ரக்ஷாபந்தன் ஏன்?
நண்பர்கள் தினம், அன்னையர் தினம், காதலர் தினம்… இதெல்லாமே மேற்கத்திய நாட்டின் கலாச்சாரங்கள். நமக்கே சொந்தமாக, எந்த நாட்டிலுமே இல்லாத அண்ணன் தங்கைக்கு இடையேயான சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ஒரே தினம் ரக்ஷாபந்தன் திருநாளாகும்.
ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்று ஆவணி அவிட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு சகோதரி தனது சகோதரனின் கையில் ராக்கியை அணிவித்து, நெற்றியில் குங்குமத் திலகமிட்டு இனிப்புகளை வழங்குவாள். சகோதரன் தனது பங்காக பரிசாகவோ, பணமாகவோ அளிப்பதுண்டு. சொந்த சகோதரன் இல்லாவிட்டால் கூட தெரிந்த வீட்டுப் பிள்ளைகளைச் சகோதரர்களாகப் பாவித்து ரக்ஷை கட்டுவது நமது பாரம்பரிய பண்பாடு. ரக்ஷை அணிவிப்பது தன் சகோதரன் தன்னை என்றென்றும் காக்க உறுதி பூணும் கங்கணமாக இருக்க வேண்டும் என்று சகோதரிகள் வேண்டிக் கொள்வார்கள்.
ரக்ஷையின் மகிமை
ஒருமுறை யுதிஷ்டிரர் கண்ணபிரானிடம் தன்னைத் தாக்கவரும் தீய சக்திகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறார். கண்ணபிரான் அவரிடத்தில் ‘ரக்ஷாபந்தன்’ விரதத்தை அனுஷ்டிக்கக் கூறுகிறார். ரக்ஷையின் மகிமையைக் காட்ட ஒரு நிகழ்ச்சி பற்றிக் கூறுகிறார்.
அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடந்து தேவேந்திரனிடமிருந்து இந்திர லோகத்தைப் பறித்துக்கொண்டு அவனைக் கண்காணாத இடத்துக்கு அனுப்பி விடுகிறார்கள் அசுரர்கள். தோல்வி கண்ட இந்திரன், தனது குருவிடம் இதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று கேட்கிறான்.
அவரது குரு படையெடுத்துச் செல்ல நல்ல முகூர்த்தமான ஆவணி மாத பௌர்ணமி (ரக்ஷாபந்தன் நாள்) நாளைக் குறித்துக் கொடுத்து அவனது வலது கரத்தில் ரக்ஷை அணிவித்து வெற்றி பெற வாழ்த்தி அனுப்புகின்றார். அதன் பின்னர் நடந்த போரில் இந்திரன் வெற்றி பெற்று, தேவலோகத்தை மீண்டும் பெறுகிறான்.
திரௌபதி கட்டிய ரக்ஷை
ஒரு போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த ரத்தத்தைத் தடுப்பதற்காக பாண்டவர்களின் மனைவி திரௌபதி தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினாள். பகவான் இதையே திரௌபதி தனக்குக் கட்டிய ரக்ஷாபந்தன் கயிறாக ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வு கிருஷ்ண பரமாத்மாவின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக் கொண்டார். அதனால் தான், கௌரவர்களின் சபையில் திரௌபதியை அவமானப்படுத்திய நேரத்தில், அங்கே திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார்.
டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் (ராஜஸ்தான்) மீது படையெடுத்து வந்தபோது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பி, தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதாகச் சரித்திரச் சான்றுகள் உள்ளன.
அலெக்ஸாண்டரை காப்பாற்றிய ராக்கி
மிலேச்சர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்த காலங்களில் அவர்களிடமிருந்து தங்கள் மானத்தைக் காத்துக்கொள்ள, ஹிந்துப் பெண்கள் ஆடவர்கள் கைகளில் இந்த ராக்கியைக் கட்டி தங்கள் கற்பைக் காப்பாற்றித் தர உத்தரவாதம் பெறும் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வந்தது.
