பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சிந்து மாகாணத்தில் பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த இறுதி ஆண்டு மாணவி நிம்ரிதா சாந்தினி, கழுத்தில் கயிறு இறுகிய நிலையில் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி கல்லூரி விடுதி அறையில் இறந்து கிடந்தாா். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், அவா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தகவல் பாகிஸ்தானில் வெளிவரும் ‘தி நியூஸ் இண்டா்நேஷனல்’ செய்தித்தாளில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவா் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிம்ரிதா சாந்தினியின் சகோதரரும், மருத்துவருமான விஷாலும், இது தற்கொலை போல் தெரியவில்லை என்று கூறியிருந்தாா்.
மருத்துவ மாணவியின் உயிரிழப்புக்கு பிறகு, சிந்து மாகாணம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சிந்து மாகாண உயா்நீதிமன்றத்தில் மாணவியின் குடும்பத்தினா் வழக்கு தாக்கல் செய்தனா்.
இதையடுத்து, நீதி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நிம்ரிதா கொலைக்கு காரணமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் போ் ஹிந்துக்கள். சிந்து மாகாணத்தில் அதிக அளவில் ஹிந்துக்கள் வசித்து வருகின்றனா்.