‘வயதான காலத்தில், வாரிசுகள் கவனிக்க மறுத்தால், அவர்களுக்கு தானமாக வழங்கிய சொத்தை மீட்க முடியும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, சிங்கமணி நயினார் என்பவரின் முதல் மனைவி ஞானமதி அம்மாளுக்கு, குழந்தை இல்லாததால், இரண்டாவதாக வசுந்தரையம்மாள் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு, சரோஜாபாய் என்ற மகள் உள்ளார்.
கருத்து வேறுபாடு
கணவரின் மறைவுக்கு பின், சகோதரியின் மகள் சுகுணாபாய் வீட்டில், ஞானமதி அம்மாள் சிறிது காலம் இருந்தார். கடைசி வரை காப்பாற்றுவார் எனக் கருதி, சொத்துக்களை சுகுணாபாய்க்கு எழுதி வைத்தார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சரோஜாபாய் வீட்டுக்கு, ஞானமதி அம்மாள் வந்தார். சுகுணாபாய்க்கு, தானமாக வழங்கியதை ரத்து செய்தார்.
அதைத் தொடர்ந்து, சொத்துக்களை சரோஜாபாய் பெயருக்கு எழுதினார். இதை எதிர்த்து, செஞ்சி நீதிமன்றத்தில், சுகுணாபாய் வழக்கு தொடுத்தார்; வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ‘சரோஜாபாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்தது செல்லாது’ என, விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சரோஜாபாய் மனு தாக்கல் செய்தார்.
பத்திரம் ரத்து
மனுவை விசாரித்த, நீதிபதி டீக்காராமன் உத்தரவு:தன்னை பராமரிக்கவில்லை என்பதால், தன்னிச்சையாக முடிவெடுத்து, சகோதரி மகள் சுகுணாபாய் ஒப்புதல் பெறாமல், ‘செட்டில்மென்ட்’ பத்திரத்தை, ஞானமதி அம்மாள் ரத்து செய்துள்ளார். தன்னிச்சையாக பத்திரத்தை ரத்து செய்வதற்கு, சட்டப்படி அனுமதியில்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.எனவே, விழுப்புரம் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட தேவையில்லை; உறுதி செய்யப்படுகிறது. இம்மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல சட்டத்தின்படி, செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரத்தை ரத்து செய்ய, வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு, வருவாய் கோட்ட அதிகாரிக்கு, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.வயதான காலத்தில் பெற்றோரை, வாரிசுகள் மற்றும் உறவினர்கள் ஏமாற்றினால், செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய, சட்டத்தில் வகை செய்யப்பட்டிருப்பது குறித்து, சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது குறித்த சட்ட உதவியை, மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை, சட்டப் பணிகள் ஆணையம் எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.