ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, மூன்றுவேளை உண்பவன் ரோகி என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியுள்ளது. நுகர்வு என்பது அதிகமானதாகவோ அல்லது குறைவானதாகவோ இருக்கக் கூடாது. சரியான அளவில் நுகர்வு இருக்க வேண்டும் என்பதைத்தான் நம் முன்னோர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்சின் தலைநகரான பாரிசில் அண்மையில் நடைபெற்ற பருவநிலை மாறுதல் தொடர்பான உச்சிமாநாட்டில் புவி சூடேற்றத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கப்பட்டது. சில முக்கிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கவேண்டும் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.
புவி சூடேற்றத்தை கட்டுப்படுத்த தவறினால் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு புவியே முற்றிலுமாக அழிந்துவிடும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புவி சூடேற்றத்தை என்று வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. இதை தவறு என்று கூறமுடியாது. ஆனால் வளர்ந்த நாடுகள் தங்களை முன்னுதாரணமாக அமைத்துக்கொண்டால்தான் வளரும் நாடுகளுக்கு வழங்கும் அறிவுரை இருக்க முடியும்.
கரியமில வாயு வெளியேற்றம், மீத்தேன் வாயு வெளியேற்றம் போன்றவற்றால் புவியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் பல பகுதிகள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.
புவி சூடேற்றத்துக்கு மிகை நுகர்வு பிரதான காரணம் என்றால் மிகை அல்ல. ஆனால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்பவர்கள், அடித்தளத்தில் வாழும் ஏழை எளிய மக்களே.
மகாத்மா காந்தி கூறியதைப்போல மனிதர்களின் தேவைக்கு ஏற்ப உலகில் வளங்கள் உள்ளன. ஆனால் மனிதர்களின் பேராசைக்கு ஈடுகொடுக்கும் வகையில் உலகில் வளங்கள் இல்லை. எனவே வரைமுறையுடன் கூடிய நுகர்வுதான் நிலையானது, விவேகமானது, விரும்பத்தக்கது.
அடித்தளத்தில் உள்ள 50 சதவீத மக்களில் ஒருவர் சராசரியாக 1.57 டன் கார்பன்டை ஆக்ஸைடை ஆண்டுதோறும் வெளியேற்றுகிறார். ஆனால் அதே நேரத்தில் உச்சத்தில் உள்ள 10 சதவீத மக்களில் ஒருவர் சராசரியாக 17.6 டன் கார்பன்டை ஆக்ஸைடை வருடம் தோறும் வெளியேற்றுகிறார். மிகை நுகர்வோருக்கும் அடித்தள மக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஏறத்தாழ 11 மடங்காகும். இதை இன்னும் நுட்பமாக நோக்கினால் மிகமிக அடித்தளத்தில் உள்ள 10 சதவீதத்தினருக்கும் மிகமிக உயர்நிலையில் உள்ள 10 சதவீதத்தினருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் 60 சதவீதத்துக்கும் அதிகம் என்று வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் அடித்தளத்தில் உள்ளவர்கள் வெளியேற்றும் கார்பன்டை ஆக்ஸைடைவிட இந்தியாவில் வசதிபடைத்தவர்கள் வெளியேற்றும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு குறைவு. அமெரிக்கர்கள் 8.57 டன் கரியமில வாயுவை வெளியேற்றும் வேளையில் இந்தியர்கள் 2 டன் கரியமிலவாயுவை வெளியேற்றுகிறார்கள். அடித்தள மக்களை கரித்துக்கொட்டுவதை நிறுத்திக்கொண்டு, வசதி படைத்த மக்கள் மிகை நுகர்வை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.