ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய கிராம விகாஸ் பிரமுக் டாக்டர் தினேஷ், 200க்கும் மேற்பட்ட முன்மாதிரி கிராமங்களை ஸ்வயம்சேவகர்கள் உருவாக்கியது பற்றிய விவரங்களை ஆர்கனைசர் மூத்த செய்தியாளர் பிரமோத் குமாருடன் பகிர்ந்துகொண்டார்.
கிராம மேம்பாட்டுக்காக ‘கிராம உதயமே பாரத உதயம்’ திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கிராமத்தை மேம்படுத்த அக்கறையுடன் எடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கையும் வரவேற்கத்தக்கதே. ஏற்கனவே கிராம மேம்பாட்டு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கொள்கை உருவாக்கத்தில் சேர்த்துக்கொண்டால் அருமையான விளைவுகள் ஏற்படும்.
சுமார் எத்தனை கிராமங்களில் ஸ்வயம்சேவகர்கள் கிராம விகாஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்?
200க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஸ்வயம்சேவகர்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கிராமங்களில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமங்களிலும் அபாரமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த கிராமங்களை ‘பிரபாத் கிராமம்’ என்று குறிப்பிடுகிறோம்.
எத்தனை கிராமங்களில் நல் விளைவுகள் ஏற்பட்டுள்ளன?
சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த கிராமங்களை ‘உதய் கிராமம்’ என்று கூறுகிறோம். மேம்பாட்டுக்காக கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கிராமங்களை ‘கிரண் கிராமம்’ என்று அழைக்கிறோம்.
ஊரக மேம்பாடு தொடர்பான சங்கத்தின் கோட்பாடு என்ன?
கிராம மக்களின் தேவைகள், சூழலுக்கு ஏற்பவும் காலத்துக்கு ஏற்பவும் மாறியுள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கிராம மேம்பாடு அமைய வேண்டும்.
இயற்கைக்கு இணக்கமாகவும் சுற்றுச்சூழலுக்கு சினேகமாகவும் கிராம மேம்பாடு இருக்க வேண்டும். வேளாண்மை, குடிப்பதற்கும் பாசனத்துக்கும் தண்ணீர், உயிரி பன்மயம், வன வளம், எரி சக்தி () மனித சக்தி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற அனைத்து அம்சங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
கிராமங்களை நகரங்களாக மாற்ற விரும்புகிறீர்களா? அல்லது நகர வசதிகள் கிராமங்களில் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?
மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப கிராமங்களில் எல்லா சௌகரியங்களும் கிடைக்க வேண்டும். கிராம் சடக் யோஜனா, கிராம மேம்பாட்டுக்கு பெரும் பங்களித்துள்ளது. வளர்ச்சி என்பது இயற்கையோடு முற்றிலும் இயைந்ததாக இருக்க வேண்டும். ஓர் உதாரணத்தை குறிப்பிடுகிறேன். கோயம்புத்தூரில் ஊருக்குள் காணப்படும் வெப்பத்தை விட மாதா அமிர்தானந்தமயி மடத்தில் 3 டிகிரி குறைவு. ஏனெனில் மாதா அமிர்தானந்தமயி கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியை சோலையாக மாற்றியுள்ளனர். அந்த அளவுக்கு மரங்களை நட்டு வளர்த்துள்ளனர்.
ஸ்வயம்சேகவர்களால் மேம்படுத்தப்பட்டுள்ள 10 முன்னுதாரண கிராமங்களை பட்டியலிடவேண்டும் என்றால் எவற்றையெல்லாம் நீங்கள் குறிப்பிடுவீர்கள்?
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் உள்ள சாந்தகுறிச்சி கிராமம் இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக உள்ளது. இதை சுற்றியுள்ள 10 கிராமங்களும் இவ்வாறே இயங்குகின்றன. பஞ்சகவ்யா பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மத்தியப் பிரதேசம் நரசிங்பூர் மாவட்டத்தில் உள்ள மோஹத் கிராமும் இதே போல இயற்கை விவசாயத்தில் தலைசிறந்து விளங்குகிறது. சுற்றியுள்ள 5 கிராமங்களும் இதை பின்பற்றுகின்றன. மழைநீர் சேகரிப்பு, வீடு தோறும் கழிப்பறை போன்றவற்றையும் இந்த கிராமங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன. மேற்கு உத்தரப்பிரதேசம் சகரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிரக்பூர் கிராமம், போதை உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து மக்களை மீட்டெடுத்துள்ளது.
உத்தராகண்டில் உள்ள மனேரி ஒன்றியத்தில் 60 கிராமங்கள் உள்ளன. பல்வேறு திட்டங்களும் இங்கு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள தேவ்கர் ஒரு வனவாசி கிராமம். தற்சார்புக்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது. சுற்றியுள்ள 25 கிராமங்களும் இதை பின்பற்ற முற்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டம் மன்பூரா கிராமத்தில் இயற்கை விவசாயம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றியுள்ள 20 கிராமங்களும் இவ்வாறே இயங்குகின்றன.
பீகார் மாநிலம் காஜிபூர் மாவட்டம் மாந்துவா கிராமத்தில் வேலையற்றவர்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சிறந்த முறையில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயில்வேயிலும் ராணுவத்திலும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
மேற்கு வங்காளம் தாரகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூர் கிராமத்தில் சிறந்த முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
தென் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. இயற்கை விவசாயத்தில் கர்நாடகா சிறந்து விளங்குகிறது. மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள தாகிவ்கந்த் மாவட்டத்தில் பயோகேஸ் ஏற்பாடு சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கங்தேவ்பள்ளி மாவட்டத்தில் உள்ள மக்கள் தண்ணீரை வெகு சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கடமு கிராமத்தில் சிறார் பண்பாட்டு மையம், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களையெல்லாம் ஈர்த்துள்ளது.
எதிர்காலத்தில் இதை விரிவாக்க திட்டம் எதையேனும் வைத்துள்ளீர்களா?
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு முன்மாதிரி கிராமத்தையாவது ஸ்வயம்சேவகர்கள் உருவாக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. தீன்தயாள் தாம் (மதுரா), தீனதயாள் ஆராய்ச்சி நிறுவனம், ஆந்திராவில் உள்ள கிராம பாரதி போன்ற அமைப்புகளும் இப்பணியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளன. காயத்ரி பரிவார், ஆரிய சமாஜ், ஸ்வாத்யாய பரிவார் போன்ற ஆன்மீக அமைப்புகளும் கிராம மேம்பாட்டுக்காக அரும்பணி ஆற்றி வருகின்றன.