நள வருஷம் (1916ம் ஆண்டு) கார்த்திகை மாதம் 8ம் தேதி இரவு புதுச்சேரியில் வீசிய கடுமையான புயல்காற்றில் வீடுகள் தகர்ந்தன, மரங்கள் விழுந்தன, குடிசைகள் எல்லாம் நீரில் மூழ்கின. அந்த கடுமையான புயல் வீசிய மறுநாள் வ.வெ.சு.ஐயரும் பாரதியாரும் குடிசை வாழ் மக்களுக்கு உதவிகளைச் செய்தனர்.
அந்தப் புயல் வீசுவதற்கு முந்தைய தினம் தான் பாரதியார் முன்பிருந்த பழைய வீட்டிலிருந்து எதிரில் இருந்த இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தார். மழையும் காற்றும் புயலும் மிகக் கடுமையாக வீசிக் கொண்டிருந்தபோது அவர் மனதில் ஓர் எண்ணம். நேற்று இருந்த அந்த பழைய வீடு இன்று புயலில் இடிந்து விழுகிறது. அடடா! அந்த வீட்டில் நாம் இருந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருப்போம் எனும் எண்ணம் அவர் மனதில் தோன்றி ஒரு பாட்டாக உருவாகிறது.
புயலின் கடுமையைக் கண்டு அவர் பாடிய பாடல். இது 27-11-1916ம் ஆண்டு சுதேசமித்திரனில் வெளியானது. புயல் காற்று என்பது அதன் தலைப்பு.
தஞ்சை வெ. கோபாலன்
மனைவி சொல்கிறாள்
காற்ற டிக்குது கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே
தூற்றல் கதவு சாளரம் எல்லாம்
தொளைத் தடிக்குது கூடத்திலே – மழை
தொளைத் தடிக்குது பள்ளியிலே.
கணவன் சொல்கிறான்
வானம் சினந்தது வையம் நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே
தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
தேவி அருள் செய்ய வேண்டுகின்றோம்.