ஸ்ரீராம நவமி – சிறப்பென்ன?
– சி. கணபதி, ராமநாதபுரம்
நவமி திதி – ஸ்ரீராமர் அவதாரம் செய்த நாள். இந்த ஆண்டு சித்திரை இரண்டாம் நாள் ஏப்ரல் 15, 2016 அன்று வருகிறது. அன்று அவரது பட்டாபிஷேகப் படத்தை வைத்து பூஜை செய்வது நல்லது. ‘ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம’ என்ற ராம மந்திரத்தை குறைந்தது 108 முறைகள் சொல்லி வழிபடவும்.
மனிதனுக்கு தெய்வ பக்தி அவசியமா?
– பெ. குப்புசாமி ஆசாரி, உளுந்தூர்பேட்டை
காசிக்கு சென்ற ஒருவர் அங்குள்ள கங்கையில் நீராடாமல் வந்தால் அது கங்கைக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஒரு மனிதனுக்குத் தெய்வபக்தி இல்லையென்றால் கடவுளுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.
நாம் சாப்பிடும் உணவு நம் மனதைப் பாதிக்குமா?
– கி. சந்தானம், திருத்தணி
பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும்போது தர்மரிடம், எவர் தவறு செய்தாலும் நடுநிலையோடு கண்டித்தல் அவசியம்” என்கிறார். இதைக் கேட்ட பீமன், இந்த எண்ணம் திரௌபதியை துகில் உரித்தபோது தங்களுக்கு எங்கே போயிற்று?” என்று கேட்டார். நான் அப்போது தங்களுக்கு துரியோதனன் உணவை உண்டு வளர்ந்திருந்தேனே” என்றார்.
* சில நேரங்களில் மனமே நமக்கு குருவாக அமைகிறது” என்பதன் பொருள் என்ன?
– வி.எம். கேசவன், நாட்டறம்பள்ளி
ஒவ்வொருவருக்கும் மனசாட்சி இருக்கிறது. இதுவே உண்மையில் இறைவனின் குரல். ஒருவன் ஒரு தீயச் செயலைச் செய்யும்முன்பு அவனது உள்மனது, இதை நீ செய்யாதே!” என்று எச்சரிக்கைத் தருகிறது. அதையும் மீறி சிலர் அதில் ஈடுபடும்போது சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். பிரச்சனைகள் சூழ்ந்துள்ள சந்தர்ப்பங்களில் இதைச் செய்… இதுதான் சரியான வழி…” என்று நமது அந்தராத்மாவே வழிகாட்டும்.
மக்கள் நல முன்னணி, தேமுதிக அணி (விஜயகாந்த்) வெற்றி வாய்ப்பு?
– மணி. பாலகுமார், தக்கலை
சுதீஷ் ஒரு கூட்டத்தில் முதல்வர் விஜயகாந்த், துணை முதல்வர் வை.கோ, கல்வி திருமாவுக்கு, நிதி – மார்க்சிஸ்ட், உள்துறை – இந்திய கம்யூனிஸ்டுக்குக் என ஒரு உத்தேச அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார். இது ரொம்ப ஓவரா தெரியுது…! கனவு காண வேண்டும் என டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.
தமிழக தேர்தல் பற்றி வரும் கருத்துக் கணிப்புகள் பற்றி?
– தா. சின்னசாமி கவுண்டர், திருப்பூர்
பணம் பாதாளம் வரை பாயும். எல்லாமே டுபாக்கூர்.
* தமிழக முதல்வரை சந்திக்க இயலவில்லை என்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றச்சாட்டுப் பற்றி?
– ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி
உண்மையைத்தானே சொன்னார். முதல்வரை, அவரின் அமைச்சர்களோ, கட்சிக்காரர்களோ நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியாது என்பது உலமறிந்த விஷயம் தானே…!
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.