஆஃபீஸ் பிழிந்து எடுக்கிறது என்றெல்லாம் சொல்வதை நிறுத்திவிட்டு, பள்ளிக்கு, கல்லூரிக்கு அனுப்பும்போது எத்தனை கவனமாக இருந்தீர்களோ அதைவிட கவனமாக அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். மனதளவில் ஆதரவாக இருந்து, எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்கள் சொத்து.

யாருக்காகவும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்