மண்மூடிப் போகட்டும்
மொழிக் காழ்ப்பு அரசியல்!
வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு பள்ளிகள் (சிபிஎஸ்இ), கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதத்தை கற்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி, வைகோ, ராம்தாஸ், வாசன் ஆகியோர் சம்ஸ்கிருதத்தை திணிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்களின் எதிர்ப்பு நியாயம்தானா?
சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுப்பதற்காகவே நமது நாட்டில் 15 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மேலும் 150 பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் சம்ஸ்கிருதம் கற்று வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள 100 பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதத்தில் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.
சின்னஞ்சிறு பருவத்திலேயே சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுத்தால் பிறகு மழலைகளுக்கு எந்த மொழியும் கற்றுக்கொள்ள எளிமையாக இருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்த அமெரிக்க கல்வியியலாளர்கள் லிங்கன் பெயர்கொண்ட பள்ளியில் சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் அரசியல் சுயநலத்துக்காக ஹிந்தி, சம்ஸ்கிருத எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள். தமிழ்… தமிழ்… என்று மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்கும் இந்த தலைவர்களின் வாரிசுகள் யாராவது தமிழ் மொழி வழி கல்வி கற்று வருகிறார்களா?
தங்களது பேரன், பேத்திகளை ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்த்து, அவர்களை ஹிந்தியில் படிக்க வைக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் நம்ம குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஹிந்தி கற்றுக்கொள்ள வாய்ப்பை தட்டிப் பறிக்கிறார்கள்.
ஹிந்தி, சம்ஸ்கிருதம் படிக்கத் தவறியதால் ஒரு தலைமுறையே பாதிக்கப்பட்டது. இனிமேலும் இது தொடர அனுமதிக்கக் கூடாது. இந்த பிரிவினைவாத, சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளுக்கு யார் என்ன மொழி கற்க வேண்டும் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய யோக்கியதை கிடையாது. தமிழக மக்கள் ஹிந்தியில் வஞ்சிக்கப்பட்டு சுதாரித்துக் கொண்டு விட்டதால் இனி மொழிக் காழ்ப்பு அரசியல் எடுபடாது.