மக்கள் சேவையில் மகத்தான செயலி(ல்)கள்

பாரத அரசு 11 பெரிய செயலிகளை (apps) பொதுமக்கள் உபயோகத்திற்காக வெளியிட்டுள்ளது. பொதுவாக அரசு இயந்திரம் வேகமாக செயல்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. இந்திய மக்கள் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்த்த காரணத்தினால் இதுபோன்ற தொழில் நுட்பத் தேவையை நமது மொபைல் தொலைபேசி மூலமே பதிவிறக்கி தேவையான செய்திகளை அறியச் செய்கிறது அரசு.

MyGov App:

குடிமக்கள் நேரடியாக அரசு செலுத்துவதில் பங்குகொள்ள உதவுகிறது –MyGov App:. மத்திய மந்திரிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நமது கருத்துக்கள், பரிந்துரைகளைத் தெரிவிக்க உதவுகிறது.

நரேந்திர மோடி App:

இதன் மூலம் பிரதமரிடம் இருந்து நேரடியாக செய்திகள், இ-மெயில்களைப் பெறலாம். ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். பிரதமரை நேரில் சந்தித்து ஆலோசனை கூறலாம். அரசு என்ன செய்ய முனைகிறது, என்ன சாதித்திருக்கிறது, சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கான அங்கீகாரத்திற்காகப் பிரதமர் என்ன செயல்பாடுகளில் இறங்குகிறார் என்பதை விரிவாகக் காணலாம்.

RTI India App:

தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டி அங்கு இங்கு என அலையவோ தேடவோ தேவையில்லை. உங்கள் தொலைபேசி மூலமே நீங்களே படங்களை, வீடியோவை ஏற்றலாம். RTI ஆர்வலர்களைத் தொடர்பு கொள்ளலாம். அது தொடர்பான கட்டுரைகளையும் வாசித்து அறியலாம்.

IRCTC App:

ரயில் டிக்கெட் சம்பந்தமான அனைத்து செயல்பாடுகளும் இந்த தொழில்நுட்பத்தால் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நொடியில் லாக் இன் செய்து, ரயிலைத் தேடி, டிக்கெட் உறுதி செய்து, சரிபார்த்து, வேண்டாமெனில் கேன்சல் செய்து, புதிதாக சேர்ந்தவர்கள் பட்டியலில் சரி பார்த்து, நாம் சமீபத்தில் பயணிக்கப் போவது பற்றி அறிவுறுத்தல்களைப் பெறவும் இது மாபெரும் வசதியை பயணிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

வெளியுறவுத்     துறைக்கான MEA India App:

இத்துறையின் மனித வளத்தோடு, குடிமக்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யாவற்றையும்  இதில் காணலாம். அன்றாட செயல்பாடுகள், விஷுவல்கள், க்ராஃபிக்ஸ்கள் என அசத்துகிறது.

Incredible India App:

இந்தியர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டவருக்கும் உதவுகிறது இந்த வண்ணமயமான App. உங்கள் அருகில் உள்ள சுற்றுப்பயண வழிகாட்டிகள், சாகச டூர்களை ஆபரேட் செய்பவர்கள், வசதியான தங்கும் விடுதிகள், போக வேண்டிய இடத்தில் பார்த்து ரசிக்க உள்ள இடங்கள் பற்றின தகவல்கள் என அசத்துகிறது இந்த App.

– பூமாகுமாரி