அலெக்ஸாண்டர் நமது நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது ஜீலம் நதிக்கரையில் நமது மன்னன் புருஷோத்தமன் எதிர்த்துப் போரிட்டான். பேராற்றலைக் கேள்விப்பட்ட அலெக்ஸாண்டரின் மனைவி, தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி ஹிந்து மரபுப்படி புருஷோத்தமனுக்கு ராக்கி அனுப்பி வைத்தாள்.
போர்க்களத்தில் அலெக்ஸாண்டரைக் கொல்ல, உருவிய வாளை உயரத் தூக்கியபோது தனது கையில் இருந்த ராக்கியைப் பார்த்து, அலெக்ஸாண்டரைக் கொல்லாமல் விட்டு விடுகிறான் என்று வரலாற்றில் ஒரு உதாரணம் உள்ளது.
சகோதரனுக்கு ரக்ஷாபந்தன் பரிசு
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் மனீஷ் பேகால். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகன் அனுஜ்(14), அப்லாஸ்டிக் அனீமியா” அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனது எலும்புகளில் ரத்த செல்கள் போதிய அளவுக்கு உற்பத்தியாகாமல் தடைப்பட்டுள்ளது. மேலும் இந்நோயினால் ஏற்படும் ரத்தப் போக்கும் எளிதில் நிற்காது. ஜலதோஷம் ஏற்பட்டாலோ, மூக்கில் லேசான ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ மிக ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். இந்த அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்ட அனுஜை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய 20 லட்சம் ரூபாய் தேவை என்று சாதாரண மோட்டார் மெக்கானிக்கான அனுஜின் தந்தை, தனது மகனை அந்தக் கொடிய நோயிலிருந்து காப்பாற்றுவதற்காக, பல்வேறு தரப்பினரிடமும் உதவி கோரி வந்தார்.
இந்நிலையில், அனுஜின் இளைய சகோதரிகள் ஸ்ரீசிதி (13), முஸ்கான் (9) ஆகிய இருவரும் பள்ளி முடிந்ததும், கான்பூரில் ஜன நடமாட்டம் உள்ள பகுதியில் உட்கார்ந்து கொண்டு ‘எனது சகோதரனைக் காப்பாற்றுங்கள்’ என ஒரு போர்டு வைத்து விட்டு வருவோர், போவோர்க்கு ஷூ பாலீஷ் போட்டு பணம் திரட்டி வருகின்றனர். இதுவே தங்கள் சகோதரனுக்கு தங்களின் ‘ரக்ஷாபந்தன் பரிசு’ என பாடுபட்டு வருகிறார்கள்.
ஆர்எஸ்எஸ்ஸில் ரக்ஷாபந்தன் விழா
ஆர்எஸ்எஸ். ஆண்டுதோறும் நடத்தி வருகின்ற 6 விழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ஆர்எஸ்எஸ் ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் அமைப்பு. ஹிந்துக்கள் ஜாதி, மொழி, மாநிலம், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு குடும்பமாக வாழவேண்டும் என்ற உணர்வை உருவாக்கி வருகிறது. ஆர்எஸ்எஸ் தீண்டாமையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆர்எஸ்எஸ்ஸின் கிளைகளில் ரக்ஷாபந்தன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தங்களுக்குள் ரக்ஷையைக் கட்டுவதன் மூலம் தாங்கள் அனைவரும் ஒன்றே என்ற உணர்வைப் பெற்று வருகிறார்கள்.
ரக்ஷை என்றால் காப்பு என்று பொருளாகும். இந்த நாளில், இந்த ராக்கியைக் கைகளில் கட்டிக் கொண்டு பாரதம் காப்போம்” என்ற சங்கல்பத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.
புனித பொன்னூல் இழை இழை தோறும்
பாரத சரிதம் பேசுது கேள்!
அன்னையின் மானம் காத்திட வேண்டி
ஆயிரமாயிரம் பலிதானம்
சபதமெடுப்போம் வீரர் நாமும்
பாரத ஒருமை காத்திடவே